Published:Updated:

`தவறான நட்பு; நேரடிப் பகை!' - சவால்விட்ட அ.தி.மு.க பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

சாந்தாவின் உறவினர் பெண்ணோடு ரமேஷுக்கு இருந்த தவறான நட்பையும் கண்டித்தார். ரமேஷ் லாட்டரி சீட் விற்பனை செய்து வந்ததையும் காவல் துறைக்குத் தெரிவித்தார். இதனால் ரமேஷுக்கும் சாந்தாவுக்கும் நேரடி பகை மூண்டது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணித் தலைவியாக இருந்தவர் சாந்தா. இவருடைய சொந்த ஊர் ஆட்டையாம்பட்டி சந்தியூர். இவரின் மருமகள் பனமரத்துப்பட்டி பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். அவரைக் கூட்டி வருவதற்காக நேற்று மாலை 6:00 மணிக்கு சந்தியூரிலிருந்து பனமரத்துப்பட்டிக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார், சாந்தா.

சாந்தா
சாந்தா

அப்போது சோழியன் காடு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் சாந்தாவை வழிமறித்தார். சாந்தா ஸ்கூட்டரை நிறுத்தி விசாரிப்பதற்குள் சாந்தாவை கத்தியால் குத்திவிட்டார் அந்த நபர். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார். இதையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் மற்றும் மல்லூர் காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து, ஆட்டையாம்பட்டி சந்தியூர் மக்களிடம் கேட்டபோது, ``ஆட்டையாம்பட்டி சந்தியூரைச் சேர்ந்தவர் மணி. இவரின் மனைவி சாந்தா வயது 50. இவர் பனமரத்துப்பட்டி அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணித் தலைவியாகவும் பெரமனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க இயக்குநராகவும் இருக்கிறார். வீட்டில் மரவள்ளிக்கிழங்கு மாவு வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஆண்களைப் போல செயல்படக் கூடியவர். தவறு நடந்தால் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்கும் துணிச்சல்மிக்கவர்.

கடந்த முறை சந்தியூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சாந்தாவின் அண்ணன் மகன் காளியப்பன். தற்போது சந்தியூர் பஞ்சாயத் தலைவராக இருப்பவர் சாந்தாவின் பங்காளியான முருகேசன். சாந்தா குடும்பத்துக்கும் முருகேசன் குடும்பத்துக்கும் நீண்டநாள் பகை இருந்து வருகிறது. சமீபத்தில் சந்தியூரில் ஒரு ஆட்டோவைக் காணவில்லை. அதை பஞ்சாயத்து தலைவர் முருகேசனின் தம்பி மகன் ரமேஷ் திருடியதாகப் பேச்சு வந்ததையடுத்து சாந்தா மல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

மேலும், சாந்தாவின் உறவினர் பெண்ணோடு ரமேஷுக்கு இருந்த தவறான நட்பையும் கண்டித்தார். ரமேஷ் லாட்டரி சீட் விற்பனை செய்து வந்ததையும் காவல் துறைக்குத் தெரிவித்தார். இதனால் ரமேஷுக்கும் சாந்தாவுக்கும் நேரடி பகை மூண்டது. தாதகாப்பட்டியிலிருந்து ஆட்களைக் கூட்டி வந்து ரமேஷை முடிப்பதாகச் சாந்தா சவால்விட்டார். அதனால் ரமேஷ் முந்திக்கொண்டு சாந்தாவைக் கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் அனைவருமே உறவு முறையைச் சேர்ந்தவர்கள்'' என்றார்கள்.

இதுபற்றி மல்லூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, ``தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளியை இன்று மாலைக்குள் பிடித்து விடுவோம். தற்போது அதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு