Published:Updated:

`13 வீடுகள் இருந்தும் பிளாட்பார லைஃப்!' - 3வது மகனால் சென்னைக் கோடீஸ்வர தந்தைக்கு நேர்ந்த கொடுமை

பிளாட்பாரத்திலிருக்கும் கோடீஸ்வரர் சிம்சன்ராஜ் மகன்
பிளாட்பாரத்திலிருக்கும் கோடீஸ்வரர் சிம்சன்ராஜ் மகன்

13 வீடுகள், 11 கடைகள் இருந்தும் குடியிருக்க இடம் இல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்ட மகனோடு பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார் சென்னைக் கோடீஸ்வரத் தந்தை.

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் சிம்சன்ராஜ் (75). இவரின் மனைவி ராணியம்மாள். இந்தத் தம்பதியருக்கு கேடர் விவேக்ராஜ், விக்டர் ஞானராஜ், வால்டர் செல்வராஜ் என 3 மகன்கள் உள்ளனர். சிம்சன்ராஜ், சென்னையில் தனியார் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்குத் தண்டையார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 13 வீடுகளும் 11 கடைகளும் உள்ளன. தன்னுடைய மகன்களுக்குத் திருமணம் செய்து வைத்த சிம்சன்ராஜ், முதுமை காலத்தைக் கடந்த 7 ஆண்டுகளாக மனவேதனையோடு அனுபவித்துவந்தார்.

சிம்சன்ராஜ்
சிம்சன்ராஜ்

`சிம்சன்ராஜின் மனவேதனைக்கு என்ன காரணம்?' என்று அவரின் உறவினர் ஒருவரிடம் பேசினோம்.

``சிம்சன்ராஜ், வசதியானவர். மூன்றாவது மகனால் அவருக்குத் தொல்லை ஏற்படத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் அவரின் இரண்டாவது மகன் விக்டர் ஞானராஜின் மனைவி திடீரென இறந்துவிட்டார். அந்த வேதனையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இசைக் குழு ஒன்றில் பாடகராகவும் ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞராகவும் இருந்த விக்டருக்கு இப்படியொரு நிலைமை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

2-வது மகனுக்கு ஏற்பட்ட இந்தநிலைமை சிம்சன்ராஜை மனதளவில் பாதித்தது. இருப்பினும் மகனை நன்றாக அவர் கவனித்துவந்தார். இந்தச் சமயத்தில்தான் சிம்சன்ராஜையும் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் விக்டர் ஞானராஜையும் வீட்டை விட்டு வால்டர் செல்வராஜ் விரட்டியடித்தார். பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள், கடைகள் இருந்தும் தள்ளாத வயதில் இருக்கக்கூட இடம் இல்லாமல் உறவினர்கள் வீடுகளில் சிம்சன்ராஜ், மகனோடு தஞ்சமடைந்தார். மனநலம் பாதித்த மகனோடு தங்கியிருந்ததால், உறவினர் வீடுகளில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, பிளாட்பாரத்தில் இருவரும் தங்கினர். மூன்றாவது மகன் செய்த கொடுமைகள், சித்ரவதைகள் குறித்து சிம்சன்ராஜ் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

விக்டரிடம் விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள்
விக்டரிடம் விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள்

சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடமும் சிம்சன்ராஜ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை நடத்திவந்தனர். இந்தச் சமயத்தில் சிம்சன்ராஜ், 2-வது மகன் விக்டரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். வழக்கம்போல வால்டர் செல்வராஜ், அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இந்தமுறை தைரியமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார் சிம்சன்ராஜ். தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் சிம்சன்ராஜை வீட்டிலிருந்து வெளியேற்றவும் வால்டர் செல்வராஜ் முயற்சி செய்தார்.

ரூ.200 கோடி சொத்து... சண்டையிடும் மனைவிகள்... யாரும் கவனிக்கவில்லை! - அநாதையாக இறந்த கோடீஸ்வரர்

இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``முதியவர் சிம்சன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அவருடைய 3-வது மகன் வால்டர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். ஏற்கெனவே சிம்சன்ராஜ், ஆர்.டி.ஓ-விடம் புகார் கொடுத்திருந்தார். அதற்கு, சிம்சன்ராஜுக்கு மாதந்தோறும் பணமும் அவரும் 2-வது மகனும் தங்குவதற்கு வீட்டில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்.டி.ஓ, உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவை வால்டர் செல்வராஜ் மதிக்கவில்லை.

சிம்சன் வீடு
சிம்சன் வீடு

இதையடுத்து, வால்டர் செல்வராஜ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால்தான் சிம்சன், தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகனோடு தங்கக்கூட இடம் இல்லாமல் தவித்துவந்தார். நேற்று மாலை வால்டர் செல்வராஜுக்கும் சிம்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், சிம்சனுக்கு வால்டர் செல்வராஜ் கொலை மிரட்டல் விடுத்தார். அதனடிப்படையில் வால்டர் செல்வராஜைக் கைது செய்துள்ளோம். இடம் விவகாரத்தைப் பொறுத்தவரை நீதிமன்றமும் வருவாய்துறையும்தான் நடவடிக்கை எடுக்கும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு