Published:Updated:

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை காவல்துறை எப்படி நடத்தும்? - பெண் ஆய்வாளர் தகவல்

ஆ.சாந்தி கணேஷ்

``பாதிக்கப்பட்டு எங்களிடம் புகார் கொடுக்க வரும் பெண்களிடம், `நீ ஏன் அவன்கூட போனே', `உன் பிரச்னைக்கு நீதான் காரணம்' என்பது மாதிரியெல்லாம் அவர்களுடைய குற்றவுணர்ச்சியைத் தூண்ட மாட்டோம்.''

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை காவல்துறை எப்படி நடத்தும்? - பெண் ஆய்வாளர் தகவல்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை காவல்துறை எப்படி நடத்தும்? - பெண் ஆய்வாளர் தகவல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள், கடந்த 7 வருடங்களாகப் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிப்புக்குள்ளானவர்களில் ஒரு பெண், துணிச்சலோடு புகார் அளித்தார். ஆனால், அவரின் பெயர் உள்ளிட்ட விஷயங்களை வெளியிட்டு, பேரதிர்ச்சியைத் தந்துள்ளது காவல்துறை. பின்னர் இது தவறு என்று கோவை எஸ்.பி. ஒத்துக்கொண்டது வேறு விஷயம். ஆனால், இந்தச் சம்பவம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் கொடுத்தால், அவர்களைப்பற்றிய தகவல்கள் வெளியே தெரியாதபடி காவல்துறை எப்படியெல்லாம் விசாரணை நடத்த வேண்டும் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியே ஆக வேண்டும் என்ற உந்துதலை நமக்குள் ஏற்படுத்திவிட்டது. ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் மைதிலி அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். 

``பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்க வந்தால் அவர்களைப்பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதை நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது. அதனால், பாதிக்கப்பட்ட பெண்களுடைய பெயர், முகவரி மாதிரியான அடையாளங்களை வெளியுலகத்துக்குத் தெரிய விட மாட்டோம். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிர்காலம் இருப்பதால், அவர்களைப்பற்றிய பர்சனல் தகவல்களை மீடியாவுக்கும் தர மாட்டோம். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தால், சமூகத்துக்கு அவர்கள் முகம் தெரிந்துவிடும் என்பதால்தான் அதற்கும் நாங்கள் அனுமதி மறுக்கிறோம்'' என்று பட படவெனப் பேச ஆரம்பித்தார்.

``நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை விசாரிக்கும்போதுகூட, வெளிப்படையாக விசாரணை கூண்டில் நிற்க வைத்து கேட்க மாட்டார்கள். டிபென்ஸ் லாயர், நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நேரடியான கேள்விகளைப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்பார் என்பதால், நீதிபதியின் சேம்பரிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணை வழக்கறிஞர்கள் விசாரிப்பார்கள். இதை `இன் கேமரா புரொசீடிங்' என்போம். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, சாட்சி சொல்ல வருகிறவர்களிடம்கூட இதே முறையில்தான் விசாரணை செய்வோம். பாக்ஸில் நிற்க வைத்து விசாரிக்க மாட்டோம். 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதனால், அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்வோம். பாலியல் வன்கொடுமை நடந்த அன்று அவர்கள் அணிந்திருந்த உள்ளாடைகள் இருந்தால், அவை வலுவான தடயமாக இருக்கும். ஆனால், இதைப் பாதிக்கப்பட்ட பெண்களிடம் முகத்தில் அடித்ததுபோல, கேட்க முடியாது. அதனால், அனைத்துப் பெண்கள் காவல்துறையில் இப்படி கவுன்சலிங் தருவதற்கும், இதுபோன்ற தகவல்களை கேட்பதற்கும் சில என்.ஜி.ஓக்கள் இருப்பார்கள். அவர்கள், கவுன்சலிங் கொடுத்த பிறகுதான் சம்பந்தப்பட்ட பெண்களிடம்  நாங்கள் வாக்குமூலமே வாங்குவோம். 

பாதிக்கப்பட்ட பெண்களிடம் பெண் அதிகாரிகள்தான் விசாரிப்போம். என் ஸ்டேஷனுக்கு வந்த புகார் என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணை என் அறையில் வைத்துதான் விசாரிப்போம். பாதிக்கப்பட்டது மைனர் பெண்கள் என்றால், அவர்களுக்கு எந்த இடம் செளகரியமோ அங்குபோய் விசாரிப்போம். அப்படி விசாரிக்கும்போதுகூட,  எங்கே தொட்டான், என்ன செய்தான் என்பது மாதிரியான கேள்விகளைக் கேட்க மாட்டோம். என்ன நிகழ்ந்திருக்கும் என்பது பெண் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியும் என்பதால், இது போன்ற கேள்விகளைத் தவிர்த்து விடுவோம். என்ன நடந்தது என்று நாங்கள் கேட்கும்போதே, பாதிக்கப்பட்ட பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்து விடுவார்கள், சிலர் மெளனமாகி விடுவார்கள், சிலர் `சொல்ல முடியலை' என்று அழுவார்கள். 

பாதிக்கப்பட்டு எங்களிடம் புகார் கொடுக்க வரும் பெண்களிடம், `நீ ஏன் அவன்கூட போனே', `உன் பிரச்னைக்கு நீதான் காரணம்' என்பது மாதிரியெல்லாம் அவர்களுடைய குற்றவுணர்ச்சியைத் தூண்ட மாட்டோம்.  

காவல்துறை, சட்டம், மீடியா மூன்றும் மனம் வைத்தால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தை அவர்களின் வாழ்நாள் முழுக்க உலகத்துக்கே தெரியாமல் காப்பாற்ற முடியும் என்பதுதான் உண்மை'' என்று அழுத்தமாகச் சொல்லி முடித்தார்  காவல்துறை ஆய்வாளர் மைதிலி.