Published:Updated:

`ஊரடங்கிலும் அடங்காத கள்ள மது விற்பனை; சிக்கிய 4 ஆயிரம் பாட்டில்கள்!’- ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

ராமேஸ்வரத்தில் சிக்கிய மதுபானம்.
ராமேஸ்வரத்தில் சிக்கிய மதுபானம். ( விகடன் )

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்களை நடத்தி வரும் அரசியல் புள்ளிகள் தேவையான அளவு மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அவற்றைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரானோ வைரஸ் தாக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபித்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்க முயன்ற 4 ஆயிரம் மதுபான பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் கமுதியைச் சேர்ந்த ஒரே நபரிடமிருந்து 600-க்கும் அதிமான மதுபாட்டில்கள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் சிக்கிய மதுபானம்.
ராமேஸ்வரத்தில் சிக்கிய மதுபானம்.
விகடன்

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளான மளிகை, காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட கடைகள் தவிர அனைத்துக் கடைகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கமுதியில் சிக்கிய மது பாட்டில்கள்
கமுதியில் சிக்கிய மது பாட்டில்கள்
விகடன்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இதுவரை 28 பேருக்குக் கொரோனா தொற்று பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 21 நாள் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னதாகவே கடந்த 22-ம் தேதி தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபானப் பிரியர்கள் மது அருந்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்களை நடத்தி வரும் அரசியல் புள்ளிகள் தேவையான அளவு மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ஆர்.எஸ். மங்களம், திருவாடானை என அனைத்துப் பகுதிகளிலும் கள்ள மது விற்பனை தடையின்றி நடந்து வருகிறது.

கள்ளத்தனமாக விற்கப்பட்ட மது
கள்ளத்தனமாக விற்கப்பட்ட மது
விகடன்

இது குறித்த புகார்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குச் சென்ற நிலையில் தனிப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். இதன் காரணமாக கடந்த 3 நாள்களில் மட்டும் கள்ளத்தனமாக மது விற்றவர்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 3,954 மது பாட்டில்கள் கைபற்றப்பட்டன. இதில் கமுதியில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒரே நபரிடம் இருந்து 647 மது பாட்டில்கள் கைபற்றப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்கள் மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு