Published:Updated:

தந்தையுடன் மகளைக் கடத்திய கும்பல்; பைக்கில் விரட்டிய இளைஞர்கள்! - திருச்சி ஹைவேயில் நடந்த சேஸிங்

திருச்சியில் தந்தையையும் மகளையும் கடத்திச் சென்ற கும்பலை இளைஞர்களும், பொதுமக்களும் விரட்டிச்சென்று பிடித்தனர்.

kidnap
kidnap

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகிலுள்ள நடுப்பட்டி வயக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியார் தண்ணீர் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை முடித்த 19 வயது மகளையும் தனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்தார். இதையடுத்து மகளும் அவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்வது வழக்கம்.

இளைஞர்களால் தாக்கப்பட்டவர்
இளைஞர்களால் தாக்கப்பட்டவர்

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வேலையை முடித்துவிட்டு கணபதியும் அவரது மகளும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். வழியில், கணபதியின் பைக்கை மறித்த வேனில் வந்தவர்கள் கொடைக்கானல் செல்வதற்கு வழி கேட்டுள்ளனர். கணபதி வழி சொல்லிக்கொண்டிருக்கும்போது, திடீரென, வேனிலிருந்து ஒரு கும்பல் இறங்கியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் கணபதியின் மகளை வாயைப் பொத்தி வேனில் ஏற்ற முயன்றனர்.

தடுக்கப் போராடிய கணபதியையும் வேனில் ஏற்றிச் சென்றது கும்பல். இதைப் பார்த்துப் பதறிய அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் இருசக்கர வாகனத்தில் கடத்தல் கும்பல் சென்ற வேனை விரட்டிச் சென்றனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீரனூர் பக்கிரி காடு என்ற இடத்தில் அந்த வேனை மடக்கினர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

கணபதியையும் அவரது மகளையும் மீட்ட பொதுமக்கள், மூன்று பேரையும் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். மற்ற மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், 3 பேரையும் பிடித்துச் சென்றனர்.

`9 டீம்.. 35 போலீஸ்.. சேஸிங்..!’ - 21 நாள்களுக்குப் பிறகு கடத்தல் கும்பலிடமிருந்து இளைஞர் மீட்பு!

இதையடுத்து, கணபதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வையம்பட்டி காவலர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அமயபுரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், மணப்பாறை அடுத்த பூமாலைபட்டியைச் சேர்ந்த கிருபாகரன், சிதம்பரத்தைச் சேர்ந்த கிளம்பன் சூர்யா என்பது தெரியவந்தது. தப்பியோடிய குழந்தைவேல், செல்லபாண்டியன் உட்பட 3 பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

போலீஸாரிடம் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ` பொன்னம்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேல், கணபதியின் மகளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டார். அதற்கு கணபதி மறுத்தார். அதனால்தான் கணபதியையும் அவரது மகளையும் கடத்தினோம். இடையில் பொதுமக்கள் எங்களைப் பிடித்து திட்டத்தை முறியடித்து விட்டார்கள்' எனக் கூறியுள்ளனர்.