Published:Updated:

''ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுக்கப் போன என்னைக் கொலைகாரன் என்கிறார்கள்!''- புலம்பும் சோலைராஜன்

''ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுக்கப் போன என்னைக் கொலைகாரன் என்கிறார்கள்!''- புலம்பும் சோலைராஜன்
''ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுக்கப் போன என்னைக் கொலைகாரன் என்கிறார்கள்!''- புலம்பும் சோலைராஜன்

''ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுக்கப் போன என்னைக் கொலைகாரன் என்கிறார்கள்!''- புலம்பும் சோலைராஜன்

நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிவந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க, திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர், ஓ.பி.எஸ் உடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி, அவரை நெருங்கி வந்தார். அந்த நபரை மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தடுத்தனர்.  அடுத்து அவர், ஓ.பன்னீர் செல்வத்தை  கத்தியுடன் கொல்ல வந்ததாகக் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் போலீஸாரின் தொடர்விசாரணையில், அந்த நபர், திருச்சி டோல்கேட் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகி வேல்முருகனுடன் வந்தவர் என்றும் அவர் பெயர் சோலைராஜன் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சோலைராஜனை அழைத்து வந்த 34-வது வட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி வேல்முருகன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர்மீது திருச்சி முன்னாள் கோட்டத்தலைவர் மனோகரன் புகார் கொடுத்தார். மேலும் ஓ.பி.எஸ், 'தனக்கு உரியப் பாதுகாப்பு இல்லை' என்று குற்றம் சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது.

இப்படியான சூழலில், சோலைராஜன் மற்றும் அவரை அழைத்து வந்த வேல்முருகன் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டனர்.

நடந்த சம்பவம் குறித்து  சோலைராஜனிடம் நேரில் சந்தித்து விசாரித்தோம்.

“கடந்த 35 வருஷமா கட்சியில் இருக்கிறேன். அம்மா இறந்தபிறகு கட்சி மூன்றாகப் பிரிந்ததில் இருந்து, அண்ணன் ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறேன்.

மேலும், வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி என் 2-வது மகளுக்குத் திருமணம் வைத்திருக்கிறோம். அதனால் கொஞ்சம் வேலை என்பதனால், நேற்று முந்தினநாள் கொஞ்சம் குடித்திருந்தேன். அடுத்து மறுநாளும் உடம்பு அசதியாக இருந்த காரணத்தால், வீட்டில் படுத்திருந்தேன். இந்நிலையில், நேற்று காலை வீட்டுக்கு வந்த வேல்முருகன், ஓ.பி.எஸ் வருகிறார். அண்ணனை நேரில் பார்த்து, உன் மகளின் கல்யாணப் பத்திரிகை கொடுத்தால், கல்யாணத்துக்கு உதவி செய்வார். அப்படியே அவருடன் ஒரு போட்டோ எடுத்துப் போட்டோவுடன் கல்யாணத்துக்கு பேனர் வைப்போம் என விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் வந்த விமானம் வருவதற்குக் காலதாமதம் ஆனதால், நாங்கள் பக்கத்தில் இருக்கும், ஆவின் பால்கடையில் டீ குடித்தோம். அப்போது, பூங்காவில், கத்தி ஒன்று கிடந்தது. அது வீட்டில் காய்கறி நறுக்க உதவுமே என்று, கத்தியை எடுத்து இடுப்பில் வைத்திருந்தேன்.

ஓ.பி.எஸ் வந்ததும், கூட்டம் அதிகமாக இருந்தது. அவருடன் போட்டோ எடுக்க நான், அண்ணன் அருகில் நெருங்கிப் போக முயன்றது எல்லாம் உண்மைதான். கூட்டத்தில் எப்படியாவது அவருடன் போட்டோ எடுத்துவிடவேண்டும் என நினைத்தேன். அதற்காக முயன்றபோது, பாதுகாப்புப் படைவீரர்கள், என் இடுப்பைப் பிடித்து இழுத்தார்கள். அப்போது, என் இடுப்பில் இருந்த கத்தி கீழே விழுந்துவிட்டது. அதை எடுக்கக் குனிந்தபோதுதான், என்னை அந்தப் போலீஸ்காரர் பிடித்து, வேனில் ஏற்றினார். 

நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆனால், நான் போதையில் இருந்ததால் சொன்னதை நம்பவில்லை. கட்சிக்காரர்கள் எல்லாம் வந்து சத்தம் போட்டாங்க. பிறகு என் மகளின் திருமணத்தைக் கருத்தில் கொண்டு சின்னதா வழக்குப் போட்டு அனுப்பிட்டாங்க.

மீண்டும் இன்று நேரில் வரச் சொல்லியிருந்தாங்க. நேரில் போனபோது, ரேசன் கார்டு, கட்சி அட்டை எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அனுப்பினாங்க. நான் தப்பு பண்ணல. சூழ்நிலை என்னை அப்படி சித்திரிக்க வெச்சிடுச்சு. உண்மையில் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லைங்க. என்னிடம் வாங்கிய ரேசன் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களைக் கொடுத்தால் எங்களுக்குப் பேருதவியாக இருக்கும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு