Published:Updated:

மொபைலில் நிர்வாணப் படம்... அல்லாடும் அபலை பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மொபைலில் நிர்வாணப் படம்... அல்லாடும் அபலை பெண்!
மொபைலில் நிர்வாணப் படம்... அல்லாடும் அபலை பெண்!

ஓராண்டாக நீதி கேட்டு அலையும் அவலம்

பிரீமியம் ஸ்டோரி

டலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக இளைஞர் ஒருவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். தற்போது அவர் மீண்டும் மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நம்மிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் நகரில் நீதி கேட்டுக் கடந்த ஓர் ஆண்டாக அலைந்து வருகிறார்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர். அவர்களைச் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நம்மிடம் பேசிய அந்தப் பெண்ணின் மைத்துனர், “நாங்கள் இந்த ஊர்ல அம்பது வருஷமா இருக்கோம். யார்கிட்டயும் எந்த வம்புக்கும் போனதில்லை.என் தம்பி மனைவி, பொதுநலம் சார்ந்த குழுவுல இருக்காங்க. அங்க வர்ற சாமிநாதன் என்பவர், ஒருதடவை, ‘போன்ல பேலன்ஸ் இல்லை’ன்னு சொல்லி என் மைத்துனியின் போனை வாங்கிப் பேசியிருக்கார். கணவருக்கு அனுப்புறதுக்காகத் தனக்குத்தானே எடுத்துக்கிட்ட சில அந்தரங்க போட்டோக்களை போன்ல வெச்சுருந்துருக்கார் என் மைத்துனி. அந்த போட்டோக்களை அவருக்குத் தெரியாம தன்னோட போனுக்கு அனுப்பிக்கிட்டார் சாமிநாதன்.

மொபைலில் நிர்வாணப் படம்... அல்லாடும் அபலை பெண்!

கொஞ்ச நாள் கழிச்சு அவருக்கு போன் பண்ணுன சாமிநாதன், ‘உன் நிர்வாண படங்கள் எல்லாம் என்கிட்ட இருக்கு. என் ஆசைக்கு இணங்கணும். நான் கேட்குற பணத்தைக் கொடுக்கணும். அதுக்கு நீ ஒத்துக்கிட்டா இந்தப் படங்களை அழிச்சுடுவேன். இல்லாட்டி வெளிய பரப்புவேன்’னு மிரட்டியிருக்கார். உடனே சில படங்களையும் அவங்களுக்கு சாமிநாதன் அனுப்பியிருக்கார். அதிர்ச்சியடைஞ்சவங்க இந்த விஷயத்தை உடனே குடும்பத்தினர்கிட்ட சொன்னாங்க. நாங்க எங்களோட அமைப்பில் சொல்லிட்டு, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்துல புகார் கொடுத்தோம். உடனே சாமிநாதனை கைது செஞ்சாங்க. இப்போ அவர் ஜாமீனில் வெளியே வந்துட்டார். புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி இப்போது எங்களை மிரட்டுறார் சாமிநாதன். இந்த விஷயத்துல சாமிநாதனோட நண்பர்கள் சிலரும் உடந்தையாக இருந்திருக்காங்க. ஆனா, போலீஸ் அதுபத்தி விசாரிக்கவேயில்லை. எங்கக் குடும்பப் பெண்ணோட படம் ஸ்ரீமுஷ்ணத்துல நிறைய பேருக்கு அனுப்பப்பட்டிருக்கு. ஆனா, ‘அதுக்கு ஆதாரங்கள் இல்லை’ன்னு போலீஸ் விசாரிக்க மாட்டேங்குறாங்க. சரியான நடவடிக்கை இல்லாததால், நாங்க இப்போ விழுப்புரம் டி.ஐ.ஜி-கிட்ட புகார் கொடுத்திருக்கோம். இந்த வழக்குக்காக நாங்க எல்லோரும் லீவு போட்டுட்டு வந்திருக்கோம். எங்களுக்கு அவமானம் வந்தாலும் பரவாயில்லை. இதுபோல மத்த பெண்கள் பாதிக்கப்படக்கூடாது” என்றார்.

மொபைலில் நிர்வாணப் படம்... அல்லாடும் அபலை பெண்!

ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, “அவர்கள் கொடுத்த புகாரின் அடிப் படையில் வழக்குப் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் பெண் தரப்பில் தகுந்த ஆதாரங்களை எங்களிடம் வழங்கவில்லை. அந்தப் பெண்ணின் செல்போனைக்கூடத் தர மறுக்கிறார்கள். நாங்கள் எதை வைத்து விசாரிப்பது? இப்போது உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி, மீண்டும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும். நாங்கள் பாரபட்சம் இல்லாமல்தான் செயல்படுகிறோம்” என்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட சாமிநாதனிடம் பேசினோம். “எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் வீட்டில் வேலை செய்த டிரைவர்தான், அந்தப் பெண்ணின் புகைப்படங்களை வைத்திருந்தார். என்னிடம் அதைக் காட்டியபோது, நான் அவரைத் திட்டிவிட்டு, அவர்களுடைய அமைப்பைச்  சேர்ந்த ஒருவரிடமும் சொன்னேன். ஆனால், தேவை இல்லாமல் என்மேல் புகார் கொடுத்து என்னைச் சிக்க வைத்திருக்கிறார்கள். நான் அவர்களை மிரட்டினேன் என்று சொல்வதும் பொய்யானது. அவர்கள் என்மீது சொல்லும் புகார்களுக்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. நான் குற்றமற்றவன் என்று கோர்ட்டில் நிரூபிப்பேன்” என்றார்.

மொபைலில் நிர்வாணப் படம்... அல்லாடும் அபலை பெண்!

“இந்த வழக்கில் காவல்துறையினர் கொஞ்சம் தீவிரம் காட்டினால், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது காவல்துறையின் கடமை!

- ஜி.சதாசிவம்
படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு