Published:Updated:

சைக்கிள் உரசியதால் ஆத்திரம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து, உதைத்த போலீஸ்!

விகடன் விமர்சனக்குழு
சைக்கிள் உரசியதால் ஆத்திரம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து, உதைத்த போலீஸ்!
சைக்கிள் உரசியதால் ஆத்திரம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து, உதைத்த போலீஸ்!
சைக்கிள் உரசியதால் ஆத்திரம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி அடித்து, உதைத்த போலீஸ்!

சென்னை: காவல்துறை அதிகாரி மீது மூன்று சக்கர சைக்கிள் உரசியதால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த நபரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த கொடூரம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை மணப்பாக்கம் சிக்னலில் கடந்த 7ஆம் தேதி நந்தம்பாக்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வாகனத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்துகிறார். அந்த வாகனமும் சாலையில் நிறுத்தப்படுகிறது. இந்த சமயத்தில் சென்னை மாநகராட்சியின் துப்புரவு ஊழியர் ரத்னம், மூன்று சக்கர வாகனத்தில் சென்ற போது சைக்கிள் டயர், காவல்துறை அதிகாரி மீது உரசுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி, துப்புரவு பணியாளர் ரத்தினத்தை தூக்கிப் போட்டு பந்தாடுகிறார். பிறகு அவர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அங்கு நடந்த களேபரத்தை சென்னை மாநகராட்சியின் செங்கோடி சங்க பொது செயலாளர் சீனிவாசலு கூறுகையில், "சம்பவத்தன்று துப்புரவு பணியாளர் ரத்னம், குப்பைகளை டிரை சைக்கிளில் வைத்து செல்லும் போது அங்கு வாகன சோதனையிலிருந்த காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது ரத்தினத்தின் சைக்கிள் தெரியாமல் உரசி விடுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் துறையினர் ரத்தினத்தை நைய புடைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு ரத்னம் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். இதனால் இருதரப்பிலும் சுமூக தீர்வு ஏற்பட்ட சூழ்நிலையில் இன்ஸ்பெக்டர் அருணாசலராஜா, ரத்தினத்தை உடைகளை களைந்து அவரை லாக்அப்பில் தள்ளி மீண்டும் அடித்து உதைத்துள்ளார். இதுகுறித்து நாங்கள் நியாயம் கேட்க சென்ற போது, உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று தகாத வார்த்தைகளால் பேசினார். அதோடு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக புகார் பெற்று ரத்னத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ட்ரை சைக்கிளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிரச்னை பூதாகரமாக வெடித்ததால் உயர் காவல்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரத்னம் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதியளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றோம். இந்த சம்பவத்தில் துப்புரவு பணியாளரின் ட்ரை சைக்கிள் மற்றும் அவரது கை உரசியதால் பிரச்னையை காவல்துறை அதிகாரிகள் பெரிதுப்படுத்தி விட்டார்கள். இன்னும் தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. தொடர்ந்து அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்று சம்பந்தப்பட்ட காவல்துறையினர் ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறார்கள். மேலும் காவல்துறை இன்ஸ்பெக்டரின் அநாகரீக பேச்சைக் கண்டித்தும் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்து இருக்கிறோம்" என்றார்.

இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. அதை காவல்துறையினர் ஊதி பெரிதுப்படுத்தி விட்டார்கள். இதுபோன்ற காவல்துறையினரால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது. தீண்டாமை பாவம் என்பது பாடப்புத்தகத்தில் மட்டும் அச்சிடப்படாமல் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் பதிவாக வேண்டும்.

-எஸ்.மகேஷ்