Published:Updated:

தங்க நகைகளுடன் இடைவிடா நடனம்..! நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளுக்கு கொடுமை

``இரவு நேரத்தில் திடீரென்று எங்களை எழுப்புவார்கள். எங்கள் உடல் முழுவதும் நகைகள் அணிவித்து மேக் அப் போட்டு, நித்தியானந்தாவை போற்றிப் பாடி, நடனமாடி வீடியோ எடுப்பார்கள்."

பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் ஜனார்த்தன ஷர்மா. சில தினங்களுக்கு முன்பு, அஹமதாபாத் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் ஷர்மா. அதில் ``பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது மூன்று மகள்களையும் எங்களது அனுமதி இல்லாமல் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்திற்கு நித்தியானந்தா மாற்றியுள்ளார். மகள்களுடன் எங்கள் தொடர்பையும் துண்டித்துவிட்டார்கள். எனது மகள்களை நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து மீட்டுத் தரவேண்டும்” எனப் புகார் அளித்திருந்தார்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

போலீஸார் உதவியுடன் குஜராத் ஆசிரமத்திலிருந்து 15 வயது மகள் மற்றும் 13 வயது மகனை ஜனார்த்தன ஷர்மா மீட்டுவிட்டார். மூத்த மகள் லோபமுத்ரா (21), இளைய மகள் நந்திதா (19 ) ஆகியோரை மீட்க முடிவில்லை. அவர்கள் எங்கேயிருக்கியிருக்கின்றனர் என்று தெரியவில்லை. இதனால், தன் மகள்களை மீட்க ஜனார்த்தன ஷர்மா குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நித்தியானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் மா பிரியதத்வா மற்றும் மா பிரன்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகள்களை மீட்கக் களமிறங்கியுள்ள ஜனார்த்தன ஷர்மா, ``நித்தியானந்தா பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாலியல் தொல்லை தருவார். அவரால் ஏராளமான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட வேண்டும். ஆசிரமத்தில் எது நடந்தாலும் நித்தியானந்தாவுக்கும் நடிகை ரஞ்சிதாவுக்கும் நிச்சயம் தெரியும்'' என்று குற்றம் சாட்டியுள்ளார். நித்தியானந்தா மீது ஆள் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி ஆசிரமத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை வேதனையுடன் விவரித்துள்ளார். ``கடந்த 2013-ம் ஆண்டு நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தோம். முதல் 4 ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லை. விளையாட்டுகளுடன் காலம் போனது. 2017-ம் ஆண்டு முதல் எங்களை ஆசிரமத்துக்கு நன்கொடை வாங்கும் பணியில் ஈடுபடுத்தினர்.

மதுரை ஆதினமாக சில காலம் இருந்த நித்தியானந்தா
மதுரை ஆதினமாக சில காலம் இருந்த நித்தியானந்தா
`என்ன நடந்தாலும் என் ஆன்மிகப் பணி தொடரும்!’- வெளிநாட்டுக்குத் தப்பிய நித்யானந்தா

ஆயிரங்களில் நன்கொடை வாங்கக் கூடாது. லட்சங்கள் , கோடிகளில்தான் வாங்க வேண்டும். ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 8 கோடி வரை நன்கொடை வாங்க எங்களை பயன்படுத்தினர். கண்களை பார்த்தே ஒருவரின் மனநிலையை அறிந்துகொள்ளும் வித்தையை எங்களுக்கு நித்தியானந்தா சொல்லி கொடுத்துள்ளார். அந்த வித்தையை நன்கொடை திரட்ட பயன்படுத்துவோம். பணமாக வாங்கவேண்டும் அல்லது நிலமாக நன்கொடை பெற்றுவர வேண்டும். அப்படி இதுவரை 700 ஏக்கர் நிலங்கள் நன்கொடையாகப் பெற்றுவந்திருக்கிறோம். இரவு நேரத்தில் திடீரென்று எங்களை எழுப்புவார்கள். எங்கள் உடல் முழுவதும் நகைகள் அணிவித்து மேக் அப் போட்டு, நித்தியானந்தாவை போற்றிப் பாடி, நடனமாடி வீடியோ எடுப்பார்கள். என் மூத்த சகோதரியை இதுபோல பல முறை வீடியோ எடுத்துள்ளனர். நித்தியானந்தாவின் உத்தரவின் பேரிலேயே இதுபோன்ற வீடியோக்கள் எடுக்கப்பட்டன.

நித்தியானந்தா
நித்தியானந்தா
ஆசிரமத்தில் ரெய்டு... 2 பெண் உதவியாளர்கள் கைது! - நித்தியானந்தா விவகாரத்தில் வேகம்காட்டும் போலீஸ்

எங்கள் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டுமாறு கூறி வீடியோ எடுப்பார்கள். நித்தியானந்தாவின் நிர்பந்தத்தாலேயே எனது சகோதரி என் பெற்றோரை திட்டினார். அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளனர். என் பெற்றோரை திட்ட நான் மறுத்துவிட்டேன். என்னை பரிகாரம் என்ற பெயரில் அறைக்குள் 2 மாதங்களாக அடைத்து வைத்திருந்தனர். ஆசிரமத்தில் நித்தியானந்தாவை போற்றி போற்றிப் பாட வேண்டும்; அவர் புகழைப் பேச வேண்டும். அங்கிருப்பவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாது'' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், ``நான் தற்போது இமயமலையில் இருக்கிறேன். பெரிய ஆன்மீக செயல்களை நிறைவேற்றுவதற்காக இங்கே தங்கியிருக்கிறேன். என் ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு எந்த தொந்தரவும் அளிப்பதில்லை. குழந்தைகளில் பெற்றோர்களும் ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். ஆசிரமத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்'' என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

நித்தியானந்தா என்றாலே நித்தம் நித்தம் பிரச்னைதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு