Published:Updated:

`உன்னை நம்பித்தானே பேச வந்தேன், இப்போ இப்படிப் பேசுறீயே!'- மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை

`உன்னை நம்பித்தானே பேச வந்தேன், இப்போ இப்படிப் பேசுறீயே!'- மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை
`உன்னை நம்பித்தானே பேச வந்தேன், இப்போ இப்படிப் பேசுறீயே!'- மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவைச் சேர்ந்த பட்டியலினச் சிறுமி சிந்துஜா (பெயர் மாற்றம்). அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் நரேஷ், சூரமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் அவனுடன் நட்பாகப் பழகி வந்திருக்கிறார் சிந்துஜா. ஒரு கட்டத்தில் நரேஷ் காதலிப்பதாகக் கூறியதால் சிந்துஜாவும் சரி என்று சம்மதித்திருக்கிறார். இந்த விவகாரம் தெரியவந்ததும் சிந்துஜாவை அழைத்த பெற்றோர்கள் அவரைக் கண்டித்திருக்கிறார்கள். அதனால் நரேஷுடன் பேசுவதை தவிர்த்த சிந்துஜா படிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ``நாம் நட்பாகவாவது பழகலாம்” என்று சிந்துஜாவிடம் கூறியிருக்கிறார். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் சிந்துஜாவும் சம்மதித்திருக்கிறார். கஞ்சா, குடி போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த நரேஷ், சிந்துஜாவைப் பழிவாங்க வேண்டும் என்று தனது போதை நண்பர்கள் மொரட்டாண்டி வெங்கடேஷ் (எ) சூரியா (22), விநாயகபுரம் ராஜா (எ) ராக்கெட்ராஜா (32) என்பவர்களிடம் கூறியிருக்கிறார். அப்போது, ``எதையாவது சொல்லி நம் இடத்திற்கு அவளை கூட்டிக்கிட்டு வந்துவிடு” என்று அவர்கள் ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் மாலை டியூஷனுக்கு கிளம்பிக்கொண்டிருந்த சிந்துஜாவிடம், தனது பைக்கில் அழைத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார் நரேஷ். இந்தச் சூழ்ச்சி எதையும் அறியாத சிந்துஜாவும் அவருடன் பைக்கில் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில், ``உன்னைப் பிரிஞ்சது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்கிட்ட ஒரு 5 நிமிடம் உட்கார்ந்து பேசினால் ஆறுதலாக இருக்கும்” என்று நரேஷ் கூற, ``சரி பேசிட்டு டியூஷன் போயிடலாம்” என்று கூறியிருக்கிறார் சிந்துஜா. வெளியில் பேசினால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று கூறி சேதராப்பட்டில் இருந்த ராஜா (எ) ராக்கெட் ராஜாவின் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தொடர்ந்து, ``நான் உன்னை மறக்க வேண்டுமென்றால் இப்போது நீ என்னுடன் இருக்க வேண்டும்” என்று கூற அதிர்ந்து போன அந்தச் சிறுமி, ``உன்னை நம்பித்தானே பேச வந்தேன். இப்போ இப்படிப் பேசுறீயே.. ப்ளீஸ் என்னை விட்டுடு.. நான் நடந்தே வீட்டுக்குப் போயிடறேன்” என்று கதறி அழுது கொண்டிருந்தபோதே, ஏற்கெனவே அங்கு இருந்த ராக்கெட் ராஜா, வெங்கடேஷ் (எ) சூரியாவும் உள்ளே நுழைந்தனர். அந்தச் சிறுமியின் வாயையும், கையையும் பிடித்து மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

டியூஷனுக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, நரேஷ் பெயரில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். உடனே சுதாரித்த காவல்துறை அதே பகுதியில் பதுங்கியிருந்த நரேஷை தூக்கி வந்து விசாரணை செய்திருக்கிறது. நடந்த சம்பவம் குறித்து நரேஷ் விவரித்த விதத்தைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்து போயிருக்கின்றனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ராக்கெட் ராஜா, வெங்கடேஷ் (எ) சூரியா இருவரையும் கைது செய்தது காவல்துறை.

ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவிதாவிடம் பேசினோம். ``நரேஷ் பாலிடெக்னிக் படித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் (எ) சூரியாவும், தனியார் பேருந்து ஓட்டுநர் ராக்கெட் ராஜாவும் போதைப் பழக்கங்களின் மூலம் அவனுக்கு நண்பர்களானவர்கள். இவர்கள் 3 பேரும் திட்டமிட்டுத்தான் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். 4 மணி நேரத்திற்குப் பிறகு நரேஷ் அந்தச் சிறுமியை அவரது வீட்டிற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார். இதற்கிடையில்தான் சிறுமியின் பெற்றோர்கள் எங்களிடம் புகார் அளித்தனர். அவர்கள் நரேஷ் பெயரைச் சொன்னவுடன் அவரை அழைத்து வந்து செய்து விசாரணை செய்தோம். உண்மையை ஒப்புக் கொண்டதோடு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற இருவரையும் பிடித்து விசாரணை செய்தோம். அந்தச் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்ததாக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அந்தச் சிறுமி தெளிவாகக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவர்கள் மீது ஆள் கடத்தல், கூட்டு வன்புணர்ச்சி, கொலை மிரட்டல் மற்றும் போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்” என்றார்.

புகார் வந்த ஒரு மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்த ஆரோவில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.