திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கரும்பு விவசாயம் நடந்து வருகிறது. அதேபோல நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளும் இயங்கிவருகின்றன. இங்கு ஏராளமானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனியை அடுத்துள்ள பெரியம்மாபட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பலர் கொத்தடிமைகளாக இருப்பதாக நெய்க்காரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபுக்கு வந்த தகவலின் அடிப்படையில், மதுரை, தேனி, விழுப்புரம், பாண்டிச்சேரி, கரூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மீட்கப்பட்டு, போலீஸார் உதவியுடன் அவரர் ஊர்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து நெய்க்காரப்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ``விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள கரும்புத் தோட்டங்களில் விளையும் கரும்புகளை வெட்டிக்கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். கரும்பு வெட்டுவதற்காக சண்முகத்திற்கு அதிக நபர்கள் தேவைப்படுவதால் தமிழகம் முழுவதுமிருந்து ஆள் பிடிப்பதற்காக சண்முகத்திடம் சங்கர், பிரசாந்த் என்கிற இருவரும் ஆட்களை பணிக்கு அழைத்து வந்துள்ளனர்.

குறிப்பாக இவர்கள் இருவரும் ஆதரவின்றி உள்ள நபர்கள் மற்றும் வறுமையில் தவிக்கும் குடும்பங்களை பார்த்து மாதா மாதம் நல்ல சம்பளம் தருவதாகக் கூறி ஆசைகாட்டி சண்முகத்திடம் கொண்டுவந்து விட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்படும் நபர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஆண்டுக்கணக்கில் வேலை கொடுத்து, குடும்பத்தினரை காணவிடாமல் கொடுமைப்படுத்தி, வேலை செய்யாதவர்களை, தப்பித்து போக முயல்பவர்களை கரும்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

முதலில் மீட்கப்பட்டவர்களை உரிய இடங்களில் சேர்க்க வேண்டும். இதையடுத்து தலைமறைமாகிவிட்ட சண்முகம் மற்றும் அவர் கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட செல்வி என்ற பெண்ணிடம் பேசினோம். ``என் கணவர் உயிரிழந்து விட்டார். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை என் அம்மாவிடம் விட்டுவிட்டு வந்து 5ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது அவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. எங்களைப் போல இன்னும் நூற்றுக்கணக்கானோர் இதுபோல் சிக்கியிருக்கின்றனர். அவர்களையும் மீட்டு குடும்பத்தாரிடம் சேர்க்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.