Published:Updated:

தோண்டத் தோண்ட சிலைகள் ! - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோண்டத் தோண்ட சிலைகள் ! - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்
தோண்டத் தோண்ட சிலைகள் ! - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

தோண்டத் தோண்ட சிலைகள் ! - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

மானிட சமுதாயத்தைக் காக்க, அழிவு ஏற்படுத்தும் கிருமி குப்பியைக் கைப்பற்ற  'தசாவதாரம்' படத்தில் கமலஹாசன் பெரும் போராட்டத்தையே நடத்தினார். அந்த சிலையின் ஆற்றலை உணர்ந்த அமெரிக்க கமல், சிலையைக் கொண்டு போக படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சிலைகள், வெறும் சிலைகள் அல்ல... அவைகள் நம் சித்த மருத்துவத்தின் அடையாளங்கள். பதினெண் சித்தர்கள் தொட்டு மகான்கள் வரையில், சிலைகளின் வழியாகத்தான் சஞ்சீவி மூலிகைகளை இழைத்து வைத்து அதை சிலைகளுக்குள் புகுத்தினர்.

இன்ன கோயில் தீர்த்தம் அருந்தினால், இந்த நோய் போகும் என்று சொல்லி வைத்து சிலைகளுக்கு அபிஷேகம் நடத்தி, வழியும் நீரை தீர்த்தமாக்கிக்  அருந்த வைத்தனர். கோயிலுக்கு மனிதர்களை வரவழைக்க இப்படியாக 'பக்தி' மார்க்கத்தைக் காட்டி நோய் தீர்த்தனர். இப்போதெல்லாம், பளிங்குக் கற்களில் சிலைகளை வைக்கிறார்கள் அது வேறு கதை. அதற்குள் நாம் போக வேண்டாம்.

நாம் போக வேண்டியது, சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த ஆயிரம் ஆண்டு பழமையான சிலைக் கடத்தல் மற்றும் அதன் காரண கர்த்தாவான  ஆசாமி குறித்த விஷயத்துக்குள்.
தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் இன்றைய தெலுங்கானாவில் இருக்கும் ஹைதராபாத்தில் இருந்து சென்னை புதுப்பேட்டைக்குள் நுழைந்த அந்த இளைஞனின் பெயர் தீனதயாளன்.

பிழைப்புக்காக ஆரம்பத்தில் ஏதேதோ வேலைகள் செய்து, நாட்களை  நகர்த்திய அந்த இளைஞனின் கால்குலேட்டர் இல்லாத கணக்குப் போடும் திறனால், மாடு பராமரிப்பும், மேய்ப்புமாக இருந்த கைத்தொழில் தொலைந்து போய்  மாடு தரகு பிடியும்,  பாத்திர வியாபாரமும் கைக்கு வந்தது.

வட்டிக்கு விடுதல், சினிமா படங்களை லீசுக்கு எடுத்து விநியோகித்தல் என்று  இப்படி அடுத்தடுத்து  அந்த இளைஞனின் பாதை அமைந்து விட,   சென்னையை  நிரந்தரமாக்கிக் கொண்டு பயணத்தைத்  தொடர ஆரம்பித்தார்.

தீனதயாளனின்  திருமணம், பிள்ளைகள், அவர்களின் கல்வி,  அவர்களின் திருமணம் என்று எல்லாமே ஸ்டார் அந்தஸ்தோடு சுபமாக  சென்னையிலேயே பிரமுகர்கள் சூழ ஆசீர்வதிக்க, சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பின்னர், மகன் அமெரிக்காவிலும், மகள் பெங்களூருவிலும் என்று செட்டில் செய்து விட்டார், தீனதயாளன்.

ஓய்வில்லாத ஓட்டம், ஓட்டம் என்றே வாழ்க்கையின் பெரும்பகுதி போனதில் தீனதயாளனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கெடுத்துச் சொல்லவே நிறைய ஆட்கள் தேவைப்படுகிற அளவு செல்வம் குவிந்து வழிந்தது.

தன்னுடைய 77-வது வயதில் இப்போது,  (2016 -) மீண்டும்  தீனதயாளன்  ஓட ஆரம்பித்திருக்கிறார். அவரை விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல். தீனதயாளன் எப்படி தன்னை படிப்படியாக (?!) வளர்த்துக் கொண்டார், இவ்வளவு செல்வம் குவிந்தது எப்படி என்பது குறித்தெல்லாம் கேள்வி கேட்க எந்த 'துறையும்' இல்லாத நிலையில், அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.

போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.

"சிலை கடத்தல் வழக்கில் தமிழ் சினிமா படத் தயாரிப்பாளர் வி.சேகர், சிக்கியபின் மீண்டும் ஒரு பெரிய அளவிலான சேசிங் ஏதும் இல்லாமல் இருந்தது. அப்போது சிலை கடத்தல் விவகாரத்தில் பெரிதாகப் பேசப்பட்ட சினிமா நடிகையின் மூலமும் ஒன்றும் கிடைக்க வில்லை.

தீனதயாளன் விவகாரம் அப்படிப்பட்டது அல்ல.  சர்வதேச  அளவில் சிலை கடத்தல் மற்றும் கொள்ளையில் தேடப்பட்டு வரும்  சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய தொழில் கூட்டாளி இந்த தீனதயாளன்.  முதல் நாளே இவர் வீட்டிலிருந்து 50 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 55 சுவாமி சிலைகளை.  பார்சல் போட்டு வைத்திருந்த ஸ்டேஜில் மீட்டிருக்கிறோம்"  என்றனர்.

சென்னை, ஆழ்வார்பேட்டை, முர்ரே கேட் சாலையில்,  ஐந்து கிரவுண்ட் பரப்பளவில் இரண்டடுக்கு மாடிகளுடன் சலவைக் கற்களால் 25 கோடி ரூபாய் பெருமானத்தில் இழைத்து இழைத்து கட்டப் பட்டிருக்கிறது அந்த வீடு.

ஒரு கலா ரசிகனுக்குரிய வீடு போல தோற்றமளிக்கும் அங்கே  தரை தளத்தில்,  கலைப்பொருட்கள் விற்பனைக்கான, 'அபர்ணா ஆர்ட் கேலரி ’  இதுநாள் வரையில் தொழில் பாதுகாப்பு மையமாய் தீனதயாளனுக்கு இருந்து வந்துள்ளது.

முன்பக்கமாக இவைகளை காட்சிப்படுத்தி வைத்து விட்டு, பின் பக்கமாக தீனதயாளன் ஏற்றி அனுப்பி வைத்த கோயில் திருட்டுச் சிலைகளும், கடத்தல் சிலைகளும் ஏராளம் என்கின்றனர், விசாரணை தரப்பில்...
 
'எப்படி ட்ராக் செய்தீர்கள் ?'  என்று போலீஸ் தரப்பில் பேசியதில்,

"ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலைப் பற்றி  நாங்கள் சொல்ல  வேண்டியதில்லை.  அவருக்கான (சோர்ஸ்) தொடர்பை பலப்படுத்தி வைத்துக் கொள்வது அவர் வழக்கம்.  இதனால்தான் சாலையோரக் கூலிகள், குடிசைப் பகுதி மக்கள் இன்னும் சிலர் அவருடைய போன் நம்பரை கேட்டாலே சொல்வார்கள்.

கடந்த திங்கட்கிழமை ஐ.ஜி. சாரின் அலுவலகத்துக்கு 'அந்த' தொடர்பு வட்டத்திலிருந்துதான்  போன் வந்திருக்க வேண்டும். 'குறிப்பிட்ட  ஏரியாவில் இருந்து நள்ளிரவில் சிலைகள் பார்சல் செய்யப்பட்டு லாரிகளில் கொண்டு போகிறார்கள். யாரும், இதை கண்டு கொள்வதில்லை' என்பதே போனில் வந்த தகவல்.

இந்த தகவலைத் தொடர்ந்து  எங்களுக்கு அலர்ட் போட்டு விட்ட ஐ.ஜி., ' இந்த ஆபரேசனில் யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அங்கே சிலை கடத்தல் நடப்பதை எப்படி உறுதி செய்வது?' என்பது  குறித்து ஒரு ஸ்பெஷல் கிளாசே எடுத்து விட்டார்.

அதன்படி முதலில் அந்த வீட்டை கண்காணிப்புதான் செய்தோம்.  அந்த வீட்டில்,  கருடாழ்வார் சிலையை பார்சல் போட்டு கடத்தும் வேலையில் மும்முரமாக இருந்த,  தீனதயாளனின் மேலாளர் மற்றும் உதவியாளர்கள் ராஜாமணி,  குமார், மான்சிங்  ஆகியோர்தான்  முதலில் சிக்கியவர்கள். சத்தமில்லாமல், அவர்களை எங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஒருவர் மேலாளர்,  மற்ற இருவர் தீனதயாளனுக்கு  நம்பிக்கையான நபர்கள் என்று தெரியவந்தது.  அவர்களிடம் விசாரித்து முடித்த பின்னரே, கோர்ட்டில் ரெய்டுக்கான  அனுமதி பெற்று சோதனையில் இறங்கினோம். ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரே கல்லால் வடிவமைக்கப் பட்ட 'பிள்ளையார்' சிலை ஒன்றும் இந்த தேடுதலில்  கிடைத்தது... அப்படி, இப்படியென்று நான்கு நாட்கள் ஓடி விட்டன.

இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டோம். சுற்றிலும் பளிங்கு சலவைக் கற்கள்,  ஆனால், குறிப்பிட்ட சில இடங்களைத் தட்டிப் பார்க்கும் போது மட்டும் சத்தம் வேறு மாதிரியாக கேட்கவே,  அந்த இடத்தை உடைத்து சோதனையிட ஐ.ஜி. உத்தரவிட்டார். அதில் கை வைத்தால் சுவர் போல தோற்றத்தில் இருக்கிற  கட்டையிலான அறைகள் அவைகள். அ(சு) வற்றை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்துதான் அபூர்வமான நம்முடைய நாட்டின் பழங்கால ஓவியங்களும், விலை மதிப்பற்ற 34 சிலைகளும் மீட்கப்பட்டன." என்று விவரித்தனர்.

 ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் பேசினோம்.

"சிலை கடத்தலில் 1965-ம் ஆண்டுமுதல்  ஈடுபட்டு வரும் தீனதயாளன்,  ஸ்ரீவில்லிபுத்துார் பக்கத்தில் கோவில் சிலை திருடிய வழக்கில், கைதானவர்.  அதில் ஜாமீனில் வந்த பின், சென்னையில் இருந்த ஆர்ட் கேலரிகளை மொத்தமாக மூடிவிட்டு, ஆந்திராவுக்கே போய் விட்டார்.

ஆந்திராவிலிருந்து, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தும்  திட்டம் தோல்வியில் முடியவே, அங்கிருந்து கிழக்காசிய நாடுகளில் தஞ்சமாகி பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து பழையபடி சிலை கடத்தல் வேலையில் இறங்கியிருக்கிறார்.  தஞ்சாவூர், அரியலுார், ஜெயங்கொண்டம்  பகுதிகளில் உள்ள சோழர் கால சிலைகள் இந்த டீமால் கடத்தப்பட்டுள்ளன. அவைகள் எத்தனை  என, கணக்கெடுத்து வருகிறோம்.

தீனதயாளனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள், பல கோயில்களில் இருந்து திருடப்பட்டவை. மிகவும் பழமையான ஓவியங்களும்  கிடைத்துள்ளன. அவைகள் யாவும் நம்முடைய நாட்டின்  கலைப் பொக்கிஷங்கள் ஆகும்.

அவைகள் எந்த காலகட்டத்து ஓவியங்கள்  என கண்டுபிடிக்க  டெல்லியில் உள்ள தொல்லியல் துறைக்கு ஃபேக்ஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் திங்கட்கிழமை சென்னை வருகிறார்கள். அவர்களது ஆய்வு முடிவுக்கு பின்னர் இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.

இதுவரையில் 93 சிலைகள் அந்த வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல சிலைகள் புதைத்தும் வைக்கப்பட்டிருந்தன. உலோகச் சிலைகள் மட்டுமல்ல, யானைத் தந்தங்களால்  செய்யப்பட்ட சிலைகளும் ஏராளம்.  2004-ம் ஆண்டு, நெல்லை பழவூர் கோவிலில் நடராஜர் சிலை உள்பட 13 சிலைகளை திருடியதாக கூட்டாளிகள் 8 பேருடன் தீனதயாளன் சிக்கினர். 9 சிலைகள்  மீட்கப்பட்டன.நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே ரூ. 16 கோடி. இந்த வழக்கில் தீனதயாளன் கைது ஆகாமல், தலைமறைவாக இருந்தே அப்போது ஜாமீன் பெற்றார். இப்போது அப்படி முடியாது என்று கருதுகிறோம். மேலும்,  எங்கும்  தப்பி விடாதபடி, அவரது  பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுவிட்டது " என்கிறார் பொன்.மாணிக்கவேல்.

" தீனதயாளனை நான் தேடிப் போகப் போவதில்லை. ஆனால், அவரே இங்கு வந்து சரண் அடைவார், எங்களுக்கு அவரை எப்படி சரண் அடைய வைக்க வேண்டுமென்பது தெரியும்" என்று உறுதியாக  சொல்கிறார்  ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்.

பொன்.மாணிக்கவேல் கையில் ஒரு புத்தகம் இப்போது இருக்கிறது. அடிக்கடி அதை பிரித்துப் படித்துப் பார்த்து 'நோட்ஸ்' எடுத்து வைத்துக் கொள்கிறார். அது சிலைகள், பழங்கால கலைப் பொக்கிஷங்கள் தொடர்பான ஒரு பெரிய புத்தகம்.

தீனதயாளனின் வீட்டுக்கு அவரே  போலீஸ் பாதுகாப்பைப் போட்டு வைத்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் உள்ளே போகும் போது, அவரையும் சோதனை செய்தே  உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் போலீசார்.

'செல்போனை கையில் யாரும் எடுத்துக்கிட்டு அந்த வீட்டுக்குள் போகக் கூடாது. யாராக இருந்தாலும், நானாக இருந்தாலும் உள்ளே போகும்போதும், வரும்போதும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும்' என்பது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் உத்தரவு என்கின்றனர் போலீசார்.

சுபாஷ் சந்திரகபூர்,  2008-ல் கைதான பின்னர்  தீனதயாளன், நியூயார்க்கில் உள்ள , தன்னுடைய மகன் கிருதயாளை  இன்டர்நேஷனல் ஏஜென்டாக நியமித்து, அவன் மூலமாகவே சிலைகளை கடத்தி, வெளிநாடுகளில் விற்றிருக்கிறார்.

சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், கிருதயாளை தமிழகத்துக்கு கொண்டு வர இன்டர்போல் போலீஸ் உதவியை நாடலாம் என்று தெரிகிறது.

ந.பா.சேதுராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு