Published:Updated:

`தம்பி என்னை விட்டுட்டுப் போயிடுவானோங்கிற கோபத்துல செஞ்சுட்டேன்!’ - விசாரணையில் கதறிய அண்ணன்

`தம்பி மீதான அளவுகடந்த பாசத்தாலேயே செல்வராஜ் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். வருத்தத்தில் அவர் சாப்பிடாமலேயே இருந்தார். நாங்கள் சமாதானப்படுத்திய பின்பும் அவர் இறுக்கத்துடனும் வருத்தத்துடனுமே இருக்கிறார்’ என்கிறார்கள் போலீஸார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பெருந்தலையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி, பார்வதி தம்பதியர். 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பார்வதி பலியாகிவிட, 8 ஆண்டுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மூர்த்தியும் இறந்து போனார். இவர்களுடைய மகன்களாக செல்வராஜ் (22), அசோக்குமார் (17) இருவரும் சித்தப்பா சேட்டு, சித்தி மகேஸ்வரி ஆகியோருடன் தங்கிப் படித்து வளர்ந்துள்ளனர். சித்தப்பாவும் சித்தியும் கல் உடைத்து கஷ்டப்பட்டு அவர்களுடைய குழந்தைகளையும் வளர்ப்பதோடு, நம்மையும் வளர்த்து வருகிறார்களே என செல்வராஜ் படிப்பை விட்டுவிட்டு, அவரும் கல் உடைக்கும் வேலைக்குச் சென்றிருக்கிறார். அம்மா, அப்பா இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு தன்னுடைய வருமானத்தில் கிடைத்த பணத்தைவைத்து தம்பி அசோக்குமாருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து, படிக்க வைத்திருக்கிறார் அண்ணன் செல்வராஜ்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இந்தநிலையில், 11-ம் வகுப்பு படித்துவந்த அசோக்குமார், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டைவிட்டுச் சென்று மாயமாகியிருக்கிறார். தம்பியைத் தேடி பல இடங்களில் அலைந்து திரிந்த செல்வராஜுக்கு, அவருடைய தம்பி செங்கல்பட்டில் திருநங்கைகள் சிலருடன் இருக்கிறார் எனத் தெரியவந்திருக்கிறது. உடனே செங்கல்பட்டுக்குச் சென்று பேசி, சமாதானப்படுத்தி தம்பியை தாரமங்கலத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்.

கடந்த ஒரு வார காலமாக `எனக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை. நான் மறுபடியும் செங்கல்பட்டுக்குப் போய் திருநங்கைகளுடனேயே இருந்துக்குறேன். நான் திருநங்கையாக மாறப்போறேன். என்னை விட்ருங்க' என அசோக்குமார் சொல்லியிருக்கிறார். திடீரென நேற்று காலை துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அவர் கிளம்ப முற்பட்ட, அவருடைய அண்ணன் செல்வராஜ் அங்கு வந்து, `நீ மறுபடியும் அங்கே போவக் கூடாது' எனத் தடுத்து நிறுத்தி எச்சரித்திருக்கிறார்.

அசோக்குமார் அதைக் கேட்காமல் வாக்குவாதம் செய்து கிளம்பியிருக்கிறார். இதில் கோபமடைந்த செல்வராஜ் `என் பேச்சைக் கேக்கலைன்னா இன்னையோட செத்துப்போடா' என ஆடு அறுக்க வைத்திருந்த சூரிக்கத்தியை எடுத்து தம்பி அசோக்குமாரைக் குத்தி வீசியிருக்கிறார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?

இதில் படுகாயமடைந்த அசோக்குமாரை உறவினர்கள் மீட்டு தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அசோக்குமார் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தாரமங்கலம் போலீஸார், அசோக்குமாரின் உடலை பிரேத பரிசோதனக்கு அனுப்பிவைத்ததோடு, அவரைக் கொலை செய்த அவருடைய அண்ணன் செல்வராஜைக் கைதுசெய்தனர்.

கொலை செய்த செல்வராஜ்
கொலை செய்த செல்வராஜ்

விசாரணையின்போது செல்வராஜ், `அம்மா, அப்பா இறந்த பின்னாடி தம்பிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து படிக்கவெச்சேன். தம்பியை எனக்கு அவ்ளோ புடிக்கும். அவன் செங்கல்பட்டுல திருநங்கைகளோட இருக்குறது தெரிஞ்சதும் எனக்கு அழுகையே வந்துடுச்சு. அவனைப் பேசி சமாதானப்படுத்தித்தான் ஊருக்குக் கூட்டிட்டு வந்தேன். ஊருக்கு வந்தும் நான் திருநங்கையாவப் போறேன். என்னை விட்ருங்கன்னு சொல்லவும் கோபத்துல கத்தியை எடுத்து குத்திட்டேன். நான் வேணும்னு செய்யலை. தம்பி என்னை விட்டுட்டுப் போயிடுவானோங்கிற ஏதோ கோபத்துல செஞ்சிட்டேன்' என செல்வராஜ் போலீஸாரிடம் கதறி அழுதுள்ளார்.

`12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ -  அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்

``தம்பி மீதான அளவுகடந்த பாசத்தாலேயே செல்வராஜ் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். தம்பியைக் கொலை செய்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அவர் சாப்பிடாமலேயே இருந்தார். நாங்கள் சமாதானப்படுத்திய பின்பும் அவர் இறுக்கத்துடனும், வருத்தத்துடனுமே இருக்கிறார். போலீஸார் கொஞ்சம் தாமதமாக சம்பவ இடத்துக்குச் சென்றிருந்தால், தம்பியைக் கொன்றுவிட்ட மன வருத்தத்தில் செல்வராஜும் தற்கொலை செய்துகொண்டிருப்பார்' என்றனர் விஷயமறிந்த போலீஸார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு