Published:Updated:

`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்!''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்

`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்!''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்
`ஏதோ உள்ளுணர்வு எனக்குள் சொன்னது; அறையைக் காலி செய்தேன்!''- இலங்கையில் உயிர் தப்பிய இந்தியர்

லங்கை குண்டுவெடிப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இறந்தவர்களில் கே.ஜி. ஹனுமந்தரையப்பா மற்றும் எம்.ரங்கப்பா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது.  தும்கூரைச் சேர்ந்த ரமேஷ், பி.டி.எம். லேஅவுட் பகுதியைச் சேர்ந்த நாகராஜா மற்றும் ஏலஹங்காவைச் சேர்ந்த புருஷோத்தம் ஆகியோரும் இலங்கை குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் மூவரும் பலியானதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. இவர்கள், கொழும்பு நகரில் உள்ள சங்கரி வா ஹோட்டலில் தங்கியிருந்தபோது குண்டு வெடித்ததில் உயிரிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

கர்நாடக முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இலங்கைக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் சிக்கியுள்ளனர். இருவர் பலியாகியிருப்பது எனக்கு வருத்தத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.   இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிறகு, ஓய்வெடுப்பதற்காக இவர்கள் இலங்கை சென்ற நிலையில், குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளரும்  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவருமான மனோகர் எம்.எல்.சி கூறுகையில், ``நானும் சங்கரிலால் ஹோட்டலில்தான் தங்கியிருந்தேன். ஏதோ உள்ளுணர்வு  எனக்குள் சொன்னது. சற்று அசெளகரியமாகவும் உணர்ந்தேன். உடனே, சங்கரிலால் ஹோட்டல் அருகேயுள்ள மற்றொரு ஹோட்டலில் அறை புக் செய்து அங்கே சென்றுவிட்டேன். கொழும்பு நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே குடும்பத்தினரையும் பார்த்தேன். குண்டுவெடித்ததை அடுத்து, உடனடியாக தாய்நாடு திரும்பிவிட்டேன். அனில் கும்ப்ளே குடும்பத்தினரும் இந்தியா திரும்பினர்'' என்று தெரிவித்துள்ளார். 

பலியானதாகச் சொல்லப்படுபவர்களில் ஏலஹங்கா எம்.எல்.ஏ விஷ்வநாத்தின் மாமனார் புருஷோத்தமும் ஒருவர். இதையடுத்து விஷ்வநாத் கொழும்பு விரைந்துள்ளார்.  விஷ்வநாத் மனைவி தன் தந்தை குண்டுவெடிப்பில் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.