Published:Updated:

`இலவச வீடு; ஏழைகளிடம் மோசடி; தலைமறைவு!’- வேலூர் பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை

பாதிரியார்
பாதிரியார்

இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் குடியாத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வேலூரை அடுத்த அரியூர் ரயில்வேகேட் பகுதியைச் சேர்ந்தவர் யோபு சரவணன் என்கிற ஜோப் சரவணன் (49). இவர் தன்னை பாதிரியார் எனவும் `கல்வாரி மிஷன்’ என்கிற தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருப்பதாகவும் கூறிவந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடமிருந்து தனக்குப் பணம் வருவதாகவும் அதன் மூலம் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தருவதாகவும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

பாதிரியார் யோபு சரவணன்
பாதிரியார் யோபு சரவணன்

அதை நம்பி அவரை அணுகிய குடியாத்தத்தைச் சேர்ந்த பலரிடம் டெபாசிட் தொகையாக லட்சக்கணக்கில் வசூலித்துள்ளார். அதன்பிறகு, பல மாதங்களாகியும் அவர் வீடு கட்டிக்கொடுக்கவில்லை. டெபாசிட் தொகையையும் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டவர்களுக்கு `செக்’ கொடுத்துள்ளார். அதை வங்கியில் மாற்றியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது.

பின்னரே, யோபு சரவணன் மோசடி செய்ததை உணர்ந்தனர். அதையடுத்து, 2007-ம் ஆண்டு பாதிரியார் யோபு சரவணன் `செக்’ மோசடி செய்ததாக குடியாத்தம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிரியார் ஆஜராகாமலேயே இருந்தார். இதனால், 2016-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பாதிரியார் யோபு சரவணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து குடியாத்தம் நீதிமன்றம் `பகிரங்க அறிவிப்பு’ வெளியிட்டது.

குடியாத்தம் நீதிமன்றம் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு.
குடியாத்தம் நீதிமன்றம் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு.

பிடிவாரன்ட் பிறப்பித்தும் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போதும், பாதிரியார் நேரில் ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன் வழங்கிய தீர்ப்பில், யோபு சரவணன் மீதான மோசடி நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.16 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபராதத் தொகையை செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி எச்சரித்திருந்தார். அதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பாதிரியார் யோபு சரவணன் குடியாத்தம் நீதிமன்றத்தில் நேற்று திடீரென சரணடைந்தார்.

பாதிரியார் யோபு சரவணன்
பாதிரியார் யோபு சரவணன்

அப்போது, `தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளேன். தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் யோபு சரவணன் அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு