Published:Updated:

ஹஃபிஸ் சயீத்தை சிறையில் அடைக்க முடியாது: பாகிஸ்தான்

Vikatan Correspondent
ஹஃபிஸ் சயீத்தை சிறையில் அடைக்க முடியாது: பாகிஸ்தான்
ஹஃபிஸ் சயீத்தை சிறையில் அடைக்க முடியாது: பாகிஸ்தான்
ஹஃபிஸ் சயீத்தை சிறையில் அடைக்க முடியாது: பாகிஸ்தான்

புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாதி ஹஃபிஸ் சயீத்திற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் தேவை என்றும், ஒவ்வொருவரையும் திருப்திபடுத்துவதற்காகவெல்லாம் அவரை சிறையில் அடைக்க முடியாது என்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி  தெரிவித்துள்ளார்.

இந்திய பத்திரிகையாளரும், யோகா குரு பாபா ராம் தேவுக்கு நெருக்கமானவருமான பிரதாப் வைதிக், அண்மையில் பாகிஸ்தான் சென்றபோது ஹஃபிஸ் சயீத்தை சந்தித்துப் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மறைமுக ஏற்பாட்டின் பேரிலேயே பிரதாப் வைதிக், ஹஃபிஸை சந்தித்துப் பேசியதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தூதராகவே அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்திருந்தது.

இதனிடையே மேற்கூறிய சந்திப்புக்காக பிரதாப் வைதிக்கிற்கு எதிராக சிலர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பஸித், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஹஃபிஸ் சயீத் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஹஃபிஸ் சயீத்திற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் தேவை என்றும், ஒவ்வொருவரையும் திருப்திபடுத்துவதற்காக அவரை சிறையில் அடைக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் சயீத் - வைதிக் இடையேயான சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும், அது தனிப்பட்ட இரண்டு நபர்களிடையேயான சந்திப்பு என்றும் அவர் கூறினார்.