Published:Updated:

‘‘இங்கே குழந்தைகள் விற்கப்படும்!’’ - தமிழகத்துக்கு இன்னொரு தலைக்குனிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘இங்கே குழந்தைகள் விற்கப்படும்!’’ - தமிழகத்துக்கு இன்னொரு தலைக்குனிவு!
‘‘இங்கே குழந்தைகள் விற்கப்படும்!’’ - தமிழகத்துக்கு இன்னொரு தலைக்குனிவு!

சிவப்புக் குழந்தை ரூ.4 லட்சம்... கொழுகொழு குழந்தை ரூ.4.5 லட்சம்

பிரீமியம் ஸ்டோரி

குழந்தைகள் சாப்பிடும் சாக்லெட்களுக்கான விளம்பரங்களைவிட ‘இனி எங்களுக்கும் ஒரு குழந்தை!’ என்று ‘குழந்தை வரம்’ தரும் மருத்துவமனைகளின் விளம்பரங்கள் அதிகமாகிவிட்டன. இளைய தலைமுறையை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, குழந்தை யின்மை. இதை மையமாக வைத்துதான் புதிய வியாபாரமாக உருவெடுத்திருக்கிறது, குழந்தை விற்பனை.

எத்தனை பேர் இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தொலைபேசியில் பேரம் பேசி, சிக்கியிருக்கிறார் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. சிகப்புக் குழந்தை என்றால் ரூ. 4 லட்சம், கொழுகொழு குழந்தை என்றால் ரூ. 4.5 லட்சம் என்று பேரம் பேசும் அமுதா ‘‘குழந்தை வேண்டுமெனில் 30,000 ரூபாய் முன்பணம் கட்டிப் பதிவுசெய்ய வேண்டும், நாங்கள் சொன்னதும் பத்திரம் போட்டு மீதிப்பணம் செலுத்தி குழந்தையை வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று டீல் பேசுகிறார்.

இந்தச் சேவைக்காகவே அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டாராம். ஒரு குழந்தையை விற்கும் பணத்தில் ஆயிரம் ரூபாயை அனாதை ஆசிரமங்களுக்கோ, கோயில் அன்னதானத்துக்கோ வழங்கிவிடும் தர்மத்தையும் தவறாமல் செய்கிறாராம், கடவுள் புண்ணியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தப் பிரச்னையுமின்றி தொழில் செய்கிறேன் என்று அமுதா அடுக்கும்போது கண்ணைக்கட்டுகிறது, காது அடைக்கிறது.

‘‘இங்கே குழந்தைகள் விற்கப்படும்!’’ - தமிழகத்துக்கு இன்னொரு தலைக்குனிவு!

இப்படித் திருட்டுத்தனமாக விற்கப்படும் குழந்தைகளுக்கு அதே தம்பதியரைப் பெற்றோராகப் பதிவுசெய்து பிறப்புச்சான்றும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்கான கட்டணம், 70,000 ரூபாய். ராசிபுரம் நகராட்சியில் இதற்கென்றே ஆட்கள் இருப்பதையும், அவரது உரையாடல் ஆடியோ உறுதிப்படுத்துகிறது. இந்த ஆடியோ, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அதன் பிறகே சுதாரித்தது, சுகாதாரத்துறை.

சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ்,  இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி  நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். ராசிபுரம் மகளிர் காவல் நிலைய போலீஸார், அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்தனர். சேலம், கொல்லிமலையில் மூன்று குழந்தைகளை வாங்கி விற்றதாகக் கூறியுள்ள அவர்கள், ஒரு குழந்தையை ஓசூரில் விற்றிருப்பதாகவும் ஒப்புக்கொண்டனர்.

முப்பது ஆண்டுகள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக அமுதாவே கூறியிருப்பது, அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் ஏராளமான இடைத்தரகர்கள் இருப்பதாகவும், அரசு அலுவலர்கள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பரவலாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இதுவரை பல நூறு குழந்தைகள் இப்படி விற்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலையில் வீட்டில் நடக்கும் பிரசவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, அந்த ஆய்வின்போதுகூட இதுபற்றி கண்டறியப்படவில்லை.

‘‘இங்கே குழந்தைகள் விற்கப்படும்!’’ - தமிழகத்துக்கு இன்னொரு தலைக்குனிவு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், ‘‘இந்த ஆடியோ வெளியானதுமே, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு மாவட்டங்களில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் தப்பிக்க நேரிடும் என்பதால் அவர்களின் விவரங்களைத் தற்சமயம் வெளியிட முடியாது. இதில் தொடர்புடைய அனைவருக்கும் தக்க தண்டனை வாங்கித்தரப்படும்’’ என்றார்.

சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, ‘‘இந்தச் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணை மேற்கொண்டிருப்பதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் தலா நான்கு பேர் கொண்ட பத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராசிபுரம், கொல்லிமலைப் பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்களையும், கொடுக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களையும் சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வருவதுபோல் சில மாதங்கள் ராசிபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கருத்தரித்தல் மையங்களில் தங்கி, குழந்தையை வாங்கிச்செல்லும் சம்பவங்களும் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளதால், கருத்தரித்தல் மையங்களின் விவரங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. காவல் துறை விசாரணைக்குத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களும் எங்கள் துறை சார்பில் தயார் செய்துகொடுக்கும் பணி முடக்கிவிடப்படுள்ளது’’ என்றார்.

‘‘இங்கே குழந்தைகள் விற்கப்படும்!’’ - தமிழகத்துக்கு இன்னொரு தலைக்குனிவு!

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ‘‘தமிழகத்தில் 21 தத்து எடுக்கும் மையங்கள் உள்ளன. குழந்தையைத் தத்து எடுப்பதில் கால தாமதமாகிறது என்ற புகார் உண்மைதான். குழந்தைகள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அழகான, ஆரோக்கியமான குழந்தைகளையே பலரும் தத்தெடுக்க விரும்புகின்றனர். முன்பெல்லாம் வளர்க்க முடியாத குழந்தைகளைக் காப்பகங்களில் விடுவார்கள். இப்போது பெற்றோரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் குழந்தைகளை வாங்கி விற்கின்றனர். இதனால், காப்பகங்களுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. குழந்தையை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் என்பது தெரியாமலே பலர் இதைச் செய்கிறார்கள். இவர்களுக்கு அதிகபட்சமாக அபராதத்துடன் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்க வாய்ப்புண்டு. தத்துக்கொடுப்பதில் எங்களுக்குப் பெற்றோரின் நலனைவிட, குழந்தைகள் நலனே முக்கியம்’’ என்றார்.

பணத்துக்காக அலையும் அமுதாக்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகளைக் காப்பது அரசின் பொறுப்பு!

- துரைராஜ்  குணசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு