Published:Updated:

திருமணத்துக்கு முன்னரே உறவு;100 கசையடி! - இந்தோனேசிய இளைஞருக்கு நேர்ந்த கதி

இந்தோனேஷியாவில் கசையடி வழங்கப்பட்ட காட்சி
இந்தோனேஷியாவில் கசையடி வழங்கப்பட்ட காட்சி

இந்தோனேஷியாவின் ஏகெக் மாகாணத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. தவறிழைத்தால், கசையடி எனப்படும் தண்டனையில் பிரம்பால் பதம் பார்த்து விடுவார்கள்.

இந்தோனேஷியாவின் ஏகெக் மாகாணத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. பாலியல் குற்றம், சூதாடுதல், மது அருந்துதல், திருமணத்துக்கு முந்தைய உறவு, ஹோமோசெக்ஸ் போன்றவற்றுக்கு இங்கே பொது இடத்தில் வைத்து சாட்டையடி வழங்கப்படும். இது போன்ற தண்டனைகளுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏகெக் மாகாணத்தில் இத்தகைய கடுமையான தண்டனைகள் இன்னும் வழங்கப்பட்டுதான் வருகின்றன.

கசையடி
கசையடி

ஏகெக் மாகாணத்தில் உள்ள திமுர் மாவட்டத்தில் திருமணமாகாத 22 வயது இளைஞருக்குப் பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. இதைக் கண்டுபிடித்த இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், குற்றத்தை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கும் 100 கசையடி வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, இளைஞருக்கு நேற்று பொது இடத்தில் 100 கசையடி வழங்கப்பட்டது.

Vikatan

ஷரியத் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள், போலீஸார் சம்பவ இடத்தில் இருந்தனர். கசையடி கொடுக்கும் போது, கம்பு பல முறை முறிந்தது. கசையடி கொடுக்கும் இடத்தில் பிரம்புகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அந்த இளைஞர் மயக்கமடைந்த போதெல்லாம், சிறிய அளவில் மருத்துவ சிகிச்சை கொடுத்து கசையடி கொடுத்தனர். 100 கசையடி வாங்கியதில் அவரின் முதுகு, பின்புறம் பிய்ந்து தொங்கின.

மருத்துவமனைக்கக் கொண்டு செல்லப்படும் இளைஞர்
மருத்துவமனைக்கக் கொண்டு செல்லப்படும் இளைஞர்
ஏ.எஃப்.பி

கசையடி கொடுத்து முடிந்த பிறகு, இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இளைஞருடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கும் மற்றோர் இடத்தில் 100 கசையடி வழங்கப்பட்டது. கசையடி கொடுப்பதை காண ஏராளமான பொதுமக்களும் கூடினர். தற்போது, இந்தோனேஷியாவில் பெரும்பான்மையான மாகாணங்களில் ஷரியத் சட்டப்படி தண்டனை வழங்கப்படுவது குறைந்துள்ளது. ஆனால், ஏகெக் மாகாணத்தில் 99 சதவிகித மக்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், இங்கு மட்டும் தொடர்ந்து இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு