Published:Updated:

`குற்றவாளிகளின் குடும்பத்தைக் கூண்டில் ஏற்றாதீர்கள் நெட்டிசன்களே..!’

கொலை செய்வது குற்றம். அதைச் செய்பவன் கொலைக்காரன் என்றால்... எதுவும் செய்யாத அவனின் குடும்பத்தினரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் உங்களுக்கெல்லாம் என்ன பெயர்?

`குற்றவாளிகளின் குடும்பத்தைக் கூண்டில் ஏற்றாதீர்கள் நெட்டிசன்களே..!’
`குற்றவாளிகளின் குடும்பத்தைக் கூண்டில் ஏற்றாதீர்கள் நெட்டிசன்களே..!’

ந்தச் சிறுமியின் அப்பா ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட்டர். அவர் கிரிக்கெட்டில் செய்த ஒரு விஷயத்தை `சரியா, தவறா’ என்று சமூக வலைதளத்திலிருந்தவர்கள் சில நாள்களுக்கு முன் அத்தனை ஆக்ரோஷமாக, தீவிரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில், கிரிக்கெட்டரின் மனைவி தங்களுடைய மகளின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுகிறார். அந்தக் கிரிக்கெட்டர் மீதிருந்த கோபத்தையெல்லாம் தீர்க்க வழி தேடிக்கொண்டிருந்த நெட்டிசன்கள், அவருடைய மகள் புகைப்படத்துக்குக் கீழே `உன் அப்பா ஒரு மோசடிக்காரன்’ என்று கமென்ட் செய்கிறார்கள். இந்த கமென்ட்ஸ் திடுக்கிட வைத்ததைவிட, இதைப் போட்டவர்களின் மனப்பான்மைதான் நம்மை அதிகம் திடுக்கிட வைத்தது. அது ஒரு விளையாட்டு அவ்வளவே. அதை அத்தோடுதான் நிறுத்தியிருக்க வேண்டும். சரி, அவர் செய்கையை விவாதப் பொருளாக எடுக்கிறீர்கள் என்றால், அவரிடமே அதை நிறுத்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து, அவருடைய குழந்தையின் புகைப்படத்துக்குக் கீழே கமென்ட் இட்டது அருவருப்பான செயல் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?  

இந்த நேரத்தில், என்னுடைய தமிழ் வாத்தியாரும், அவர் நடத்திய தமிழரின் யுத்தத் தர்மமும் தவிர்க்க முடியாமல் என் நினைவுக்கு வருகின்றன. நாடுகளுக்கிடையே போர் மூளுகிறது என்றால், அங்கிருக்கிற பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்களாம். இந்த யுத்தத் தர்மத்தில் கொல்லக்கூடாதவர்கள் என்கிற பட்டியலில் பசுக்கள், ஆயுதம் இல்லாதவர்கள், புறமுதுகுக் காட்டியவர்கள் என்று பட்டியல் நீளுகிறது. ஒருவனை மற்றவன் கொன்றால்தான் வெற்றி என்கிற நிலையில்கூட பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மனிதர்களின் மனப்பான்மையாக இருந்திருக்கிறது. இதுதான் யுத்தத் தர்மம் நமக்குச் சொல்லும் நீதி.

போரில் மோதிக்கொள்ளும் இருவருக்கும் அந்தச் சமயத்தில் இருக்கும் வன்மம் இப்போது சோஷியல் மீடியாவை பயன்படுத்துபவர்கள் அத்தனை பேர் மனதிலும் குடிகொண்டிருக்கிறது. தன்னை எதிர்பவர்களை இழிவாகப் பேசுவது, அவர்கள் குடும்ப புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது என்று எல்லை மீறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் `நியாயம் வேண்டும்’ என்கிற சொல்லை அவர்களாக எடுத்தாளத் தொடங்கியிருக்கிறார்கள்.

எப்படி என்கிறீர்களா... பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பதிவது, சந்தர்ப்ப சூழ்நிலைகளாகக் கொலை செய்த கணவனோ, மனைவியோ... உடனடியாக அவர்களுடைய குடும்ப புகைப்படங்களை எங்கிருந்தாவது தேடிப் பதிவது இந்தப் போராளிகள்தாம். இந்தப் போராளிகளில் ஆண், பெண் இருவருமே அடக்கம். இவர்களுடைய போஸ்ட் மற்றும் கமென்ட்களிலிருந்து குழந்தைகளே தப்பிக்காதபோது, பெண்களின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம். அவற்றில் ஒன்றுதான், கிரிக்கெட்டர் குழந்தையின் புகைப்படத்தின் கீழ் உன் அப்பா ஒரு மோசடிக்காரன்’ என்று சிலர் கமென்ட் போட்டதும். 

கடந்த சில வருடங்களில் மட்டும், சமூகவலைதளப் போராளிகள் என்று தங்களைப் பெருமையுடன் பறைசாற்றிக்கொள்கிறவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எண்ணற்றவை. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியைக் கொலை செய்த ராம்குமாரின் தங்கை, அம்மா, அப்பா என்று ஒருவரையும் விடவில்லை இவர்களின் கமென்டுகளும் புகைப்படங்களும். தன் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியை வசைபாடவும் அவர் கணவருக்காக வரிந்துகட்டிப் பேசவும் அவருடைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆக ஆரம்பித்தது. அந்த வரிசையில் நொந்துபோனவர்கள் நடிகை சந்தியாவின் குழந்தைகளும், அபிராமியும் அவருடைய குடும்பத்தினரும்தாம். சமீபத்தில் பொள்ளாச்சி திருநாவுக்கரசின் தங்கை, அப்பாவின் புகைப்படம், அதற்கு இடப்பட்ட கமென்டுகள் வக்கிரம் நிறைந்தவை.

திவ்யாவும் இளவரசனும் காதல் என்ற உலக மகா தவற்றைச்(!) செய்துவிட்டதால், அவர்களுடைய குடும்பத்தில் இருந்தவர்களுடைய அத்தனை புகைப்படங்களும் இன்று வரை பொதுவெளியில் அவர்களை அடையாளம் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன, செய்யாத தப்புக்காக. 

அடுத்து சுவாதி கொலை வழக்கில் கைதாகி, இறந்தும்போய்விட்ட ராம்குமாரின் தங்கைகள், ``ப்ளீஸ்... எங்களை போட்டோ எடுக்காதீங்க’’ என்று அவர்கள் கெஞ்சியதையோ அல்லது கையெடுத்துக் கும்பிட்டதையோ யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அந்தப் பெண்களின் பெயர்கள், முகங்கள், அவர்களைக் குறித்த விமர்சனங்கள் எல்லாமே சமூகவலைதளங்களில் காலத்துக்கும் அப்படியேதான் இருக்கப்போகின்றன. தன் அண்ணன் செய்த தவற்றால் படிப்பை பாதியில் நிறுத்தி ஊரைவிட்டே தலைமறைவான அவர்களின் வலிகளுக்கு யார் பொறுப்பு? சுவாதியைக் கொன்றது ராம்குமார் என்றே வைத்துக்கொண்டாலும், ராம்குமாரின் தங்கைகளுக்கு இதில் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும் கடந்த கால உதாரணங்கள். மிக சமீபத்திய உதாரணங்கள் அபிராமியின் கணவரும் சந்தியாவின் குழந்தைகளும், பொள்ளாச்சி திருநாவுக்கரசின் தங்கையும். 

மிகப் பெரிய துரோகத்திலும் மீண்டு வர முடியாத சோகத்திலும் இருந்த அபிராமியின் கணவரை, `இவன் சரியா இருந்திருந்தா அபிராமி தப்பு செஞ்சுருக்க மாட்டா’ என்ற அர்த்தத்தில், அத்தனை கணவர்களுக்கெல்லாம் கவுன்சலிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் நெட்டிசன்கள். இதற்கு இணையாகப் பெண் போராளிகளும் ஆளாளுக்கு வகுப்பெடுத்தது அதைவிடச் சோகம். இன்னும் ஒரு படி மேலே சென்று... சந்தியாவின் டிக்டாக் அக்கவுன்டை தேடியெடுத்து(!) அதை மீண்டும் மீண்டும் சமூக வலைதளத்தில், வாட்ஸ் அப்பில் பரவவிட்டு அவர் கணவருக்கு நெருக்கடியைக் கொடுத்தார்கள் நெட்டிசன்கள்.

அடுத்தது சந்தியா விஷயத்துக்கு வருவோம். அம்மா உயிரோடு இல்லை; அப்பாவும் சிறைக்குப் போய்விட்டார். எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடுவது பத்திரிகை தர்மமும் இல்லை;  அந்தப் புகைப்படங்களைத் தங்களுடைய போஸ்ட்டில் பயன்படுத்துவது மனித தர்மமும் இல்லை. சந்தியாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மட்டுமே தெரிந்திருந்த அந்தக் குழந்தைகளின் முகங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவது, அவர்களுடைய எதிர்காலத்தை அழிக்கிற செயல் இல்லையா?  

திருநாவுக்கரசின் அம்மா மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அண்ணன் செய்த தவறுகளுக்காக, அவனுடைய தங்கையின் புகைப்படம், அவரின் சோஷியல் மீடியா அக்கவுன்ட், அதிலிருந்த அத்தனை புகைப்படங்களையும் மிகுந்த சிரத்தையோடு அனைவருக்கும் பகிர்ந்தவர்களுக்கு குறைந்தபட்ச இங்கிதம்கூட தெரியாதா.  திருநாவுக்கரசுவின் தங்கை தன் தோழிகளுடன் எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் எடுத்துப்போட்டு எத்தனை எத்தனை ஆபாச அர்ச்சனைகள்! திட்டம்போட்டு பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன், அவற்றையெல்லாம் தன் தங்கையிடம் சொல்லிவிட்டோ அல்லது குடும்பத்திடம் பர்மிஷன் வாங்கிவிட்டோவா செய்வான்? 

சமூகவலைதள போராளிகளுக்கு ஒரு வார்த்தை. ஓர் ஆணோ அல்லது பெண்ணோ குற்றம் செய்துவிட்டால், அவர்களுடைய குடும்ப புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிந்து `இவதான் அவன் தங்கச்சி’, `அவளோட புருஷன் இவன்தான்...’ என்று ஷேர் செய்யவோ, `உன் அப்பா மோசடிக்காரன்’ என்றோ கமென்ட் இடவோ செய்யாதீர்கள். அப்படிச் செய்வது வக்கிரம். கொலை செய்வது குற்றம். அதைச் செய்பவன் கொலைகாரன் என்றால்... எதுவும் செய்யாத குடும்பத்தினரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் உங்களுக்கெல்லாம் என்ன பெயர்?