Published:Updated:

`என் புகைப்படம், வீடியோவை அகற்றுங்கள்; திருமணம் தடைபடுது!' - கோவை போலீஸில் புகார் கொடுத்த ஸ்ருதி

எம்.புண்ணியமூர்த்தி

`சமூக வலைதளங்களில் உள்ள எனது வீடியோக்கள், புகைப்படங்களை அகற்ற வேண்டும்' என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் நடிகை ஸ்ருதி.

Actress Shruti
Actress Shruti

கோவையில் திருமண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும், வெளிவராத திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்ருதி, சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் தவறாகச் சித்திரிக்கப்படுவதாகவும் அதனால், தனது திருமணம் தடைபடுவதாகவும் கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஸ்ருதி. இவர் நடித்த, `ஆடி போனா ஆவணி', `சோழவம்சம்' ஆகிய இரண்டு படங்களும் வெளிவராத சூழலில், கடந்த ஆண்டு திருமண மோசடி வழக்கில் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். ` திருமணத்துக்கு மணமகன் தேடுவதாகத் தனது புகைப்படத்தை வரன்தேடும் இணையதளங்களில் பதிவுசெய்து, அந்த புகைப்படங்களில் மயங்கி, தன்னைத் தொடர்புகொள்ளும் பணக்கார இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டினார்' என்பதே ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகார்.

Vikatan
Shruti
Shruti

இந்நிலையில், நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்துக்கு புகார் மனுவோடு வந்திருந்தார் சுருதி. போலீஸ் அதிகாரியிடம் மனு கொடுத்த கையோடு செய்தியாளர்களிடம் பேசியவர், `` நான் கைதுசெய்யப்பட்டபோது ஒளிபரப்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், சமூக வளைதளங்களில் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக என்னுடைய இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், மிகுந்த மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

எனது புகைப்படங்களைத் தவறாக சித்திரித்து பரப்புவதோடு மட்டுமல்லாமல், எனது குடும்பத்தினர் குறித்தும் அசிங்கமான வகையில் தகவல்களைப் பரப்புகின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்நிலையில், சமூக வலைதளங்களில் உள்ள எனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, போலீஸாரிடம் மனு அளித்துள்ளேன்" என்றார்.