Published:Updated:

வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி..! 1000 ஆண்டு பழமையான சிலைகள் பறிமுதல்!

Vikatan Correspondent
வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி..! 1000 ஆண்டு பழமையான சிலைகள் பறிமுதல்!
வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி..! 1000 ஆண்டு பழமையான சிலைகள் பறிமுதல்!


சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த ஆயிரம் ஆண்டு பழமையான 35 சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள சிலைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக தமிழக சிலைகளுக்கு அதிக மதிப்பு வெளிநாடுகளில் இருக்கிறது. இதற்காக இந்து கோயில்களில் சிலைகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் விற்க தனிநெட்வொர்க் செயல்படுகிறது. பிரபல சிலை கடத்தல் கும்பலின் தலைவன் சுபாஷ்கபூரை சில ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறைக்குள் அடைத்தனர். இருப்பினும் அவனது கூட்டாளிகள் மூலம் இன்னும் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.
 

சமீபத்தில், சென்னை ஆழ்வார்பேட்டை, மூரே தெருவில் ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த இருப்பதாகவும் சிலை தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு சென்றனர். அப்போது வீட்டுக்குள் அருங்காட்சியகம் போல 35 சிலைகள் இருந்தன. அதைப்பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அங்கு இருந்த ரஞ்சித், மான்சிங், குமார் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். வீட்டிலிருந்து சிலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிலைகள் கொள்ளையடித்து இங்கு கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான தீனதயாளனை போலீஸார் தேடி வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி என்கிறார்கள் போலீஸார். இவை எங்கு இருந்து கொள்ளையடிக்கப்பட்டன என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

எஸ்.மகேஷ்

படங்கள்:
நிவேதன்