Published:Updated:

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு!
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு!

வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வாடிப்பட்டி வழக்கு...

பிரீமியம் ஸ்டோரி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் காணாமல்போன குழந்தைகள் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், மீனாட்சி என்பவரின் குழந்தை காணாமல் போன விவகாரத்தின் மூலம்தான் அரசு மருத்துவமனைகளில் அதிகமான அளவில் குழந்தைகள் கடத்தப்படும் தகவல் வெளியே வந்தது.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொம்மன்பட்டியை சேர்ந்த தினகரனின் மனைவி மீனாட்சி. இவருக்குக் கடந்த 2013, ஜூன் 15-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே குழந்தையை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள். இதை வழக்காகப் பதிவுசெய்து, மீனாட்சியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் முடிவுசெய்தது. ஆனால், ‘என் குழந்தை இல்லாமல், நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என்று பிடிவாதமாக அங்கிருந்து நகர மறுத்துவிட்டார் மீனாட்சி. இது ஊடகங்களில் பரவத் தொடங்கியதால், அரசு தரப்பில் ஒன்றும் செய்யமுடியவில்லை. நீண்ட நாள்கள் மருத்துவமனையிலேயே அழுது புரண்ட நேரத்தில்தான், சமூக ஆர்வலர்கள் ஆனந்த்ராஜ், வழக்கறிஞர் அழகுமணி ஆகியோர் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி, அவர் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு மருத்துவமனையின் அலட்சியத்தைக் கண்டித்துப் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததுடன், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு!

வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம். “நாங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்த பின்பு, உயர் நீதிமன்றம் பல்வேறு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதனால், மகப்பேறு வார்டு முதல் மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டன. காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மகப்பேறு வார்டுக்குள் வருகிறவர்கள், விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்ட பின்பும், இதுவரை குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், ஒவ்வொரு முறையும் போலீஸார் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளானார்கள். அதன் பிறகு, ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கோரினோம். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2005-ம் ஆண்டு முதல் குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்களில், ஏழு வருடங்களுக்கு மேலாகக் குழந்தை கிடைக்கப்பெறாதவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும், அதற்குக் குறைவான காலகட்டத்தில் விசாரணை நடந்துவரும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. அப்போதுதான், தமிழக அரசு மருத்துவமனைகளில் 12 தம்பதியர்களுக்குக் குழந்தைகள் காணாமல் போயுள்ள விஷயமே தெரியவந்தது. அதில் மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற தம்பதியரும் அடக்கம். 

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருட்டு!

கடத்தப்படும் குழந்தைகள் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கும் பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கு விற்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், வசதியானவர்களின் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

தத்து எடுக்கும் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால்தான், சட்டவிரோத குழந்தைகள் விற்பனை அதிகரிக்கிறது. அந்த விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்” என்றார். மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேசியபோது, இந்த விவகாரம் தொடர்பாக, ‘என்னை எதுவும் தொந்தரவு செய்ய வேண்டாம்; மன உளைச்சல் ஏற்படும்’ என்று கேட்டுக்கொண்டதால், அவரது கருத்துகள் எதுவும் இங்கு பதிவு செய்யப்படவில்லை.

- செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு