Published:Updated:

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?
பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

பிரீமியம் ஸ்டோரி

“பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகர் பின்புலத்தில் இருக்கிறார்” என்கிற சர்ச்சையே முடியவில்லை. இப்போது பெரம்பலூரில் இதேபோன்ற ஒரு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மற்றுமொரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வின் பெயர் அடிபடுகிறது. இதுகுறித்து பெரியதாக மீடியாக்களில் செய்திகள் வராத நிலையில் விகடன் களத்தில் இறங்கி, பல்வேறு தகவல்களைத் திரட்டியது. அந்தத் தகவல்களை உடனுக்குடன் ‘விகடன் இணையத்திலும் வெளியிட்டுவருகிறோம். அவற்றைப் படிக்க இந்தக் கட்டுரையில் வைக்கப்பட்டிருக்கும் ‘க்யூ.ஆர் கோட்’-யை ஸ்கேன் செய்யலாம். சரி, என்ன நடந்தது, முழுமையாகவும் விரிவாகவும் பார்ப்போம். 

பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன்மீதுதான் இப்படியொரு புகார் ஏவப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண், காவல் துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிறகு, பெரம்பலூர் வழக்கறிஞர் ஒருவர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பின்னரும் முன்னேற்றம் இல்லை. இதுதொடர்பாக விகடன் இணையத்தில் தொடர்ந்து செய்திகள் வரவே... தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலையிட்டு அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னரே, விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த சிலர், ‘‘பெரம்பலூரில் உள்ள லோக்கல் டி.வி-யில் கேமராமேனாக இருப்பவர் தலவேல் என்கிற வேல்முருகன். இவருக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ-வான இளம்பை தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு வேலைதேடும் பெண்களை குறிவைத்து, அவர்களை எம்.எல்.ஏ-வுடன் சந்திக்க அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளார் வேல்முருகன். ‘எனக்கு எம்.எல்.ஏ, அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பலரிடமும் தொடர்பு இருக்கிறது. அதனால், அரசு வேலையை வாங்கித் தருவேன்’ என்று ஆசைவார்த்தை கூறி இளம் பெண்கள் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக இவர்மீது உண்டு. இந்த நிலையில்தான் பெரம்பலூரில் இவர்களிடம் சிக்கிய பெண்ணின் வாட்ஸ்அப் உரையாடல், வைரலாகி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது’’ என்றனர்.

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோவை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருளைச் சந்தித்தோம். அவர், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அவரின் உறவினரைப் பேச வைத்தார். ‘‘எங்க பிள்ளை படிச்சுட்டு வேலை தேடிக்கொண்டிருந்தா. எளிதா வேலை வாங்கிடலாம்னு சொன்னார் வேல்முருகன். அதை நம்பி, நாங்களும் சரி என்று ஒத்துக்கொண்டோம். எங்களுடைய மொபைல் எண்களையும் வாங்கிவைத்துக்கொண்டார். கொஞ்ச நாள் கழிச்சு, ‘டி.எஸ்.ஹோட்டலில் இன்டர்வியூ நடக்கிறது, வந்துடுங்க’ என்று போனில் தகவல் சொன்னார் வேல்முருகன். நாங்களும் அங்குச் சென்றோம். எங்களுடன் சேர்த்து, மொத்தம் பத்து பெண்கள் வந்திருந்தாங்க. அனைவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசினாங்க. அப்போது நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு எங்க பொண்ணை வீடியோ எடுத்தாங்க. அவர்களின் பேச்சு வித்தியாசமாகவும் டபுள் மீனிங்காவும் இருந்துச்சு. இப்படிப்பட்ட வேலை வேண்டாம்னு அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிட்டோம். கொஞ்ச நாளில் இன்னொரு போன் எங்க பொண்ணுக்கு வந்திருக்கு.

அதில் பேசியவங்க, ‘வேலை விஷயமா பேசணும். உடனே, டி.எஸ்.ஹோட்டல் ரூம் எண் 114-க்கு வந்திடு’னு சொன்னாங்க. மேலும், ‘உன் வீடியோ எங்க கையில் இருக்கு. நீ வரலைன்னா இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம்’ன்னு எங்க பொண்ணை மிரட்டி இருக்காங்க. என்ன படம் எடுத்தாங்க... என்ன செய்யப் போறாங்கன்னு புரியாம அந்த ஹோட்டலுக்கு அவ போயிருக்கா. அங்கு ஐந்து பேர்கொண்ட கும்பல் எங்க மகளை மிரட்டியிருக்காங்க. ‘இந்த வீடியோவை டெலிட் செய்யணும்னா, இங்கிருக்கிற பாத்ரூம்ல குளிச்சிட்டு வா’ன்னு சொல்லியிருக்காங்க. அவளுக்கு ஒண்ணும் புரியலை. எப்படியோ டெலிட் செஞ்சா போதும்னு வேற வழியில்லாமல் அவளும் குளிச்சிருக்கா. அவ குளிப்பதை தெரியாம வீடியோ எடுத்து, ‘இப்போ ரெண்டு வீடியோ எங்க கையில இருக்கு. இந்த வீடியோவை டெலிட் செய்யணும்னா நீ எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வனிடம் போகணும். நீ போலீஸ்கிட்ட போனாலும் எங்களுக்குக் கவலை இல்ல. இந்த வீடியோவை இணையத்தில வெளியிட்டுவிடுவோம். அதன் பிறகு உங்க குடும்பமே தூக்குல தொங்கும். எங்களை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. எங்களுக்குப் பின்னால் ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கு’ன்னு சொல்லி மிரட்டியிருக்காங்க. இதில் பயந்துப் போனவளை அவங்க சீரழிச்சிட்டாங்க.

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

பிறகு அந்தக் கும்பலில் இருந்தவங்க அடிக்கடி ஆசைக்கு இணங்கணும்னு டார்ச்சர் கொடுத்திருக்காங்க. டார்ச்சர் தாங்க முடியாம ஒரு தடவை தற்கொலை செஞ்சுக்கப் போயிட்டா. பிறகு, 15 நாள்களுக்கு முன்னாடி பெரம்பலூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். அவங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அப்புறம்தான் வழக்கறிஞர் அருளிடம் பேசினோம். பல பெண்கள் இவர்களிடம் சிக்கியிருக்காங்க. அவர்களை எல்லாம் மீட்கணும். அத்துடன் இந்த குற்றத்தைச் செஞ்சவங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கணும்” என்றார் ஆத்திரத்துடன்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருளிடம் பேசினோம். ‘‘பெண்களை வசியப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டுவதும், மிரட்டிப் பணியும் பெண்களை எம்.எல்.ஏ-வுக்கு அனுப்பிச் சீரழிப்பதும்தான் வேல்முருகனின் வேலை. இவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து என்னிடம் இதுவரை ஆறு பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். முதல்கட்டமாக ஒரு பெண் பேசிய ஆடியோவை மட்டும் அவர்களின் ஒப்புதலுடன் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வீடியோக்கள் மற்றும் சில பெண்கள் பேசிக்கொண்டிருக்கும் ஆடியோவையும் விரைவில் வெளியிட இருக்கிறேன். இன்னுமொரு பாதிக்கப்பட்ட பெண், ‘என்னைப் பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள்... என்னை வீடியோவாகவும் எடுத்து மிரட்டுகிறார்கள்’ என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், காவல் துறையினர் எம்.எல்.ஏ-விடம் சமரசம் செய்து அனுப்பியிருக்கி றார்கள். வேல்முருகனைப் பிடித்து விசாரிக்காதது ஏன்? ஏ.டி.எஸ்.பி ரங்கராஜன் இச்சம்பவத்தை மறைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். இந்த அதிகாரியை மாற்றினால் மட்டுமே இந்த வழக்குக்குத் தீர்வு கிடைக்கும்” என்றார் ஆவேசமாக.

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

இதுகுறித்து பெரம்பலூர் எம்.எல்.ஏ-வான இளம்பை தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ‘‘அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டீர்களா? ‘தமிழ்ச்செல்வனிடம் செல்லுங்கள்’ என்றுதான் அதில் சொல்லப்படுகிறது. அந்த தமிழ்செல்வன் யார் என்று விசாரிக்க வேண்டாமா? அத்துடன் யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்து அப்படியே சொல்கிறார் அந்தப் பெண். ஒரு பெண்ணை யாரோ ஒருவர் பாத்ரூமில் குளிக்கச் சொன்னால் இவரும் குளிக்கச் செல்வாரா? இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? வழக்கறிஞர் அருளைப் பற்றி பெரம்பலூரில் கேட்டுப்பாருங்கள். கட்டப்பஞ்சாயத்து, ஆட்களை மிரட்டிப் பணம் வாங்குவதுதான் அவரது வேலை. வேண்டும் என்றே ஆடியோவை வெளியிட்டு, என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் அருள். இந்த ஆடியோ உண்மை என்றால் போலீஸார் என்னிடம் விசாரித்திருக்க மாட்டார்களா, சம்பந்தப்பட்ட வேல்முருகன் என்கிறவரை விசாரித்திருக்க மாட்டார்களா? என் அரசியல் முன்னேற்றத்தைப் பிடிக்காதவர்கள் எனக்கு எதிராகச் செய்யும் சதி இது. அருள்மீது வழக்குத் தொடர இருக்கிறேன்” என்றார்.

பொள்ளாச்சியைப் பின்தொடரும் பெரம்பலூர்! - பாலியல் புகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ?

வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமியிடம் பேசினோம். ‘‘இப்போதுதான் விசாரிக்கத் தொடங்கியுள்ளோம். பிறகு பேசுகிறோம்’’ என்பதுடன் முடித்துக்கொண்டார் அவர். ஏ.டி.எஸ்.பி ரெங்கராஜனிடம் பேசினோம். ‘‘நான் வெறும் மேற்பார்வையிடும் அதிகாரி மட்டுமே. இதற்கென தனி டீம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, நான் எப்படி விசாரிக்க முடியும்? அருள் ஒரு வழக்கறிஞர்... அவர் யூகத்தின் அடிப்படையில் பல விஷயங்கள் சொல்லலாம். அதற்கு எல்லாம் நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?’’ என்றார்.

பாலியல் புகார்களில் தேவை, கறாரான விசாரணை.

- எம்.திலீபன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு