Published:Updated:

`6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 56 வயது நபர் போக்சோவில் கைது!'

கைது செய்யப்பட்ட வெங்கடேசன்
கைது செய்யப்பட்ட வெங்கடேசன்

திண்டிவனம் மகளிர் காவல் துறையினர், போக்சோ வழக்கை பதிவு செய்து திண்டிவனம் துணை காவல் நிலைய சிறையில் அடைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் குடிசை வீடு ஒன்றில் ஆறு மாதங்களுக்கு முன்பு தன் மனைவியுடன் குடியேறியுள்ளார் வெங்கடேசன் (56). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி, மகன்கள் வெளியூரில் வசிக்க மகள் மட்டும் இவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சற்று தொலைவில் வசித்து வருகிறார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில், துணி துவைக்கும் வேலை செய்து வருகிறார் வெங்கடேசனின் மனைவி. வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட வெங்கடேசன்
கைது செய்யப்பட்ட வெங்கடேசன்

அதே பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகனை மட்டும் நெருங்கிய உறவினர் வீட்டில் விட்டு விட்டு, மகளை தங்கள் கவனிப்பில் வைத்து வளர்த்து வந்துள்ளனர். தினமும் காலையில் அந்தப் பெண் குழந்தைக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு, தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவார்களாம். அச்சிறுமி கவனிப்பாரற்று, பாதுகாப்பின்றி அங்குள்ள குழந்தைகளுடன் நாள் முழுவதும் விளையாடி வந்துள்ளார்.

கடந்த 9-ம் தேதியன்று தனியாக இருந்த அந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார் வெங்கடேசன். அன்று இரவுதான் குழந்தை பாதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களுக்குத் தெரியவந்துள்ளது. அதிர்ந்துபோன குழந்தையின் பெற்றோர், நள்ளிரவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மறுதினம் (10.09.2021) காலையில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று குழந்தைக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி அழுது புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, அன்றைய தினமே வெங்கடேசனைக் கைது செய்த திண்டிவனம் மகளிர் காவல் துறையினர், போக்சோ வழக்கை பதிவு செய்து திண்டிவனம் துணை காவல் நிலைய சிறையில் அடைத்துள்ளனர்.

பெங்களூரு: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - 68 வயது பூசாரி கைது

இதுதொடர்பாக திண்டிவனம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவிடம் பேசினோம். "இச்சம்பவம் 9-ம் தேதி மதியம் நடந்துள்ளது. குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்களுக்கு தெரிந்து, இரவு நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து வந்தபோதே எங்களுக்கு தகவல் வந்தது. இரவு நேரத்தில் சென்றால் குழந்தை பயப்படக்கூடும் என்பதால், மறுநாள் (10.09.2021) காலையில் சீருடையின்றி சாதாரண உடையில் சென்று குழந்தையின் வீட்டில் விசாரித்தோம். கதவு கூட இல்லாமல் பாதுகாப்பற்று இருந்தது அந்த வீடு.

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.

குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருகிறாள். பாலியல் ரீதியாக உடலளவில் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. பரிசோதனையின் முடிவு இன்னும் வரவில்லை. குழந்தையின் பெற்றோர்கள் அன்று காலை 6 மணி அளவில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். குழந்தையின் பெற்றோர்களுடைய கவனக்குறைவும் இதில் உள்ளது. கூலி வேலைக்கு செல்லும் இவர்கள், குழந்தையை தனிமையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். தன் மகனை உறவினர் கவனிப்பில் வைத்திருப்பதைப் போல, மகளையும் வைத்திருந்திருக்கலாம். இல்லையேல் தங்களுடனே அழைத்துச் சென்றிருக்கலாம். சிறுகுழந்தை பகல் முழுவதும் தனிமையிலேயே இருந்திருக்கிறாள். அந்த சமயத்தை பயன்படுத்தியே இந்த கொடுமை குழந்தைக்கு நடந்துள்ளது. பொதுவாகவே, தொடர்ச்சியாக வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளிடமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளிடம், பாதுகாப்பான தொடுதல் எது... பாதுகாப்பற்ற தொடுதல் எது... என்ற விழிப்புணர்வை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

பொம்மலாட்ட வீடியோ மூலம் மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு; அரசுப்பள்ளி ஆசிரியையின் புது முயற்சி!

நாங்களும் இதுவரை பெண் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கமளித்து வந்துள்ளோம். வரும் திங்கள் கிழமை அன்று ஆண்கள் பள்ளிகளுக்குச் சென்று அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு