
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், கடந்த 2 நாள்களில் மட்டும் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், செலவுகளைக் குறைக்க இந்த இக்கட்டான சூழலிலும் பல திருமணங்கள் நடக்கின்றன. இதையே, காரணமாக வைத்து 18 வயதுகூட நிரம்பாத பெண் குழந்தைகளுக்கும் பெற்றோரே அவசர அவசரமாகத் திருமணம் செய்துவைப்பது, அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பல மைனர் திருமணங்கள் குறித்து தகவல்கள் கிடைக்காதபோதும், புகார் வரும் திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள், வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த மைனர் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். பெற்றோரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டுக் காப்பகத்திலும் தங்க வைத்துள்ளனர். இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘ஊரடங்கு அமலுக்கு வந்த நாளிலிருந்தே மைனர் திருமணங்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டோரிடமிருந்து வரும் புகார், பொதுமக்களிடமிருந்து வரும் தகவலை வைத்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
மே மாதம் தொடங்கி இதுநாள் வரை 35 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இந்த நேரத்தில், கோயில்களிலும் மண்டபங்களிலும் திருமணம் நடத்த முடியாது என்பதால் மாப்பிள்ளை அல்லது மணமகள் வீட்டில் திருமண ஏற்பாடுகளைச் செய்து மணமுடித்துக் கொள்கிறார்கள். ஊரடங்கில் அதிகாரிகளும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்துப் பெற்றோரே குழந்தைகளை இந்தநிலைக்குத் தள்ளிவிடுகிறார்கள். மீட்கப்பட்ட பெண் குழந்தைகள் பலரை கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளோம்.

சில பெண் குழந்தைகளை ஊர்ப் பஞ்சாயத்தார் பொறுப்பில் விட்டுள்ளோம். அவர்கள் எங்களிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ‘திருமணம் நடத்த விடமாட்டோம்’ என்று எழுதிக் கொடுத்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஊரடங்கு முடியும் வரை கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளோம். 18 வயது பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். மணமகன், சிறுமியின் பெற்றோர், மணமகனின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றனர்.