Published:Updated:

`ஆனந்த நடனம்; அன்னாசிப் பழ கர்ப்பம்’ வீடியோவில் நித்யானந்தா குறிப்பிட்ட ஜூ.வி கட்டுரை சொல்வது என்ன?

கடந்த 2 நாள்களுக்கு முன்பு, நித்யானந்தா, தனக்கும் வலம்புரி ஜானுக்கும் நிகழ்ந்த பிரச்னை ஒன்றை `ஜூனியர் விகடன்' இதழில் முதன்முதலாக செய்தியாக வெளியிட்டதாகவும் அதன் பிறகு தொடர்ச்சியாகத் தன்னைத் தாக்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரை என்ன சொல்கிறது?

இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறார் நித்யானந்தா. நியானந்தா ஈக்வடார் நாட்டில் தீவு வாங்கியது, நித்தியின் `ஹீலிங்' வசியம், ஐ.நா சபைக்கு அவர் அனுப்பிய கடிதம் எனக் கடந்த மூன்று வாரங்களாக ஜூனியர் விகடன் இதழில் நாம் முதன்முதலில் வெளியிட்ட செய்திகள் தற்போது இந்திய ஊடகங்களாலும் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டிங் ஆகியுள்ளன.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு, வழக்கம்போல் தன் சீடர்களுக்கு ஆன்லைனில் `சத்சங்கம்' ஆற்றிய நித்யானந்தா தனக்கும் மறைந்த பேச்சாளர் வலம்புரி ஜானுக்கும் நிகழ்ந்த பிரச்னை ஒன்றை `ஸ்ஸூ...னியர் விகடன்' இதழில் (ஜூனியர் விகடனை அப்படித்தான் நித்தி உச்சரித்தார்!) `அன்னாசிப் பழ கர்ப்பம்' என்ற தலைப்பில் முதன்முதலாக செய்தியாக வெளியிட்டதாகவும் அதன் பிறகு தொடர்ச்சியாகத் தன்னைத் தாக்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த அந்த `அன்னாசிப் பழ கர்ப்பம்' என்ற கட்டுரை பற்றி பலரும் நம்மைத் தொடர்புகொண்டிருந்தனர். நமது ஆவணங்களைத் தேடிப் பார்த்தபோது, 17.08.2003 அன்று தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்பட கட்டுரையாக அது வெளிவந்திருந்தது.

நித்தி குறிப்பிட்ட அந்த ஜூனியர் விகடன் இதழ்
நித்தி குறிப்பிட்ட அந்த ஜூனியர் விகடன் இதழ்

நித்யானந்தா தன்னைப் பற்றி முதன்முதலில் சர்ச்சையாக வெளியான கட்டுரையாக குறிப்பிட்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் எந்த சர்ச்சையும் இல்லாமல், பெரிதாக ஆரவாரம் இல்லாமல், புதிதாக பெங்களூர் ஆசிரமத்துக்குக் குடியேறியிருந்தார் நித்தி. தனது பெயரைப் `பரமஹம்ஸ ஸ்ரீநித்யானந்த சுவாமிகள்' எனச் சூட்டியிருந்தார்.

`ஹீலிங் டச்' என்ற தொடுதலின் மூலம் நோயைக் குணப்படுத்தும் முறையால் பிரபலமாகியிருந்ததாக நித்யானந்தாவை அறிமுகம் செய்யும் அந்தக் கட்டுரை, அவர் மீது புகார்கள் எழுந்திருப்பதாகவும் அதில் வலம்புரி ஜானுக்கு தொடர்புள்ளதாகவும் தொடங்குகிறது. 2003-ம் ஆண்டு வெளியான அந்தக் கட்டுரையில் இருந்து...

* திருவண்ணாமலையில் பிறந்து, வளர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளோமா வரை படித்த ராஜசேகரனுக்கு ஒரு கட்டத்தில் துறவு வாழ்க்கை மீது பற்று வந்திருக்கிறது. ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை பல இடங்களுக்குச் சென்று பலருடன் கலந்துரையாடிவிட்டு,1998-ம் ஆண்டு சென்னையிலுள்ள ராமகிருஷ்ணா மடத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார் ராஜசேகரன். இது முடிந்து வெளியே வந்தபோது, ராஜசேகரன் நித்யானந்தாவாக மாறிவிட்டார்.

நித்யானந்தா கட்டுரை
நித்யானந்தா கட்டுரை

* ``ஞானி என்பவர் மதங்களைத் தாண்டியவராக இருக்க வேண்டும். அதிலும் நோய் குணமாக்கும் வேலையைச் செய்பவர் இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர் கிறிஸ்துவர்களையோ, முஸ்லிம்களையோ அரவணைப்பது இல்லை, கவனத்தில் கொள்வதும் இல்லை" என்ற புகார் நித்தியின் மீது சொல்லப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* ``தனது ஆசிரமத்தின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு, பார்க்கும் வி.ஐ.பி-க்களிடம் எல்லாம் இடத்தை வாங்கித் தரச்சொல்வதும், பணம் கேட்பதும் என்றே கவனத்தைச் செலுத்துகிறார்" என்றும்,

* "தனது தியானப் பயிற்சியின் ஒரு பகுதியாக `ஆனந்த நடனம்' என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் கலந்துகொண்டு ஆண்களும் பெண்களும் ஆடும் நடனம் அருவருப்படைய வைக்கிறது. தியான முறையின் நோக்கத்தையே இது கேள்விக்குள்ளாக்குகிறது. இவற்றையெல்லாம் தாண்டி எதிலும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதில் கவனமாக இருக்கிறார்" என்றும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.

நித்யானந்தா
நித்யானந்தா

* கர்நாடக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பேசும்போது, ``அவர் பேசும் பேச்சுக்கள் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனாலும், அவர் சாமியில்லை... ஆசாமி! ஆனந்த நடனம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து ஆடச் சொல்கிறார். அங்கே பெரிய இடத்து ஆண்களும் வருகிறார்கள். அங்கே எந்த அளவுக்கு எல்லாரிடமும் கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்?" என்கிறார்.

* ``நோயாளியாக நித்யானந்தாவிடம் வந்திருந்த வலம்புரி ஜான் அவரோடு ரொம்பவும் நெருங்கிவிட்டார். இதன் காரணமாக சுவாமியின் செயலாளராக உள்ள தனசேகர் என்பவருக்கும் வலம்புரி ஜானுக்கும் இடையே `சுவாமிக்கு யார் நெருக்கம்' என்பது குறித்த போட்டி எழுந்தது. இதன் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளையும் முஸ்லிம் தீவிரவாதிகளையும் வைத்து சுவாமிகளைக் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. சுவாமி அதில் தப்பிவிட்டார்" என நித்யானந்தாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் தகவல் கிடைத்ததாகக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

* வலம்புரி ஜான் பேசும்போது, ``அவர் ஞானகுருதான்; அதை மறுக்கவில்லை. ஆனால், அவரால் எனக்கு இருந்த சிறுநீரக நோய்க்கு குணம் அளிக்க முடியவில்லை. வலது நாசியால் தொடர்ந்து சுவாசித்தால் உடல் சூடேறும். அந்தச் சூட்டால் ஒருவரைத் தொட்டால் உடல் சூடாகுமே தவிர, அதனால் நோய் குணமாகாது. இந்த வித்தையை சுவாமிகள் கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்துவதை உணர்ந்தேன்'' என்கிறார்.

வலம்புரி ஜானுடன் நித்யானந்தா
வலம்புரி ஜானுடன் நித்யானந்தா

* மேலும் தொடரும் வலம்புரி ஜான், ``தற்போது மைசூர் ரோட்டில் பிடதி என்னும் இடத்தில் புதிதாக ஆசிரமம் கட்டி போயிருக்கிறார் சுவாமி. இதற்கு முன்பு, பெங்களூர் நகருக்குள் சாமுண்டீஸ்வரி ஸ்டூடியோவுக்குள்தான் அவரது வாசம். அதன் உரிமையாளர் குப்புசாமி நாயக்கருக்கு `உடல் நலம் தருகிறேன்' என்று சொல்லித்தான் அங்கு இருந்தார் சுவாமி. இந்த சுவாமிக்கு ஹிப்னாட்டிஸமும் தெரியும் என்கிறார்கள். இதை வைத்து குப்புசாமியின் சொத்துகளில் ஒரு பகுதியைத் தனது பெயருக்கு எழுதி வாங்கினார் சுவாமி. பின்னாளில் அவரது குடும்பத்தாருக்கு விஷயம் தெரிந்து சுவாமியின் பெயரில் எழுதப்பட்ட சொத்துகளின் உரிமைகளை நீக்கச் செய்துவிட்டார்கள்" என்கிறார்.

* தொடர்ந்து, ``சுவாமியைச் சுற்றியிருக்கும் சிலர் திட்டமிட்டு `சுவாமி இதைக் குணப்படுத்தினார். அதைக் குணப்படுத்தினார்' என்று செய்தி பரப்புகிறார்கள். இப்படித்தான் `குழந்தை இல்லாத 11 பேருக்கு அன்னாசிப் பழத்தை ஆசீர்வதித்து சுவாமி தந்தார். அதை உண்டு அவர்கள் கர்ப்பம் தரித்தார்கள்' என்றார் ஒரு இன்ஜினீயர்.

`ஏங்க... அன்னாசிப் பழம் உண்டால் கர்ப்பம் கலையுமே... நீங்கள் கர்ப்பம் உண்டானது என்கிறீர்களே..?' என்றேன். ஆனால் அந்த இன்ஜினீயரோ தன் கருத்தில் உறுதியாக இருந்தார். `இப்படி கர்ப்பமான ஒருவரையாவது எனக்குக் காட்டுங்கள்' என்றேன். பதிலே இல்லை" எனக் கூறியுள்ளார் வலம்புரி ஜான்.

வீடியோவில் பேசும் நித்யானந்தா
வீடியோவில் பேசும் நித்யானந்தா
`ஈக்வடாரா.. ஹெய்ட்டியா?!' - நித்யானந்தா விவகாரத்தில் என்ன சொல்கிறது வெளியுறவுத் துறை?

* ``ஒரு முறை ரஜினிகாந்த்துடன் பேச வேண்டும்... சந்திக்க வேண்டும்... அவரை இங்கு வரவழையுங்கள் என்று என்னிடம் சொன்னார் சுவாமி. ரஜினி, இவரை மாதிரி பல பேரைப் பார்த்திருப்பார். அவராக இங்கு வருவாரா... என்ன? சந்திப்பு நடக்கவில்லை. நான்தான் உதவவில்லை என்று என்மீது கோபம் கொண்டுதான் சுவாமியின் ஆட்கள் இப்படியெல்லாம் செய்தி பரப்புகிறார்களோ என்று நினைக்கிறேன்" எனத் தன் தரப்பு வாதங்களைக் கூறியுள்ளார் வலம்புரி ஜான்.

* இதுதொடர்பாக நித்யானந்தாவின் ஆசிரமத்தைத் தொடர்புகொண்டிருக்கிறது ஜூ.வி. அப்போது அவர் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள். அதனால் இ-மெயிலில் தொடர்புகொண்டிக்கிறது. அடுத்த நாளே அமெரிக்காவிலிருந்து போன் செய்து பேசியுள்ளார் நித்யானந்தா. ``தாராளமாக விரிவாகவே விளக்கம் சொல்றேங்கய்யா..." எனக் கூறியுள்ளார்.

* ஹீலிங் ட்ச் பற்றி பேசியவர், ``சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட பிரார்த்தனை, அவர் செய்யும் தியானம் எல்லாம் சேர்ந்துதான் குணம் கிடைக்கிறது. இதனால்தான் அவர்களையும் தியானம் செய்ய சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.

நித்யானந்தா
நித்யானந்தா

* ``நான் பணம் பண்ணுவதாகச் சொல்கிறார்கள். சாமியார்களுக்கு இன்று மக்களிடம் என்ன மரியாதை என்று உங்களுக்கே தெரியும். இந்த நேரத்தில் ஆன்மிகம், அற்புதம் என்று சொல்லி அவர்களிடமிருந்து ஒரு ரூபாயாவது வாங்குவது சாதாரண விஷயமா? இடத்தை வளைக்கிறேன் என்பதும் உண்மையான செய்தி இல்லை. ஆசிரமத்துக்குத் தேவையான இடம் இருக்கிறது. இதற்கு மேல் தர எத்தனையோ பேர் முன்வந்தபோதும் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன்.

நான் நடத்துகிற நடன நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இளம் பெண்கள், ஆண்கள் தொடங்கி முதியோர் வரை இதில் கலந்துகொள்கிறார்கள். `ஆனந்தமாக இரு' என்பதுதான் இதன் நோக்கம். இதில் ஆபாசம் எங்கே வந்தது. அதுவும் ரகசிய அறையிலா நடக்கிறது? பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம்.

அடுத்து அன்னாசிப் பழம் என்று குறிப்பாகத் தந்து நான் யாருக்கும் கர்ப்பம் தரிக்க ஆசிர்வதிக்கவில்லை. வரும் பக்தர்கள் ஏதேனும் ஒரு பழத்தை எடுத்துவந்து இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்வார்கள். அதை ஆசீர்வதித்து அவர்களுக்குத் தருவது ஆசிரம வழக்கம். அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார் நித்யானந்தா.

நித்யானந்தா
நித்யானந்தா
ஓஷோ பாணியில் நித்யானந்தா... அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன? - ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!

16 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூனியர் விகடன் இதழில் தன்னைப் பற்றிய புகார்களோடு வெளிவந்த முதல் கட்டுரையைத் தற்போது சுட்டிக்காட்டி பேசியுள்ளார் நித்யானந்தா. 2003-ம் ஆண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் இன்றும் பொருந்திப்போகின்றன. இந்தக் கால இடைவெளியில் இன்னும் பல புகார்கள் அதிகரித்தன; சர்ச்சைகள் பெருகின. நித்தியும் வளர்ந்தார். தற்போது தனக்கென்று தனியாக நாடே உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இவை அனைத்தும் அவரது சக்தியால் மட்டுமே அடைய முடிந்ததா என்பதுதான் நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு