Published:Updated:

ஒரு சலனம்... ஒரு சலனமின்மை... - இரு துயரங்களின் பின்புலம்!

மரணம்
மரணம்

அவன் பொண்டாட்டிக்குக் குழந்தை பொறந்து ஏழு மாசம்தான் ஆகுது. குழந்தைக்கு `தீக்சா’ன்னு பேரு. அது அப்பான்னு வாய்திறந்து கூப்பிடறதுக்குள்ள உசுர விட்டுட்டான்

"அப்துல் லத்தீப்பிற்கும் ஸஜிதாவிற்கும் கல்யாணம் முடிஞ்சு அஞ்சு வருஷமா குழந்தை இல்லாம இருந்தது. ஒரு குழந்தைக்காக வேண்டியவர்களுக்குக் கடவுள் இரண்டு குழந்தைகளாகக் கொடுத்தார். இரட்டையர்களான ஃபாத்திமாவும் ஆயிஷாவும் ஒருத்தர்மேல ஒருத்தர் ரொம்பப் பாசமா இருந்தாங்க. ஃபாத்திமா ஐ.ஏ.எஸ் ஆகி மக்கள் சேவை செய்யணும்னு ஆசைப்பட்டாள், ஆயிஷா திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் படிக்கிறாள். ஃபாத்திமா இறந்ததில இருந்து மொத்தக் குடும்பமும் நொறுங்கிப்போய்டுச்சு" என்று கண்ணீர்வடிக்கிறார் ஃபாத்திமாவின் சித்தி பிஜிதா.

ஃபாத்திமாவுடன் பிறந்த ஆயிஷாதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமான மொபைல்போன் பதிவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறார், "நாங்க ட்வின்ஸ். எங்களுக்கு அடுத்ததாக மர்யம் என்ற தங்கை இருக்கிறாள். ஃபாத்திமாவும் நானும் பத்தாம் கிளாஸ் வரைக்கும் ஆக்ஸ்போர்டு பள்ளியில ஒரே கிளாஸ்ல படிச்சோம். 11-ம் வகுப்புல நான் சயின்ஸ் குரூப் எடுத்தேன். ஃபாத்திமா ஹியூமானிட்டி படித்தாள். ஐ.ஏ.எஸ் ஆகும் ஆசையில் ஐ.ஐ.டி-யில் படிக்க நுழைவுத்தேர்விற்குச் சொந்த முயற்சியில் தயாரானாள். நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்து ஜூலை மாதம் ஐ.ஐ.டி-யில் சேர்ந்தாள். அடிக்கடி அப்பா ஐ.ஐ.டி-க்குப் போய் ஃபாத்திமாவைப் பார்த்துவிட்டு வருவார். போன மாதம் (அக்டோபர்) ஒன்றாம் தேதியில இருந்து 8-ம் தேதி வரை ஃபாத்திமா விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தாள். திரும்பிச் செல்லும்போது கொஞ்சம் சோகமாக இருந்தாள். எங்களை விட்டுப் பிரிந்து செல்வதால் அப்படி இருக்கிறாள் என நினைத்தோம்.

ஒரு சலனம்... ஒரு சலனமின்மை... - இரு துயரங்களின் பின்புலம்!

கடந்த நவம்பர் 7-ம் தேதி இரவு என்னிடம் வீடியோ காலில் பேசினாள். அப்போதும் சோகமாகவே இருந்தாள். நவம்பர் 9-ம் தேதி காலை 11.30 மணியளவில் ஹாஸ்டல் வார்டனான பேராசிரியை லலிதாதேவி எங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஃபாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார். நாங்கள் பதறியடித்துக் கொண்டு சென்னை சென்றோம். போய்ச் சேர இரவாகிவிட்டதால் உடலைக் காலையில்தான் பார்க்கமுடியும் என ஐ.ஐ.டி-யைச் சேர்ந்தவர்கள் சொன்னார்கள்.

அடுத்தநாள் நான் கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்குச் சென்றேன். அங்குதான் ஃபாத்திமாவின் மொபைல் போன் இருந்தது. அதை ஆன் செய்தபோது ஸ்கிரீன் சேவரில் தன் மரணத்திற்கு பேராசிரியர் சுதர்சன் பத்பநாபன்தான் காரணம் எனப் பதிந்து வைத்திருந்தாள். மேலும் மொபைலில் சுமார் 20 பக்கங்களில் சில விவரங்களை எழுதி வைத்திருந்தாள். எல்லா ஆவணங்களையும் நான் எனது மொபைலுக்கு மாற்றினேன். அவற்றை கோர்ட்டில் ஒப்படைப்போம். ஃபாத்திமாவை மென்டல் டார்ச்சர் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. யாரோ அவளை மிகவும் பயமுறுத்தியிருக்கிறார்கள். வேறு என்ன தொந்தரவுகள் இருந்தது என்று முழுமையாகத் தெரியவில்லை.

சென்னை போலீஸ் எல்லாத் தற்கொலை வழக்குகளையும் அணுகுவதுபோலவே இதையும் அணுகுகிறது. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள். அவளை அந்த முடிவிற்கு யாரோ தள்ளியிருக்கிறார்கள் என்பது குறித்துப் பேச ஒருவரும் தயாராக இல்லை. ஐ.ஐ.டி-யில் பிரஷரும், டார்ச்சரும் அதிக அளவில் இருந்திருக்கிறது. எத்தனையோ ஃபாத்திமாக்கள் இறந்திருக்கிறார்கள், முதன்முறையாக இந்த ஃபாத்திமாவின் மரணம் பெரிய அளவில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என உருக்கமாகத் தொடர்கிறார் ஃபாத்திமாவின் சகோதரி ஆயிஷா.

> சிந்து ஆர், மோகன் இ எழுதிய இந்தச் செய்திக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > கனவைக் கலைத்த கல்வி வளாகம்! https://www.vikatan.com/news/death/chennai-iit-student-fathima-suicide-issue

*

‘கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர் மரணம்’ என்ற செய்தியை நாம் அடிக்கடி படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம். ஆனாலும் சமூகத்தில் எந்தச் சலனமும் ஏற்படவில்லை. சென்னையின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் சாக்கடைக்கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காகக் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய ரஞ்சித்குமார் விஷவாயுவால் தாக்கப்படுகிறார். அவரைக் காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய அவரின் அண்ணன் அருண்குமார் தம்பியைக் காப்பாற்றிவிட்டு விஷவாயுவால் மூச்சுத்திணறிக் கழிவுநீர்த்தொட்டிக்குள்ளேயே மூழ்கி இறந்து போகிறார். இந்த வருடத்தில் தமிழகத்தில் மட்டும் இது இருபதாவது மலக்குழி மரணம்.

சென்னைத் திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியில் இருக்கிறது அருண்குமாரின் வீடு. குறுகலான தெருக்களில் நெருக்கியடித்துக் கட்டப்பட்ட அந்த வீடுகளில் குடியிருக்கும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இருட்டு கவிந்துகிடக்கிற ஒற்றை அறைக்குள்தான் அருண்குமாரின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, மனைவி, குழந்தை என ஆறுபேர் வசிக்கிறார்கள். அறையின் ஓர் ஓரத்தில் சமையலறை. மற்றொரு பக்கம் வீட்டுச் சாமான்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சமிருக்கும் சின்ன இடத்துக்குள் முடக்கப்பட்ட வாழ்க்கை.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

ஒரு சலனம்... ஒரு சலனமின்மை... - இரு துயரங்களின் பின்புலம்!

அழுதழுது ஓய்ந்திருந்த அருண்குமாரின் அம்மா அம்சவள்ளியிடம் தயக்கத்துடன் பேசினேன். "குடும்பத்தைக் காப்பாத்த அண்ணன், தம்பி ரெண்டு பேரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அருண் பத்தாவதுக்கு மேல படிக்கல. அன்னைக்குக்கூட ரோடு போடுற வேலைக்காகதான் கூட்டிட்டுப் போறதா சொன்னாங்க. போன இடத்துல சாக்கடைத் தொட்டிக்குள்ள இறக்கிவிட்டிருக்காங்க. அவன் பொண்டாட்டிக்குக் குழந்தை பொறந்து ஏழு மாசம்தான் ஆகுது. குழந்தைக்கு `தீக்சா’ன்னு பேரு. அது அப்பான்னு வாய்திறந்து கூப்பிடறதுக்குள்ள உசுர விட்டுட்டான்" என்று மீண்டும் கதறுகிறார் அம்சவள்ளி.

சிணுங்கிக்கொண்டிருக்கும் தீக்சாவுக்குப் பால் கொடுத்தபடி, ஆறாத துயரத்துடன் அமர்ந்திருந்தார் அருணின் மனைவி சுகன்யா. "அருணும் நானும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ். அஞ்சு வருஷம் காதலிச்சோம். ரெண்டு வருஷத்துக்கு முன்ன கல்யாணம் செஞ்சுகிட்டோம். கல்யாணத்துலயும் சரி, சமீபத்துல நடந்த சீமந்தத்துலயும் சரி, நாங்க போட்டோவே எடுத்துக்கலை. வர்ற ஏப்ரல் மாசம் தீக்சாவுக்கு ஒரு வயசாகும்போது மண்டபம் புடிச்சுப் பெருசாக் கொண்டாடலாம், குடும்பமா போட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னான். பிள்ளை பெரிசாயிட்டதால தனியா வீடு பாக்கலாம்ன்னு இருந்தோம். ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டலாம்னு திட்டம் போட்டிருந்தான். தீக்சா ஒரு நிமிஷம் அப்பா இல்லாம இருக்கமாட்டா. அவன் மேல படுத்துதான் தூங்குவா..." மகளை அணைத்துக்கொண்டு அழுகிறார் சுகன்யா.

அண்ணனைக் கண்முன்னேயே பறிகொடுத்த துயரம் படிந்திருக்கிறது தம்பி ரஞ்சித் முகத்தில். விஷவாயு தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவர் இன்னமும் மீளவில்லை. கண் எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி, நுரையீரலில் பிரச்னை எனச் சுற்றிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான சூழலும் இல்லை. அருணின் தாயார் அம்சவள்ளியும் துப்புரவுப் பணியாளர். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளி. தற்போது மூச்சிரைப்புப் பிரச்னையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

> ஐஷ்வர்யாவின் செய்திக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்! https://www.vikatan.com/government-and-politics/environment/sanitation-workers-death-should-be-stopped-without-any-second-thoughts

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு