மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, தனது கணவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தவரை, அதேப் போலவே மனைவி கொலை செய்து பழிவாங்கியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய தம்பி. இவரை கடந்த ஆண்டு, அதேப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ரவிக்குமார், கடந்த 14ம் தேதி ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
பின்னர் காளிபாளையத்துக்கு சென்ற ரவிக்குமார், தான் கொலை செய்த பெரிய தம்பியின் மனைவி சுகந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த சமயத்தில், அவரைப் பழி வாங்க நினைத்த சுகந்தாமணி, ரவிக்குமாரின் தலையில் பெரிய கல்லை எடுத்துப் போட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் அதே இடத்தில் இறந்து போனார்.
பின்னர் ரத்தக்கறையுடன், மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்று சுகந்தாமணி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.