Published:Updated:

`344 குழந்தைத் திருமணங்களை தடுத்தோம்!' -பெரம்பலூர் சைல்டு லைன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வருடத்துக்கு 80,000 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 344 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, சைல்டு லைன் 1098 அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர் சைல்டு லைன்
பெரம்பலூர் சைல்டு லைன்

இந்தோ அறக்கட்டளை அமைப்பின் உசேன், இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், “குழந்தைத் திருமண ஒழிப்பு என்பது ஆண்களின் முக்கியமான கடமை. அவர்கள் 18 வயதுக்குக் கீழான பெண்களைத் திருமணம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக 9 சட்டங்கள் உள்ளன. இதுகுறித்தும் குழந்தை திருமணங்கள் குறித்த பாதிப்புகள் குறித்தும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைத் திருமணத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறோம்.

அந்தவகையில், ஏப்ரல் 2018 முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை சைல்டு லைன் 1098 எண்ணுக்கு 2,097 பேர் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

புகார் கூறுபவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுகிறது. இதனால், குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகள் பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர் பள்ளி இடைநிற்றல், சிறார் பாலியல் வன்கொடுமைகள், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள் என இதுவரை 551 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 144 பள்ளிகளில் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி 21,256 மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

விழிப்புணர்வு பிரசாரங்கள்
விழிப்புணர்வு பிரசாரங்கள்

அதேபோல், 306 விழிப்புணர்வு கூட்டங்கள் மூலம் 23,188 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளோம்.

இதுமட்டுமல்லாமல், பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட அளவில் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் 2015 ஆண்டு முதல் 2019 அக்டோபர் மாதம் வரை 344 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

Vikatan

தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெறாத மாவட்டமாகப் பெரம்பலூரை மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம்” என்றார்.