சென்னை கீரிம்ஸ் சாலை அருகிலுள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற போவாஸ் (20). இவர் தன் அம்மாவோடு வசித்துவந்தார். சதீஷ்குமாரின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காலமானார். தனது தாயின் மீது அளவுகடந்த பாசம்கொண்ட சதீஷ், கடந்த சில நாள்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்று மதியம் 1 மணி அளவில் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளத் தனது பகுதி அருகேயுள்ள கூவம் ஆற்றில் இறங்கியிருக்கிறார். ஆற்றில் இறங்குவதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் சதீஷ்குமாரை மீட்க முடியவில்லை. இது குறித்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப்படையினர், படகு மூலம் சதீஷ்குமாரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். தாயைப் பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் கூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.