Published:Updated:

தம்பதியிடம் அராஜகம்... ஃபேஸ்புக்கில் வைரல் ஆனதால் மன்னிப்பு கேட்டார் டி.ஜி.பி

தம்பதியிடம் அராஜகம்... ஃபேஸ்புக்கில் வைரல் ஆனதால் மன்னிப்பு கேட்டார் டி.ஜி.பி
தம்பதியிடம் அராஜகம்... ஃபேஸ்புக்கில் வைரல் ஆனதால் மன்னிப்பு கேட்டார் டி.ஜி.பி

தம்பதியிடம் அராஜகம்... ஃபேஸ்புக்கில் வைரல் ஆனதால் மன்னிப்பு கேட்டார் டி.ஜி.பி

கேரளாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், நேற்று முன்தினம் நடந்த மற்றொரு சம்பவம் கேரள மக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஆனால், பாதிப்புக்குள்ளான தம்பதியர் தைரியமாக எதிர்த்துப் போராடியதால், கேரள போலீஸ் டி.ஜி.பி-யே மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

திருவனந்தபுரம் மியூசியம் அருகே உள்ள பூங்காவில் விஷ்ணு, தன் மனைவி ஆரத்தியுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மனைவியின் தோள்பட்டையில் கை வைத்தவாறு பேசியதாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த இரண்டு பெண் போலீசார், பொது இடத்தில் அநாகரிகமாக நடப்பதாகக் கூறி அவர்களைத் திட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் அநாகரிகமான எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இதனால், விஷ்ணுவும் அவரது மனைவியும் பெண்  போலீசாரை எதிர்த்து தைரியமாகப் பேசினர். போலீசாருக்கும் தங்களுக்குமிடையே நடக்கும் வாக்குவாதத்தை  அப்படியே ஃபேஸ்புக்கிலும் நேரலை (லைவ்) செய்தனர். அந்த வீடியோவை 6 மணி நேரத்தில் 65 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் Share செய்துள்ளனர். 

இதைப்பற்றி அறியாத போலீசார், அந்த தம்பதியை மியூசியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மீது பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தாகக் கூறி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது. பின், அவர்கள் தம்பதியர் என உறுதி செய்யப்பட்டதால், அவர்களை விடுவிக்கவும் செய்தனர். ஆனால்,  விஷ்ணுவும் அவரது மனைவியும் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.  ‘உயர் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களிடம்  மன்னிப்பு கேட்டால் மட்டுமே, போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறுவோம்’ என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். 

இதற்கிடையே அந்த ஃபேஸ்புக் லைவ் பார்த்து, கேரள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். முறைப்படி திருமணம் செய்த ஜோடியை, மனரீதியாகத் துன்புறுத்தியதாக போலீசாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தத் தகவல் கேரளா முழுவதும் பரவியது.  விஷயம் சீரியஸானது.  இதையடுத்து, கேரள போலீஸ் டி.ஜி.பி லோக்நாத் பெக்ரா, பாதிக்கப்பட்ட தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டார்.

டி.ஜி.பி லோக்நாத் பெக்ரா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:


“திருவனந்தபுரத்தில் தம்பதியரிடம் பெண் போலீஸ் நடந்து கொண்ட விதம், என் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது. அந்தத் தம்பதியினரின் மன வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இது போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். திருவனந்தபுரம் ஐ.ஜி.பி மனோஜ் ஆப்ரஹாம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் எந்த ஒரு தம்பதியரையும் துன்புறுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை. 

துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் பொது இடத்தில் பெண் ஒருவரிடம் நெருக்கமாக அமர்ந்து பேசுவது கூட தவறாகப் பார்க்கப்படுகிறது. அதனைப் பார்ப்பவர்கள் உடனடியாக காவல்துறையை அணுகுகின்றனர். இதுபோன்ற அழைப்புகளை காவல்துறையால் தவிர்க்க முடியாது. ஆனால், இதுபோன்ற நேரங்களிலும் சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் பொறுப்புடனும் அன்புடனும் நடந்து கொள்ளவேண்டும். சில நேரங்களில் சிறுமிகள் கூட இதுபோன்ற இடங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

காவல்துறை என்பது சட்டத்தைக் காக்கும் ஒரு அமைப்புதான். சமூகத்தின் தார்மீக உரிமையைப் பறிக்கும் உரிமை காவல்துறைக்கு இல்லை. குறிப்பாக மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் கடைநிலைக் காவலர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் யாருக்காகப் பணியில் இருக்கிறோமோ அவர்கள் பாதுகாப்பை, தனிமனித உரிமையை, சுதந்திரத்தை பாதிக்காமல், அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும்.” இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- எம்.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு