Published:Updated:

கோவை: 2 நாட்களில் 5 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்! - அதிரடிகாட்டும் காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த இரண்டு நாள்களில் ஐந்து போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் ஆயுர்வேதிக் ஸ்பா ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில், துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் தலைமைக் காவலர் கிஷோரும், முதல்நிலைக் காவலர் ஜோதிமணியும் இந்த ஆயுர்வேதிக் ஸ்பாவுக்கு சென்று வாரம் ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த ஸ்பா மீது வழக்கு பதிவு செய்துவிடுவோம் எனவும் மிரட்டிப் பணம் வாங்கியுள்ளனர்.

கொரோனா: 'அதிக மருத்துவ கட்டணம்; இலவச சேவைக்கு லஞ்சம்..!’- எச்சரிக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு!

இது குறித்து ஸ்பா உரிமையாளர் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவலர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்தும், துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, கார் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சுரேஷ் என்பவரை போலீஸார் கைதுசெய்திருந்தனர்.

இதற்டையே, சுரேஷை ஜாமீனில் விடுவிக்க ரமேஷ் என்பவரிடம் தலைமை காவலர் வெங்கடாசலம் லஞ்சம் கேட்டுள்ளார். பிறகு ரமேஷ் கொடுத்த பணத்தை, வெங்கடாசலம் காவல் ஆய்வாளர் சுரேஷிடம் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரமும் கண்காணிப்பாளரிடம் புகாராகச் சென்றது. இதையடுத்து, ஆய்வாளர் சுரேஷ் மற்றும் வெங்கடாசலம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்டக் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதேபோல சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே சூதாடியவர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன் என்பவரையும் சஸ்பெண்ட் செய்து செல்வநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.

ஏசுபாலன்
ஏசுபாலன்

இதன் மூலம், லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இரண்டு நாள்களில் ஐந்து போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு