Published:Updated:

வேலை தேடுபவர்கள்தான் குறி; போலி ரயில்வே பணி ஆணை; 60 லட்சம் மோசடி! - யார் இந்த சத்திய மூர்த்தி?

ஆன்லைனில் வேலை தேடுபவர்களைக் குறிவைத்து, திருச்சி ரயில்வே பணிமனையில் வேலை வாங்கித் தருவதாக 60 லட்சம் வரை மோசடி செய்த கும்பலை சென்னை ரயில்வே போலீஸார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர்.

திருச்சி ரயில்வே சந்திப்பு
திருச்சி ரயில்வே சந்திப்பு

கடந்த 23-ம் தேதி மாலை, சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்திற்கு அருகே 11 பேர் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர். ரயில்வே போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களின் கையில் திருச்சி ரயில்வே பணிமனையில் வேலைக்கு சேருவதற்கான பணி ஆணைகள் இருந்தன.

வேலைக்கான பணி ஆணை
வேலைக்கான பணி ஆணை

அப்போது அவர்கள், “ரயில்வே துறையில் வேலை இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் வந்தது. அதில் இருந்த நம்பரைத் தொடர்புகொண்டபோது, சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலாஜி உள்ளிட்டோர் சேர்ந்து, திருச்சி ரயில்வேயில் வேலை இருப்பதாக, அதற்குப் பணம் கட்டச் சொன்னார்கள். அவர்கள் கேட்ட பணத்தைத் தயார் செய்து, கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தோம். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு, சிலருக்குப் பணி ஆணை வழங்கினார்கள். மேலும் சிலருக்கு, இன்று பணி ஆணை தருவதாகக் கூறிய சத்தியமூர்த்தி, இங்கு காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்” என்றனர்.

அவர்களில் சிலர் வைத்திருந்த பணி ஆணைகளை போலீஸார் வாங்கிப் பார்த்தனர். அவை, அச்சு அசலாக ரயில்வே போலீஸார் வழங்கும் பணி ஆணையைப் போல இருந்தன. தொடர் விசாரணையில்தான், அவை அனைத்தும் போலி பணி ஆணை என்பதும், அவற்றில் ரயில்வே துறையின் போலி முத்திரைகள் இடப்பட்டுள்ளதும் உறுதியானது.

சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

பணம் கட்டியவர்கள், தாங்கள் ஏமாந்ததை உணர்ந்தனர். அடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், “வேலை வாங்கித் தருவதாகக் கூறி சத்திய மூர்த்தியிடம் எட்டு பேர் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். மேலும் பலரிடம் இந்தக் கும்பல் 60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன தகவலின்படி, சத்தியமூர்த்தியை ரயில்வே போலீஸார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இப்படி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, சத்தியமூர்த்தியின் கூட்டாளி பாலாஜியை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திருச்சி ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக 60 லட்ச ரூபாய் பண மோசடி செய்த கும்பல் சிக்கியிருப்பது, சென்னை மற்றும் திருச்சி ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.