Published:Updated:

``ஹேக்கிங், ஸ்டாக்கிங் இரண்டும்தான் குற்றவாளிகளின் களம்!'' - சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயன்

Stalking என்னும் வன்தொடர்தல்தான் அது. உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், உங்களுக்கு விருப்பமான ஆட்கள், விருப்பமான விஷயங்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதுதான் அது.

``ஹேக்கிங், ஸ்டாக்கிங் இரண்டும்தான் குற்றவாளிகளின் களம்!'' -  சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயன்
``ஹேக்கிங், ஸ்டாக்கிங் இரண்டும்தான் குற்றவாளிகளின் களம்!'' - சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயன்

மிகுந்த பதற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு, பொதுவான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பெண்களுக்கு சமூகம் அளித்திருக்கும் பாதுகாப்புணர்வு, பெண்களைப் பற்றிய பொது மனோபாவம், குடும்பங்களில் ஆண்மையவாதம், சாதி, மதம் போன்ற பெண்களைப் பிணைத்துவைத்திருக்கும் விஷக்கூறுகள், பாலியல் கல்வி, பதின்பருவத்தினருக்கான பாலியல் கல்வி எனப் பலவிதங்களில் விரிந்திருக்கிறது பொதுவிவாதம். இதில், முக்கியமானதும், தெரிந்துகொள்ள அவசியமானதும் என, நாம் நினைக்கும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சமூக வலைதளங்கள் வழியாக, தொழில்நுட்பத்தின் மூலமாக பெண்கள் மீது நடக்கும் வன்முறையும், அத்தகைய டெக்-வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு அமைப்புகளையும் குறித்து அறிந்துகொள்வது அவசியம். காப்புரிமை, வணிகக்குறி மற்றும் தமிழகத்தின் மிக முக்கியமான சைபர் குற்றவியல் நிபுணரான, வழக்கறிஞர் ந.கார்த்திகேயனிடம் பேசினேன்.

``சமூக வலைதளக் குற்ற வழக்குகளைக் கையாள்கிறீர்கள். இதில் குற்றவாளிகளுக்கு எளிதான கருவிகளாக இருக்கும் விஷயங்கள் எவை?''

``பொள்ளாச்சி வழக்கு, சமூக வலைதளக் குற்றங்களைப் பற்றிய ரெட் அலர்ட்டை மறுபடியும் உருவாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவம், பெரிய பதற்றத்தை அனைவரிடமும் ஏற்படுத்தியிருக்கிறது. வன்முறையாளர்கள் அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும் என விரும்பும் பொதுமனசாட்சியோடு நானும் நிற்கிறேன். சமூக வலைதளக் குற்றங்களைச் செயல்படுத்தும் இத்தகைய குற்றவாளிகள், பொதுவான சில விஷயங்களைச் செய்கிறார்கள். `Stalking' என்னும் வன்தொடர்தல்தான் அது. உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், உங்களுக்கு விருப்பமான ஆள்கள், விருப்பமான விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதுதான் அது. பெண்களை தொடர்வது, ஏமாற்றுவது போன்ற வழக்குகள் மட்டுமல்ல, ஒரு பொருளை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றங்களிலும் பொதுவான விஷயம் ஸ்டாக்கிங்தான். உங்களைப் பற்றி எல்லாவற்றையும், எல்லோரும் அறிந்துகொள்வது தேவையற்றது.''

``எதன் அடிப்படையில் பெண்களை சைபர் குற்றங்களில் ஆட்படுத்துகிறார்கள்?''

``UNCITRAL (United Nations Commission on International Trade Law) அடிப்படையாகக்கொண்டுதான் ஒவ்வொரு நாட்டிலும் சைபர் சட்டங்கள் இயங்கிவருகின்றன. பல நாடுகளும் சைபர் ஆர்மியை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. மிக வெற்றிகரமாக இயங்கிவரும் இ-காமர்ஸ் தொழில் போர்னோகிராஃபிதான் என UNCITRAL அமைப்பே தெரிவிக்கிறது. பொதுவாக சமூக வலைதளங்களில் கிடைக்கும் படங்களை எடுத்து, வெவ்வேறு உடல்களுடன் செய்யப்படும் மார்ஃபிங் படங்களை 2 டாலர் முதல் 10 டாலர் வரை கொடுத்து வாங்குவதற்கு பெருங்கூட்டமே இருக்கிறது. ஹேக்கிங் மற்றும் ஸ்டாக்கிங் ஆகிய இந்த இரண்டு வகைக் குற்றங்கள்தான் இந்தக் குற்றவாளிகளின் களம்.''

``சைபர் குற்றத்தைக் கண்டுபிடித்ததும், பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியது என்ன?''

``இந்தியாவைப் பொறுத்தவரை காவல்துறைக்குச் செல்வதே அவமானம் என்பதுதான் இன்னும் சாமான்ய குடும்பங்களில் இருக்கும் மனோபாவம். ஆனால், எல்லாவற்றையும்போலவே காலம், மாறுதலுக்கு உட்பட்டது. உங்கள் புகைப்படமோ அல்லது உங்களுடனான உரையாடலோ வெளியிடப்பட்டது என்றால், உடனடியாக அதன் ஸ்க்ரீன்ஷாட்டையும், எழுத்துபூர்வமான புகார் கடிதத்தையும் எழுதி, புகார் அளிப்பதுதான் முதல் வேலையாக இருக்கவேண்டும்.

சைபர் குற்றங்களைப் பொறுத்தவரை, புகார் அளிக்கப்படாமலே அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 78-ன்படி, உள்ளூர் காவல் அதிகாரியே அந்தப் புகாரை எடுத்துக்கொள்வதற்கு வழி இருக்கிறது. சைபர் க்ரைம் செல்லுக்குத்தான் புகார் அளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. காவல்துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியர்கள் பலருக்கே இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆனால், சைபர் வழக்குகளைப் பதிவுசெய்வதற்கு எல்லாக் காவல்நிலையங்களிலும் வழியிருக்கிறது என்னும் அழுத்தத்தைப் பொதுமக்கள்தான் தர வேண்டும்.

மேலும், சைபர் குற்றங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களாகச் சென்று புகார் அளிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நெருங்கிய ரத்த உறவுகளோ அல்லது பாதுகாப்பாளரோகூட புகார் அளிக்கலாம். அதிகரிக்கும் சைபர் குற்றங்களுக்கும், பதியப்படும் புகார்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பே இருப்பதில்லை. புகார் அளிப்பதும் அழுத்தம் தருவதும் மிக முக்கியமானவை. 

மற்ற எல்லா விஷயங்களையும்விட, பாதிக்கப்பட்டவர்களும் சுற்றி இருக்கும் உறவினர்களும், சமூகமும் செய்யவேண்டிய ஒன்று இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகள் ஆக்காமல் இருக்கும் பண்புதான் அது. சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சாதாரண குற்றங்களைப்போல, சைபர் குற்றங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குற்றவாளிகளைக் கண்டறிந்து, ஆதாரங்களுடன் அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது, உண்மையிலேயே பெரிய நடைமுறைதான். சைபர் விக்டிம்ஸ், யாராக இருந்தாலும் குறிப்பாக பெண்கள், `தன் உடல் மட்டுமே நான்' என்னும் மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும்'' என்கிறார் கார்த்திகேயன்.