Published:Updated:

நீலகிரி: சிறுமி மாயத்தில் விலகாத மர்மம் - 8 நாள்களாகத் திணறும் காவல்துறை!

லட்சுமணன் (சிறுமியின் தந்தை)
லட்சுமணன் (சிறுமியின் தந்தை)

`கடந்த 21-ம் தேதி வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டிருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகளான பிரீத்தி குமாரி என்ற 8 வயது சிறுமி மாயமான நிலையில், தற்போதுவரை எந்தத் துப்பும் கிடைக்காமல் திணறிவருகின்றனர்.’

நீலகிரி மாவட்டம் குன்னூர், தூதூர்மட்டம் பகுதியிலுள்ள கிரேக்மோர் தனியார் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளிகளாகப் பணிபுரிந்துவருபவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன், சுமன் குமாரி தம்பதியர். இதே தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசித்துவரும் இவர்களுக்கு, பிரீத்தி குமாரி என்ற 8 வயது மகள் இருக்கிறார்.

சிறுமி மாயம் - விசாரணை
சிறுமி மாயம் - விசாரணை

கடந்த 21-ம் தேதி மகளை வீட்டில் விட்டுவிட்டு வழக்கம்போல் இருவரும் தேயிலை பறிக்கச் சென்றிருக்கிறார்கள். மாலை வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை. பதறிய பெற்றோர், பல இடங்களில் தேடியும் மகளைக் காணவில்லை என்பதால், அருகிலுள்ள கொலக்கொம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!

புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், காவல்துறையினர், நக்சல் தடுப்புப் பிரிவினர் எனப் பல துறையினர் இணைந்து இரவு பகலாகத் தேயிலை தோட்டத்தில் தேடிவருகின்றனர். சிறுமியை வனவிலங்கு தாக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதலைத் தொடங்கினர்.

சிறுமியைத் தேடும் பணி
சிறுமியைத் தேடும் பணி

ஆனால், சிறுமியின் உறவினர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடந்த ஏழு நாள்களாகத் தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், காவல்துறையினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சிறுமியைத் தேடும் பணி குறித்து காவல்துறையினர் கூறுகையில், ``8 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், சிறுமியின் உறவினரான வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர் அளித்து வருகிறார்.

சிறுமியைத் தேடும் பணி
சிறுமியைத் தேடும் பணி

தற்போது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஐந்து சிறப்பு தனிப்படைகளை அமைத்திருக்கிறோம். விரைவில் சிறுமியைக் கண்டுபிடிப்போம்" என்றனர்.

சிறுமி குறித்து நம்மிடம் பேசிய தொழிலாளிகள்,``இதுபோல் ஒரு சம்பவம் இங்கே நடந்ததே இல்லை. இத்தனை நாள் ஆகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியலை. பெத்தவங்க தவிக்கிறாங்க. எங்களுக்கும் குழந்தைகளைவெச்சிக்கிட்டு இருக்கவே பயமா இருக்கு. சீக்கிரம் கண்டுபிடிச்சா நல்லது" என்றனர்.

சிறுமியைத் தேடும் பணி
சிறுமியைத் தேடும் பணி

காணாமல்போன தங்களின் மகள் உயிருடன்தான் இருக்கிறாளா அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமோ? என்ற பயத்தில் ஒவ்வொரு நொடியையும் வேதனையில் கழித்துவருகின்றனர் அவளின் பெற்றோர்.

அடுத்த கட்டுரைக்கு