Published:Updated:

திருச்சி: `6 மாத கர்ப்பம்... போலீஸ் நடவடிக்கை எடுக்கல!' - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பெண்

போராடும் இளம்பெண்
போராடும் இளம்பெண்

மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாதிக்கப்பட்ட பெண். புகாரின் பேரில் ராம்கி மீது போக்ஸோ உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

``என்னைக் காதலித்து கர்ப்பம் ஆக்கியவனை என்னோடு வாழ வையுங்கள் இல்லையென்றால் அவன் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல்
காதல்
மாதிரிப் படம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர், தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான் பட்டியைச் சேர்ந்த ராம்கி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பல நாள்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதன் விளைவாகக் கர்ப்பமானார். இதனை மறைக்க முடியாமல், 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள், யார் காரணம் என விசாரித்துள்ளனர்.

Vikatan

உறவினர் ராம்கியைக் காதலிப்பதாகவும் அவரிடம் நெருங்கிப் பழகியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதையடுத்து, ராம்கிக்கே மகளைத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, ராஜாளிப்பட்டி கிராமத்திற்குச் சென்ற பெண்ணின் பெற்றோர், ராம்கியின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளதோடு, தங்கள் மகள் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அப்போது, ராம்கியின் பெற்றோர், திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பெண்ணைத் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியதோடு, பெண்ணின் பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் ராம்கி மீது போக்ஸோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இளம்பெண்
இளம்பெண்

கடந்த மே மாதம் 29-ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை ராம்கியைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண், பெற்றோருடன் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர்களிடம் மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராம்கியைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டார். காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணைக் கைவிட்ட ராம்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாலியல் தொல்லை; தங்கை மர்ம மரணம்! -தி.மு.க நிர்வாகி செயலால் நீதி கேட்கும் சகோதரர்
அடுத்த கட்டுரைக்கு