அபுதாபி ராயல் குடும்பத்தோடு தொடர்புடையவர் எனக் கூறி, ஆடம்பர ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, 23 லட்ச ரூபாய் பணத்தைக் கட்டாமல், மர்ம நபர் ஒருவர் ஏமாற்றியுள்ள சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

மொஹம்மத் ஷரீப் என்பவர் ஆகஸ்ட் 1-ம் தேதி டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று, அறை எண் 427 ல் தங்கி இருக்கிறார். ஹோட்டலில் வேலை செய்பவர்களிடம், அபுதாபியில் வசிப்பதாகவும், ராயல் குடும்பத்திலுள்ள ஷேய்க் பாலாஹ் பின் சயீத் அல் நகியானிடம் வேலை செய்வதாகவும், தற்போது ஒரு பிசினஸ் விஷயமாக இந்தியாவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

அதோடு அவ்வப்போது, ஹோட்டலில் வேலை செய்பவர்களிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும், தான் யார் என்பதைப் பற்றியும் கதை கதையாய் அளந்து விட்டுள்ளார். இதை நம்ப வைக்க பிசினஸ் கார்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியுரிமை அட்டை, மற்ற சில ஆவணங்களையும் காட்டியுள்ளார்.
இதையெல்லாம் செய்து வந்தவர், நவம்பர் 20- ம் தேதி ஹோட்டல் அறையில் இருந்த வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் முத்து தட்டுக்கள் என பல பொருட்களை களவாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இவர் தங்கியிருந்த நான்கு மாதங்களுக்கான ஹோட்டல் அறை மற்றும் சேவை கட்டணம் 35 லட்சம். 11.5 லட்சத்தை மட்டுமே செலுத்தியவர் மீதி பணத்தைச் செலுத்தாமல் தப்பி ஓடியுள்ளார் என்று கூறியுள்ளனர்.
ஹோட்டலை விட்டுத் தப்பியோடுகையில் ஊழியர்களுக்கு நவம்பர் 20 எனத் தேதியிடப்பட்ட 20 லட்சத்திற்கான காசோலையை அந்த நபர் வழங்கி உள்ளார். டெல்லி போலீஸார் சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து அந்த நபரைத் தேடி வருகின்றனர்.