Published:Updated:

`பட்டனைக் க்ளிக் பண்ணுங்க, காஜலைச் சந்திக்கலாம்!' - ரூ.60 லட்சத்தைப் பறிகொடுத்த தொழிலதிபர் மகன்

இரா.மோகன்
உ.பாண்டி

சில பெண்களுடன் அந்த வாலிபர் ஆபாசமாக இருக்கும் மார்பிங் படங்களை மொபைல் போனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் தாங்கள் கேட்கும் தொகையைத் தராவிட்டால் இந்தப் படங்களை வாலிபரின் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம் என்றும் சமூக வலைதளங்களில் பரப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் ரூ.60 லட்சத்தை இழந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை கொல்கத்தாவில் போலீஸார் மீட்டனர். இந்த மோசடி தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஒருவரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்
உ.பாண்டி

ராமநாதபுரத்தில் கான்ட்ராக்ட், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி எனப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் முக்கிய தொழிலதிபர் ஒருவரின் 27 வயது மகனுக்கு நடிகைகள் மற்றும் அழகான பெண்களை வசப்படுத்தி அவர்களுடன் நெருங்கிப் பழகும் மோகம் ஏற்பட்டது. இதற்கு ஏதுவாக சமூக வலைதளங்களில் விரவிக் கிடக்கும் இணையதளங்களில் மூழ்கிக் கிடந்துள்ளார். அந்நேரத்தில் 'லொகார்டோ' என்ற இணையதளம் பக்கத்தில் சினிமா நடிகைகளின் ஆபாச படங்கள் இருப்பதைக் கண்டுள்ளார். மேலும், இது போன்ற நடிகைகளைத் தொடர்புகொள்ள தங்களது மொபைல் எண்ணைப் பதிவிட சொல்லியும் குறிப்பிட்டுள்ளனர்.

இதை நம்பிய அந்த இளைஞர் தனது மொபைல் எண்ணை அந்த இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது மொபைல் போனுக்கு சில நடிகைகளின் படங்கள் வந்துள்ளன. அதில் உள்ள நடிகைகளில் நீங்கள் சந்திக்க விரும்பும் நடிகையின் பெயரை க்ளிக் செய்தால் அதற்குத் தொடர்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும், அதற்கு 50,000 செலவு ஆகும் எனவும், முன் பணமாக ரூ.30,000-த்தைச் செலுத்தவும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சினிமா நடிகைகளின் போட்டோக்களைப் பார்த்து அழகில் சொக்கிய தொழிலதிபரின் மகன், காஜல் அகர்வாலுடன் நெருங்கிப் பழக 'லொகார்டோ' எனும் சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தைப் பதிவு செய்தார். இதற்கான பதிவு கட்டணம் ரூ.50,000-த்தையும் செலுத்தினார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
விகடன்

கேட்ட தொகை உடனே வந்து சேர்ந்ததால்,தொழிலதிபர் மகனின் சபலம், பொருளாதார பின்னணியை மோப்பம் பிடித்த பணம் பறிப்பு கும்பல், தொழிலதிபரின் மகனை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவந்தனர். காஜல் அகர்வால் படப்பிடிப்பில் உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் உங்களைத் தொடர்புகொள்வார் என அவரின் ஆசையைத் தூண்டினர். மோகத்தின் உச்சம் சென்ற தொழிலதிபர் மகனிடமிருந்து சிறுக, சிறுக ரூ.60 லட்சத்தை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது வங்கிக் கணக்கு மூலம் கறந்தனர்.

சில நாள்களுக்குப் பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிலையில் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். இதனால் சுதாரித்த அந்த மோசடி கும்பல், சில பெண்களுடன் அந்த வாலிபர் ஆபாசமாக இருக்கும் மார்பிங் படங்களை மொபைல் போனுக்கு அனுப்பியுள்ளது. மேலும், தாங்கள் கேட்கும் தொகையைத் தராவிட்டால் இந்தப் படங்களை வாலிபரின் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம் என்றும் சமூக வலைதளங்களில் பரப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த வாலிபர் மேலும் சில லட்சங்களை அந்தக் கும்பல் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னரும் அந்த வாலிபரை மோசடி கும்பல் விடாமல் மிரட்டி வந்தது.

கைதான தயாரிப்பாளர் சரவணக்குமார்
கைதான தயாரிப்பாளர் சரவணக்குமார்
உ.பாண்டி

இதனால் இதிலிருந்து மீள முடியாமல் தவித்த அந்த இளைஞர், குடும்பத்தின் பெயர் கெட்டுவிடக் கூடாது எனக் கருதி வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அந்தத் தொழிலதிபரின் குடும்பத்தினர் காணாமல்போனவரை ஊர் ஊராகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் ராமநாதபுரம் போலீஸாரின் உதவியை தொழிலதிபர் நாடியுள்ளார். போலீஸாரும் அந்த வாலிபரை தேடி வந்த நிலையில் தன் தந்தைக்கு போன் செய்த அந்த வாலிபர், தன்னைத் தேட வேண்டாம் எனவும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரது போன் வந்த இடத்தை போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் எடுத்த தீவிர நடவடிக்கையின் விளைவாக அந்த வாலிபர் கொல்கத்தாவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் அழைத்து வரப்பட்ட அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையின்போது தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் மிரட்டப்படுவது குறித்தும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்த வாலிபர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை ஆய்வு செய்த போலீஸார் அது சிவகங்கை மாவட்டம் பாவனாகோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது பெயரில் இருந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சினிமா தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன் என்ற சரவணக்குமார் என்பதும் தெரியவந்தது. மேலும், தயாரிப்பாளர் சரவணக்குமார் கூறியபடி தனது கணக்குக்கு வரும் பணத்தை எடுத்து அவரிடமே கொடுத்து விடுவேன் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமாரை தேடிய போலீஸார், சென்னை அசோக் நகர் பகுதியில் தங்கியிருந்தபோது மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் மகனிடமிருந்து பணம் பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தான் பறித்த பணத்தில் பெரும் பகுதியை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சரவணக்குமாரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை கைப்பற்றிய போலீஸார், சரவணக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா
எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா
உ.பாண்டி

இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா கூறுகையில், ''தேவையற்ற இணையதளங்களைப் பார்ப்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிவுக்குள்ளாகிறது. இது போன்ற செயல்களால் பணம் மட்டும் அல்ல சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. போலீஸாரின் விரைவான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் இணையதள மோசடி கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இதைத் தவிர்க்க இணையதளங்களிலோ, மொபைல் போன்களிலோ மூழ்கிக் கிடப்பதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சரவணக்குமார் மேலும் சிலரிடம் இதுபோன்று மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்குத் துணையாக இருந்த மேலும் இருவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.