Published:Updated:

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!
மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

திருச்சி: மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் இரு குழந்தைகளின் தாய் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கட் அருகே  உள்ள கல்லுக்குழி முடுக்குப்பட்டியில் மக்கள் பயன்பாட்டிற்காக சாலையோரம் குடிநீர் தொட்டி மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் அப்பகுதி மக்கள், தினமும் காலையில் குடிநீர் பிடிப்பது வழக்கம்.

இந்த குடிநீர் தொட்டியின் பக்கத்தில் மின்கம்பம் ஒன்று இருந்தது. மிக நீண்டகாலமாய் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் இருந்தது. இந்த மின்கம்பத்திற்காக அதன் அருகிலேயே எர்த் ஒயர்  அடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குடிநீர் தொட்டியிலுள்ள ஈரம், எர்த் ஒயர் வரை சென்றதால், குடிநீர் தொட்டி வரை மின்சாரம் கசிந்திருக்கிறது. இதனால், அந்த தொட்டியில் தண்ணீர் பிடிக்க செல்லும் பெண்கள் சில நாட்களாக கரண்ட் ஷாக் அடிப்பதாக புகார் கூறி வந்தனர். அதனை தொடர்ந்து  இதுகுறித்து மின்வாரியத்தில் அந்த பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக புகார் கூறியும் மின்சாரவாரியம் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்று இரண்டு குழந்தைகள் தங்களது தாயை பலி கொடுத்துள்ளதுதான் வேதனை.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் அஜி என்னும் கூலி தொழிலாளியின் மனைவி மலர்கொடி, அந்த பொதுக்குழாயை திறந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதில் நிலை குலைந்த மலர்கொடி, அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்திருக்கிறார். இதில், அவரது உடலில் ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

இதுகுறித்து மலர்கொடியின் கணவர் அஜி கூறுகையில், ''தண்ணி பிடிக்க போன அவளை ரொம்ப  நேரமாக காணலன்னு பார்க்க போனேன். கரண்டுல மாட்டி பிணமா கிடந்தாள். பதறியடிச்சிக்கிட்டு அவளை தூக்கினேன். என்மேலேயும் கரண்டு பாய்ஞ்சிடுச்சி. அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கதான் என்னை காப்பாற்றினாங்க. தண்ணி பிடிச்சிட்டு வந்து மகள் ஜெனிபருக்கு தலைசீவி விட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறேன்னு மலர் சொல்லிட்டு போனா, இப்ப பிணமாக கிடக்கிறாள். இனி எனது இரண்டு பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவேன்...?'' எனக் கதறினார்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

தொடர்ந்து நம்மிடம் பேசிய உறவினர்கள், ''மலர் இறந்துபோன சம்பவத்தை சொல்ல எங்க ஏரிய மின்சாரவாரிய அலுவலகத்துக்கு போன் பண்ணி சொன்னோம். அப்போதும் அவர்கள் இதே வேலையாக இருக்குன்னு சொல்லி போனை வைச்சிட்டாங்க. பிறகு நாங்க எல்லோரும் சேர்ந்து திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியல் செய்தோம் எல்லோரும் ஓடிவந்தாங்க. இந்த கம்பத்தை போல எங்க பகுதியில் 8 கம்பங்கள் செல்லரித்து உடைந்து விடும் நிலையில் அபாய கட்டத்தில் உள்ளது. எல்லாவற்றையும் மாற்றணும்னு மாத கணக்கில் கோரிக்கை வைத்து வருகின்றோம். ஆனால், யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அந்த அலட்சிய அதிகாரிகள் கொஞ்சம் கவனமாக செயல்பாட்டிருந்தால் மலரின் இரண்டு குழந்தைகள் இப்போது நடுத்தெருவில் நின்றிருக்காது. பழுதடைந்த கம்பங்களை உடனே மாற்றணும். அந்த அலட்சிய மின் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்கள்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

சாலையில் மறியல் ஒருமணி நேரம் தொடர, திருச்சியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு ஓடிவந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர செயற்பொறியாளர் பால குருநாதன், உதவி ஆணையர் தனபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், பொன்மலை கோட்டத் தலைவர் மனோகர், கவுன்சிலர்கள் லீலாவேலு, வெங்கட்ராஜ் மற்றும் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் தாயை இழந்த குழந்தைகள்!

அப்போது பொதுமக்கள், 'மின் அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் மலர் இறந்தார். பலியானதை மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தபோது ஊழியர் தகாதமுறையில் பேசினார்கள்" என ஆவேசமாக பேசினார்கள்.

இந்நிலையில், அந்த பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி பணியாளர்களும், மின்வாரிய ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், தாயை பலி கொடுத்து நிற்கிறது அந்த பிஞ்சுக்குழந்தைகள்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்