Published:Updated:

தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்... 16 வயது சிறுவன் குஜராத்தில் கைது!

Dhoni | சென்னை சூப்பர் கிங்ஸ்
Dhoni | சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் போட்டியில் தோற்றதற்காக சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளை, சிறார் வதை செய்துவிடுவதாக 16 வயதுச் சிறுவன் மிரட்டியுள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த சிறுவன் கைது செய்யப்பட்டதோடு, தோனியின் வீட்டுக்குப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. தினேஷ் கார்த்தி கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த புதன்கிழமை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றதாகக் கூறி தோனி மற்றும் கேதர் ஜாதவ் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் சென்னை அணியை வறுத்தெடுத்தனர்.

இதன் உச்சக்கட்டமாக குஜராத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தோனியின் மனைவி சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்து போட்டியில் தோற்றதற்காக அவர்களின் 5 வயது மகளை சிறார் வதை செய்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அந்தச் சிறுவனின் சமூக வலைதளப் பதிவு நாடு முழுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

#Dhoni
#Dhoni

இதையடுத்து, அந்தப் பதிவை பதிவிட்டது குஜராத் மாநிலத்தில் நம்னா கப்பாயா என்ற கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் என்று தெரியவந்துள்ளது. ராஞ்சியைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததையடுத்து அந்தச் சிறுவனை குஜராத் போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாகப் பேசியுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் சௌரப் சிங், ``சிறுவனிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். முதல் தகவல் அறிக்கை ராஞ்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிறுவனை ராஞ்சி போலீஸாரிடம் ஒப்படைப்போம்" என்று கூறியுள்ளார்.

தோனி ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று வருவதால், அவரின் மனைவியும் மகளும் மட்டுமே ராஞ்சியில் அவர்களது பண்ணை வீட்டில் தற்போது வசித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களது வீட்டுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீருடையில் மட்டுமன்றி சாதாரண உடையிலும் போலீஸ்காரர்கள் அவர்களது வீட்டைக் கண்காணித்து வருகின்றனர்.

#Dhoni
#Dhoni
தோனி, நியாயமாரே... பிராவோவுக்குப் பதில் கேதர் ஜாதவா... தலைவனுக்கு என்னதான் ஆச்சு?! #KKRvCSK #Dhoni

சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களை வயதைக் காரணம் காட்டி தண்டிக்காமல் விடக்கூடாது என்றும் விளையாட்டுப் போட்டிகளை போட்டிகளாக மட்டுமே பார்க்க வேண்டும், இல்லையென்றால் இதுபோன்ற நிகழ்வுகளை அதிகம் பார்க்க வேண்டியிருக்கும் என்பது போன்றும் விமர்சனங்கள் கூறப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு