Published:Updated:

நக்சல் தடுப்பு வேட்டையில் மாயமான காவலர்கள் - வனப்பகுதியில் மீட்கப்பட்ட 17 உடல்கள்!

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர்மாநிலத்தில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடிக்கும். இதில் இருதரப்பிலும் உயிர்ச்சேதங்களும் ஏற்படும். நக்சல்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியிலும் மாநில அரசானது ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் சுக்மா பகுதியில் நக்சல்கள் தடுப்பு வேட்டையில் உள்ளூர் போலீஸ் படையினர் நேற்று களமிறங்கினர். இதில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கு நடந்த மோதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விமானம் மூலம் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நக்சல் தடுப்பு வேட்டை
நக்சல் தடுப்பு வேட்டை

பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நக்சல்களுக்கும் இடையே சுக்மா பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்துள்ளது. இந்த சண்டை பிறகு பாதுக்காப்பு படை வீரர்கள் 17 பேர் மாயமான தகவல் தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து அவர்களை தேடும் பணியை இன்று மேற்கொண்டுள்ளனர். வனப்பகுதியில் 17 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் DRF எனும் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள். இத்தனை ஆண்டுகால வரலாற்றில் நக்சல் தடுப்பு வேட்டையில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உயிரிழந்திருப்பது இதுவே முதற்முறையாகும். மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை கொண்டு இந்த போலீஸ் படை ஏற்படுத்தப்படும். நக்சல்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும். ஆயுதங்களை எவ்வாறு கையாளுதல் போன்ற பயிற்சிகளும் அதில் இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு படை வீரர் மரணம்
பாதுகாப்பு படை வீரர் மரணம்

இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள மாவட்ட காவல்துறையினர், ``நக்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் போலீஸ், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கமாண்டோ வீரர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எல்மகுண்டா பகுதியில் நக்சல்கள் அதிகளவில் கூடியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கமாண்டோ வீரர்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். இதனையடுத்து ரோந்து காவலர்கள் மின்பா கிராமப் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த 200-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் காவலர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இருதரப்புக்கும் இடையே சுமார் 2.30 மணி நேரத்துக்கு மேலாக சண்டை நீடித்தது. நக்சல்கள் தரப்பிலும் 5 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான நக்சல்களும் காயமடைந்துள்ளனர்.

நக்சல் தடுப்பு நடவடிக்கை
நக்சல் தடுப்பு நடவடிக்கை

இந்த ஆபரேஷன் முடிந்த பின்னர்தான் 17 காவலர்கள் மாயமானது எங்களுக்கு தெரியவந்தது. காயமடைந்த காவலர்களை ராய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அதில், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாயமான காவலர்களை தேடும் பணியை இன்று மேற்கொண்டோம். இதில் மாயமான 17 காவலர்களும் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தின் போது போலீஸார் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை காணவில்லை. நக்சல்கள் அவற்றை கைப்பற்றியிருக்ககூடும் ” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு