Published:Updated:

திருப்பூர்: பனியன் கம்பெனி காதல்; கூகுள் டிரைவில் படங்கள்! - அதிர்ச்சி கொடுத்த காதலன்

கைது செய்யப்பட்ட மாது
கைது செய்யப்பட்ட மாது

பனியன் கம்பெனியில் அவருடன் வேலை பார்த்து வந்த 24 வயதுப் பெண் ஒருவர் மீது 41 வயதான மாதுவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது (41). இவர் திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். திருமணமான இவர் மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான சென்னிமலையில் விட்டுவிட்டு, திருப்பூர் எம்.எஸ்.நகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், பனியன் கம்பெனியில் அவருடன் வேலை பார்த்து வந்த 24 வயதுப் பெண் ஒருவர் மீது மாதுவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. `எனக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’ என மாது வீசிய வலையில், அந்த இளம்பெண்ணும் விழுந்திருக்கிறார்.

வீடியோ
வீடியோ
மாதிரி படம்

அதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் இருந்த சமயங்களில் மாது ரகசியமாக ஆபாசப் படங்கள், வீடியோவை எடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில், மாதுவின் நடவடிக்கைகளில் அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியுடன் குடும்பம் நடத்திக்கொண்டே, தன்னை காதலிப்பதாக நாடகமாடுவது தெரிந்து அந்த இளம்பெண் சண்டைபோட்டு பிரிய முற்பட்டிருக்கிறார்.

அப்போது ரகசியமாக எடுக்கப்பட்ட ஆபாச படங்களைக் காட்டி மிரட்ட, அந்த இளம்பெண் அதிர்ந்து போயிருக்கிறார். தொடர்ந்து அந்த வீடியோக்களைக் காட்டியே மிரட்டி வந்திருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் அந்தப் பெண்ணுக்கு வீட்டில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அப்போது வீட்டில், நடந்த விஷயத்தைச் சொல்லி அந்த இளம்பெண் கதறி அழுதிருக்கிறார். உடனே மாதுவின் வீட்டிற்குச் சென்ற பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவருடைய போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்களை அழித்துவிட்டு, எச்சரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.

ஆனாலும், மாது அந்த ஆபாச வீடியோக்கள், போட்டோக்களை மணமகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் அதைப் பதிவேற்றியிருக்கிறார். திருமணத்துக்கு ஒருவாரம் மட்டுமே இருந்த சூழலில், இந்த விவகாரத்தால் திருமணம் நின்றுபோயிருக்கிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் வீட்டார் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் மாதுவை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த போட்டோ, வீடியோவைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`நான்குமுறை பாலியல் தொல்லை கொடுத்தார்!' -கேரளாவை அதிரவைத்த `கர்த்தாவின்டே நாமத்தில்'

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாதுவை நேரில் சந்தித்து அவருடைய போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்களை பெண்ணின் பெற்றோர்கள் அழித்திருக்கின்றனர். ஆனால், அந்தப் படங்கள், வீடியோக்களை மாது கூகுள் டிரைவில் சேமித்து வைத்திருக்கிறார். தன்னைவிட்டு அந்தப் பெண் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த வீடியோவை மணமகனுக்கு அனுப்பியிருக்கிறார்.

மாதுவின் மெயில், சமூக வலைதள பக்கங்களை முடக்கி, அதிலிருந்த தகவல்களை சைபர் கிரைம் போலீஸார் அழித்திருக்கின்றனர். அவருடைய போனில் வேறு பெண்களுடன் இருந்தது மாதிரியான வீடியோக்கள் எதுவுமில்லை. விசாரணையில்தான் வேறு எந்தப் பெண்களாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவரும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு