Published:Updated:

அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்
அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்

அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்

பிரீமியம் ஸ்டோரி

பிணக்குவியலை வைத்து அரசியல் செய்வதும் இனப்படுகொலை நிகழ்த்தி அந்த ரத்தத்தின்மீது நடந்து அரியணை ஏறுவதும் இலங்கை அரசியலில் சர்வ சாதாரணம். ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு பயங்கரம், மீண்டும் அப்படிப்பட்ட சூழலை உருவாக்கியுள்ளது.

253 பேர் கொல்லப்பட்ட (ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கையை 360 என அரசு அறிவித்தது. ‘சிதறிய உடல் பாகங்களைத் தனித்தனியாகக் கணக்கிட்டுவிட்டோம்’ எனச் சொல்லிப் பிறகு அதைக் குறைத்து 253 என அறிவித்துள்ளது!) இந்தக் கொலைவெறித் தாக்குதல் இலங்கையைப் பெரும் அச்சத்தில் மூழ்கடித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த 26-ம் தேதி, இலங்கையில் நிகழ்ந்த நான்கு சம்பவங்கள், இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிப்பவையாக மாறியுள்ளன.

அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்

சம்பவம் 1:

முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே, ‘‘இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவது 100 சதவிகிதம் உறுதி’’ என்று அறிவித்தார். அடுத்து அவர் சொன்னவை பலவும் அதிர்ச்சி கிளப்பும் தகவல்கள். ‘‘புலிகளுடனான போர் சமயத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த ராணுவ உளவுப்பிரிவை இந்த அரசு கலைத்துவிட்டது. அந்தப் பிரிவில் 5,000 பேர் இருந்தார்கள். அவர்களில் அரபி மொழி தெரிந்தவர்களும் இருந்தனர். இலங்கையின் கிழக்குப் பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களை நோக்கி இளைஞர்கள் செல்வது குறித்து அவர்கள் கண்காணித்து வந்தார்கள். அந்த உளவுப்பிரிவைக் கலைக்காமல் இருந்திருந்தால், இந்தத் தாக்குதலே நடந்திருக்காது’’ என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்திருக்கிறார், கோத்தபய.

மைத்ரிபால சிறீசேன, அதிபர் பதவி ஏற்றபிறகே இந்த உளவுப்பிரிவு கலைக்கப்பட்டது. இந்த உளவுப்பிரிவில் இருந்த பலர்மீது, இறுதிப்போர் காலத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது படுகொலை நிகழ்த்தியது உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுகள் இருந்ததால், இந்தப் பிரிவு கலைக்கப்பட்டது. ஆனால், ‘‘இந்த அரசுக்குத் தேசப் பாதுகாப்பு முக்கியம் இல்லை. இன ஒற்றுமை, மனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என ஏதேதோ பேசுகிறார்கள்’’ என்கிறார், கோத்தபய.

ஏற்கெனவே, ‘சிங்களப் பெண்களுக்கு முஸ்லிம்கள் ஒருவித இனிப்பு கொடுக்கிறார்கள். அதைச் சாப்பிட்டால் அதன்பின் குழந்தை பிறக்காது’ என்பது போன்ற வதந்திகள் இலங்கையை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. இனி இதுபோல ஏராளமான வதந்திகள் கிளப்பப்படும். இன மற்றும் மதக் குழுக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திக் குளிர்காயும் அரசியல் மீண்டும் வேரூன்றும். முன்பு தமிழர்களை எதிரிகளாகக் காட்டி, சிங்களப் பேரினவாத அரசியலைக் கையில் எடுத்தார், ராஜபக்ஷே. அவர் தம்பி இப்போது முஸ்லிம்களை சிங்களர்களின் எதிரிகளாகக் காட்டுகிறார். ‘இது எங்கே போய் முடியுமோ’ என்ற கவலையில் இருக்கிறார்கள், மனித உரிமை ஆர்வலர்கள்.

அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்

சம்பவம் 2:

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெள்ளிக்கிழமை பேசிய அதிபர் சிறீசேன, ‘‘இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்க வேண்டும். தாக்குதல் அபாயம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும், அந்தத் தகவல் எனக்குச் சொல்லப்படவில்லை’’ என்றார்.

முழுக்க முழுக்க பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அவசரம் அவர் நடவடிக்கைகளில் தெரிகிறது. வெளியிலிருந்து ராஜபக்ஷே குடும்பம் செய்யும் இந்த வேலையை, அதிகாரத்தில் இருந்தபடி சிறீசேன செய்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அதிபருக்கும் பிரதமருக்கும் மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. ரணில் பதவியில் இருக்கும்போதே ராஜபக்ஷேவை பிரதமராக நியமித்தார், சிறீசேன. நீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சென்று பெரும் போராட்டம் நடத்தி, தன் பதவியை மீண்டும் கைப்பற்றினார், ரணில். ‘இருவருக்கும் இடையே நடக்கும் மோதலின் விளைவாக அரசு செயலற்றுப் போய்விட்டது. அதனால்தான் இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை’ என மக்கள் நம்புகிறார்கள். மக்களின் கோபத்தை ரணில் மீது திருப்ப முயற்சி செய்கிறார், சிறீசேன. ஏற்கெனவே தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுப் பாதுகாப்புத்துறைச் செயலாளரையும், இலங்கை போலீஸ் தலைவரையும் பதவி விலகச் சொன்ன அதிபர், அடுத்ததாகப் பிரதமரையும் பதவி விலகச் சொல்லிக் கேட்கக்கூடும்.

சம்பவம் 3:


‘‘உளவுத்துறை எச்சரிக்கையை அமைச்சரவைக்கு அதிபர் தெரிவிக்கவில்லை’’ என உடனடியாகப் பதிலடி கொடுத்தார், பிரதமர் ரணில். இலங்கை போலீஸ் ஐ.ஜி பதவியில் இருக்கும் புஜித் ஜெயசுந்தரா, பிரதமர் ரணிலால் நியமிக்கப்பட்டவர். தாக்குதலைத் தடுக்காததற்குப் பொறுப்பேற்று இவரைப் பதவி விலகுமாறு அதிபர் சிறீசேன சொன்னார். ஆனால், ஐ.ஜி பதவி விலக மறுத்துவிட்டார். ரணிலின் ஆதரவு இவருக்கு இருக்கிறது. நாடாளுமன்றம் மட்டுமே ஐ.ஜி-யை பதவிநீக்கம் செய்ய முடியும்.

‘தாக்குதலைத் தடுக்காதது அதிபர் மைத்ரிபால சிறீசேனவின் தவறு’ எனக் காட்டுவதற்கு ரணில் பெரும் முயற்சி செய்கிறார்.

அரசியலாகும் அட்டாக்... அதிகரிக்கும் வதந்திகள்! - இலங்கை ஃபாலோ அப்

சம்பவம் 4:

இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாறை மாகாணத்தில் கல்முனை அருகேயுள்ள சாய்ந்தமருது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. இங்கு ஒரு வீட்டில் சமீபத்தில் வாடகைக்குக் குடிவந்தது, ஒரு குடும்பம். அந்த வீட்டில் திடீரென நிறையப் பேர் தென்பட, உள்ளூர் முஸ்லிம்கள் சந்தேகப்பட்டு விசாரித்தனர். வீட்டுக்குள்ளிருந்து துப்பாக்கியுடன் வந்த ஓர் இளைஞர் அவர்களை விரட்ட, உடனே போலீஸுக்குத் தகவல் போனது. 26-ம் தேதி முன்னிரவில் அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் முகமது ஜாஹ்ரன் ஹஷீமின் குடும்பம் இங்குதான் இருந்தது. ஜாஹ்ரனின் அப்பா முகமது ஹஷீம், சகோதரர்கள் ஜைனீ ஹஷீம், ரில்வான் ஹஷீம் ஆகியோர், குழந்தைகளின் அழுகைக்கு இடையே ஒரு வீடியோவில் பேசிவிட்டுத் தயாரானார்கள். வீட்டில் இருந்த மூன்று தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் குண்டுகளை வெடித்து வீட்டைத் தகர்த்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் இதில் இறந்தார்கள். இவர்களில் மூன்று பேர் தவிர மற்றவர்கள் ஜாஹ்ரனின் குடும்பத்தினர்.

ஜாஹ்ரனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றே போலீஸ் நினைத்திருந்தது. ஆனால், இந்த வீட்டிலிருந்து படுகாயங்களுடன் ஜாஹ்ரனின் மனைவி ஃபாத்திமா சாதியாவும், நான்கு வயது மகள் ருஜைனாவும் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கு அருகிலேயே ஒரு வீட்டிலிருந்து ஐ.எஸ் அமைப்பின் சீருடைகள், கொடிகள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் செய்வதற்கான பொருள்கள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஜாஹ்ரன் உள்ளிட்ட எட்டு பேர் தோன்றும் வீடியோ இங்கிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜாஹ்ரனின் சகோதரர்களும் அப்பாவும் தோன்றும் வீடியோவில், ரில்வான் ஹஷீம் காயங்களுடன் இருப்பார். சமீபத்தில் குண்டு தயாரிக்கும்போது அவருக்குக் கைகளிலும் கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அவர்கள், ‘‘அச்சப்படாமல் தாக்குதலைத் தொடருங்கள்’’ என யாருக்கோ வேண்டுகோள் விடுக்கிறார்கள். எனவே, இன்னமும் பலர் வெடிகுண்டுகளுடன் எங்கெங்கோ இருப்பதாக இலங்கை போலீஸ் நம்புகிறது. அதனால், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுமார் 100 பேரிடம் விசாரணையைத் தீவிரமாக்கி யுள்ளது. இவர்களில் சிரியா மற்றும் எகிப்திலிருந்து வந்த சிலரும் அடக்கம்.

நல்லிணக்கம் உருவாக்குவதைவிட, இந்தப் பிரச்னையை டிசம்பர் மாதம் வர உள்ள தேர்தல் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கவே அரசியல் கட்சிகள் முயலும். அதுதான் எளிய மக்களின் பெருங்கவலையாக இருக்கிறது.

- தி.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு