Published:Updated:

`ஒரே நாளில் சிக்கிய 22 போலி மருத்துவர்கள்!’ -ராணிப்பேட்டையில் அதிர்ச்சி

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஏழை மக்களைக் குறிவைத்து போலி மருத்துவர்கள் வீதிக்கு வீதி வலம் வருகிறார்கள். காய்ச்சல் சீசனில் `டிப்டாப்’ உடை அணிந்து நடமாடும் மருத்துவர்களாகவும் கிராமப்புறங்களில் முகாமிடுகிறார்கள். இந்த நிலையில், கொரோனா நேரத்திலும் போலி மருத்துவர்கள் `புற்றீசல்’ போல் பெருகியிருக்கிறார்கள். கொரோனா தொற்றினால், அரசு மருத்துவமனைகள் பக்கம் செல்ல அச்சப்படும் கிராமப்புற மக்களே இந்தப் போலிகளின் இலக்கு.

கலெக்டர் திவ்யதர்ஷினி
கலெக்டர் திவ்யதர்ஷினி

போலி மருத்துவர்களை முற்றிலுமாக களையெடுக்க ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி, சிறப்புக் குழுக்களை அமைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சில தினங்களுக்கு முன்பு அம்மூர், காவனூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த 4 போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதையடுத்தும், போலி மருத்துவர்கள் தொடர்பான தகவல்களைச் சிறப்புக் குழுவினர் ரகசியமாகத் திரட்டி வந்தனர்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 22 போலி மருத்துவர்கள் சிக்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரில் 7 போலி மருத்துவர்கள், கலவையில் 3 பேர், ஆற்காட்டில் 2 பேர், வாலாஜாபேட்டையில் ஒருவர், நெமிலியில் 3 பேர், அரக்கோணத்தில் 6 பேர் பிடிபட்டுள்ளனர். சிலர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் நடத்தி வந்த 33 கிளினிக்குகள் அதிரடியாக `சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

கிளினிக்கில் ஆய்வு செய்த அதிகாரிகள்
கிளினிக்கில் ஆய்வு செய்த அதிகாரிகள்

கிளினிக்குகளில் ஆய்வு செய்தபோது, கரு கலைப்பு, பிரசவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களும் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், 22 போலி மருத்துவர்களையும் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்கு பதிந்து 22 பேரையும் கைதுசெய்தனர். தப்பி ஓடிய போலிகளையும் வேட்டையாடுவதற்காக அதிகாரிகள் குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு