Published:Updated:

`பணக்கார மாப்பிள்ளை; பெற்றோரின் பேராசை!’ -காட்பாடியில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை

பணத்துக்கு ஆசைப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த பணக்கார இளைஞனுக்குப் பெற்றோரே சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் இரண்டு மகள்கள் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பும் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களின் உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கடப்பகுண்டா கிராமத்தில் உள்ள கோபிநாத் (30) என்பவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார் கோபிநாத்.

பள்ளி மாணவி
பள்ளி மாணவி

பணக்கார மாப்பிள்ளை என்பதால் சிறுமியின் பெற்றோரும் சம்மதித்தனர். இரண்டு பேரின் ஜாதகங்களையும் ஜோதிடரிடம் கொடுத்துப் பொருத்தம் பார்த்தனர். பொருத்தம் சரியில்லாததால் அக்காவுக்குப் பதில் 12 வயதுடைய தங்கையின் ஜாதகத்தைக் கொடுத்து பொருத்தம் பார்த்தனர். `10 பொருத்தமும் சிறப்பாக அமைந்திருக்கிறது’ என்று ஜோதிடர் சொல்லியுள்ளார்.

பெற்றோரும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். திருமணத்தில் விருப்பமில்லாத அந்த மாணவி, `நான் படிக்க வேண்டும்’ எனக் கூறி அழுதுள்ளார். இதனை எதிர்பார்க்காத பெற்றோர்,`சம்மதிக்கவில்லையென்றால், தற்கொலை செய்துகொள்வோம்’ என மிரட்டிக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, கடந்த 6-ம் தேதி சித்தூர் அருகே உள்ள ஒரு கோயிலில் அந்த இளைஞருக்கும் மாணவிக்கும் திருமணம் நடந்தது.

Representational image
Representational image

இதன்பின்னர், 8-ம் தேதி விருந்துக்காகக் காட்பாடிக்கு வந்தனர். மூன்று நாள்கள் மாணவியுடன் கோபிநாத் தங்கியிருந்தார். இந்த நிலையில், கல்விச் சான்றிதழ் வாங்குவதற்காக 9-ம் தேதி தாலியை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு மாணவி பள்ளிக்குச் சென்றார். தன் தோழிகளிடமும் ஆசிரியைகளிடமும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள் சமூக நலத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் மற்றும் விருதம்பட்டு காவல்துறையினர் மாணவியின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவியை மீட்டு கலெக்டர் சண்முகசுந்தரம் முன்பு ஆஜர்படுத்தினர். பிறகு, அல்லாபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் மாணவியைத் தங்க வைத்துள்ளனர்.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. கட்டாய குழந்தைத் திருமணம் செய்து வைத்த குற்றத்துக்காக மாணவியின் பெற்றோர், திருமணம் செய்த இளைஞர் கோபிநாத் மற்றும் அவரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சித்தூர் மாவட்ட எஸ்.பி-க்கு வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி பரிந்துரை செய்துள்ளார்.