நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள சோலூர்மட்டம், தேனாடு வனத்துக்குள் வனத்துறைப் பணியாளர்கள் வழக்கமான ரோந்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். தேனாடு பகுதியில் ரோந்து மேற்கொண்டிருக்கும்போது கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. ஏதேனும் வன விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகமடைந்த வனத்துறையினர், தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சற்று தொலைவில் இரண்டு சிறுத்தைகள் அழுகிய நிலையில் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றின் அருகிலேயே நாய் ஒன்றின் சடலமும் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அதையடுத்து பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர், உதவி வனப்பாதுகாவலர் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூராய்வு செய்ததோடு, இறந்துகிடந்த சிறுத்தைகளின் உடலிலிருந்து ஆய்வு மாதிரிகளையும் சேகரித்தனர். அதே இடத்தில் இரண்டு சிறுத்தைகளின் உடலையும் எரியூட்டினர். பின்னர், விஷம் கலந்த இறைச்சியை உண்டதாலேயே இரண்டு சிறுத்தைகளும் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், ``இந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாடிக் கொன்றிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்மநபர், நாயின் சடலத்தில் விஷத்தை வைததுக் கலந்து வனப்பகுதியில் வீசியிருக்கிறார். அதை உண்ட இரண்டு சிறுத்தைகளும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றன.

பழிவாங்கும் நோக்கில் நடந்துகொண்ட அந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம். வனச்சட்டத்தின்படி அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.