Published:Updated:

`பிறந்து 15 நாள் ஆன குழந்தை; பேரம்பேசி விற்ற தந்தை' - நாகைக்கு அதிர்ச்சி கொடுத்த 4 பேர் டீம்

அசன் முகமது, பாத்திமா
அசன் முகமது, பாத்திமா

தன் குழந்தையைக் காண மதுரை மதரஸா சென்ற அஸரப் அலி, அங்கு குழந்தை இல்லை என்பதையும் விற்கப்பட்டுவிட்டது என்பதையும் அறிந்து மதுரை கலெக்டரிடம் முறையிட்டார்.

நாகை மாவட்டத்தில் பிறந்து 15 நாளே ஆன குழந்தையைப் பெற்றோர் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயதுப் பெண் குழந்தையை விற்கச் சென்ற விவகாரத்தில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

Vikatan

நாகையை அடுத்துள்ள நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அஸ்ரப்அலி. மீன் வியாபாரம் செய்து வரும் இவர் சில ஆண்டுகளுக்கு முன் நிர்மலா என்ற பெண்ணை நிர்மலா பேகம் என்று பெயர் மாற்றி காதல் மணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு மும்தாஜ் பேகம் என்ற 3 வயதுப் பெண் குழந்தையும் ராஜா உசேன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் தனது பெண் குழந்தையை மதுரை மதரஸாவில் சேர்த்து விடும்படி நாகூரைச் சேர்ந்த நண்பர் அசன் முகமதுவிடம் , அஸ்ரப்அலி உதவி கேட்டதாகவும், குழந்தையை அழைத்துச் சென்ற அசன் முகமது மதுரையில் உள்ள இஸ்லாமிய மதராஸாவில் சேர்க்காமல், கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு அந்தப் பெண் குழந்தையை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தன் குழந்தையைக் காண மதுரை மதரஸா சென்ற அஸரப் அலி, அங்கு குழந்தை இல்லை என்பதையும் விற்கப்பட்டுவிட்டது என்பதையும் அறிந்து மதுரை கலெக்டரிடம் முறையிட்டார். இதையடுத்து, குழந்தை மீட்கப்பட்டு நாகை மாவட்ட குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அஷ்ரப் அலி, கமர்நிஷா
அஷ்ரப் அலி, கமர்நிஷா

குழந்தை நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போதுதான் குழந்தை விற்பனையில் தந்தையும் உடந்தை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது.

இதுகுறித்து நாகை டி.எஸ்.பி முருகவேலிடம் பேசினோம்.

"அஸ்ரப் அலி இதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டில் தனக்குப் பிறந்த 15 நாள் ஆன குழந்தையை அசன் முகமது மூலம் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அதற்கு உண்டான பத்திரம் மற்றும் ஆவணங்களை அசன் முகமதுவிடமிருந்து கைப்பற்றியுள்ளோம். தற்போது கோவில்பட்டியில் விற்ற குழந்தை விஷயத்திலும் அஸ்ரப் அலி சம்மதத்துடனே நடந்துள்ளது. இதில், பேசியபடி பணவிவகாரம் செட்டில் ஆகாததால் வெளிச்த்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அஷ்ரப் அலி, அசன் முகமது, நாகை கடசல்காரதெருவைச் சேர்ந்த கமர் நிஷா, சிக்கல் மெயின் ரோட்டைச் சேர்ந்த பாத்திமா உள்ளிட்ட நால்வரைக் கைது செய்துள்ளோம்.

குழந்தை விற்பனையில் அசன் அகமது, கமர் நிஷா, பாத்திமா ஆகிய மூவரும் குழுவாகச் செயல்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் வேறு குழந்தைகள் விற்பனை ஆகியுள்ளதா என்றும், குழந்தகளின் தாய் நிர்மலா பேகத்திற்குத் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு