Published:Updated:

பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!

பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!
பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்றவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீண்ட காலமாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண் பார்வையற்றவர்கள், மதுரை கலெக்டர் அலுவலகம் முன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள். 'பேருக்கு நடத்தி விட்டு போய் விடுவார்கள்' என்று அதிகாரிகளும், காவல்துறையும் நினைத்திருக்க, அதற்கு மாறாக பார்வையற்றவர்களின் போராட்டம் நீடித்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!

இதையடுத்து, அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், 'கலெக்டர் வந்து எங்கள் கோரிக்கையை கேட்டால்தான் எழுந்திருப்போம்' என்று கூறிய பார்வையற்ற ஆண்களும், பெண்களும், மாற்றுத்திறனாளி அலுவலகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுபோகாமல், அவர்களை அப்புறப்படுத்துவதிலேயே காவல்துறையினர் குறியாக இருந்தனர். நேரம் ஆக ஆக, போராட்டம் பெரிய அளவில் செல்ல, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர், பார்வையற்றோர் சங்க நிர்வாகிகளை அடித்தும், தள்ளிவிட்டும் சித்ரவதை செய்து தூக்கி சென்றார்கள். இதை அறிந்த மற்ற பார்வையற்றவர்கள் சத்தம் போட, அவர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். காவல்துறை ஏ.சி. மற்றும் ஐ.எஸ். பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த தாக்குதலில் ஈடுபட்டது மேலும் வேதனையை ஏற்படுத்தியது.

பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!

அப்போது அங்கு கூடிய பத்திரிகையாளர்களை காவல்துறையினர் பார்த்ததும், 'நாங்கள் ஒன்றும் செய்யவில்லை' என்பது போல் ஜகா வாங்கினார்கள்.

அதேநேரத்தில், வெளியே இவ்வளவு பிரச்னைகள் நடந்து கொண்டிருந்தாலும், கலெக்டருக்கு தகவல் கொடுத்தும், எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல், கலெக்டர் தனது அறையில் அமைதியாக அமர்ந்திருந்தார். பார்வையற்றோரின் குறைகளை கேட்க அவர் தயாராக இல்லை. இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பார்வையற்றவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியாக, மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சகுந்தலா மற்றும் சில அதிகாரிகள் வந்த பார்வையற்றவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஒப்புதல் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. மூன்று மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்தப்பகுதி பெரும் பரபரப்பாக இருந்தது.

பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!

இதுகுறித்து நம்மிடம் பேசிய இச்சங்ககத்தை சேர்ந்த பெருமாள் பாண்டியன், ''மதுரை மாவட்டத்தில் பார்வையற்றவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எங்களுக்கு அரசு அறிவிக்கும் எந்த நலத்திட்டங்களும் வந்து சேரவில்லை. எங்களுக்காக குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கினார்கள். அதை பெற வேண்டுமானால், ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்கிறார்கள். நாங்கள் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம்.

எங்களுக்காக பொது தொலைபேசி பெட்டி வைத்து நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார்கள். இந்த நவீன செல்போன் காலத்தில் அதில் ஒரு வருமானமும் இல்லை. எனவே, அந்த இடத்திலேயே பெட்டிக்கடை வைத்து நடத்திக்கொள்ள அனுமதி கேட்கிறோம். எங்களுக்கு வங்கி கடன் வசதி தருமாறு கேட்கிறோம். நாங்களும் பொதுமக்கள்தான் எங்கள் கோரிக்கையை கலெக்டர் கேட்டால் நன்றாக இருக்கம் என்றுதான் காலையிலிருந்து போராடுகிறோம். ஆனால், அவரோ காவல்துறையை வைத்து அடித்து துரத்த பார்க்கிறார். காவல்துறையோ, பொதுமக்களை வைத்து எங்களை அடிக்க பார்க்கிறது'' என்றார் வேதனையுடன்.

பார்வையற்றவர்களை பந்தாடிய காவல்துறை!

சாதரணமாக அரசியல் கட்சிகள், சாதி சங்கங்கள் போராட்டம் நதத்தும்போது போக்குவரத்தை மாற்றிவிட்டு, அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் காவல்துறை, பார்வையற்றவர்களை புழு பூச்சிகள் போல அடித்து விரட்டிய காட்சி பார்ப்பவரை கண்கலங்க வைத்தது.

இன்று நடந்த போராட்டத்தின்போது, பார்வையாளர்களுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று மதுரை பத்திரிகையாளர்கள் எங்கேயும் செல்லாமல் பாதுகாப்பாக இருந்து கவனித்தார்கள். இல்லையென்றால் பார்வையற்றவர்களை பந்தாட ஆரம்பித்த காவல்துறை, முழுமையாக பந்தாடியிருக்கும்.

செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து