Published:Updated:

`கர்ப்பப் பரிசோதனைக்கு வந்த 3 சிறுமிகள்!’ -அதிர்ச்சியில் உறைந்த அரக்கோணம் அரசு மருத்துவர்கள்

கர்ப்பம்
கர்ப்பம் ( மாதிரிப் படம் )

அரக்கோணம் அருகே கர்ப்பம் தரித்த நிலையில், மகப்பேறு சிகிச்சைக்காக வந்த 3 சிறுமிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை, அமீர்பேட்டை, பாப்பான்குட்டை ஆகிய கிராமங்களில் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் திருமணம் செய்துகொண்டு கர்ப்பம் தரித்துள்ளனர்.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்
மாதிரி படம்

அந்த மூன்று சிறுமிகளும் அந்தந்த கிராமப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு பரிசோதனைக்காகச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமிகளுக்குப் பரிசோதனை செய்தனர்.

பின்னர், விவரங்களைக் கேட்டபோது, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும் பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதில், ஒரு சிறுமிக்கு 13 வயது மட்டுமே ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைப்பது, சட்டப்படி குற்றமாகும்.
சமூக நலத்துறை அதிகாரிகள்

இதுகுறித்து, மாவட்ட சமூக நலத்துறைக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அந்தச் சிறுமிகளின் வீடுகளுக்கு இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்தது, சட்டப்படி குற்றமாகும். ஆனாலும், எந்த மாதிரியான சூழ்நிலையில் சிறுமிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை விசாரித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் முடிவெடுக்க உள்ளனர்.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்
மாதிரிப் படம்

இதுகுறித்து விசாரிப்பதற்காக ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தில் கர்ப்பம் தரித்த சிறுமிகளையும், அவர்களின் பெற்றோர் மற்றும் கணவர்களை ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு