Published:Updated:

`எல்லா பேரிடர் காலங்களுக்குப் பின்னும் மனிதக் கடத்தல் அதிகரிக்கும்!’- அதிர்ச்சிப் பின்னணி

மனிதக் கடத்தல்
மனிதக் கடத்தல்

``வீட்டில் வேலை, தத்தெடுப்பு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு உட்பட தவறான வாக்குறுதிகள் கொடுத்து அழைத்துச் செல்வது என்று எல்லாமே மனித கடத்தலின் வேறு பரிமாணங்கள்தான்.”

உலகளவில் மனிதக் கடத்தல் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனிதக் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அதாவது, மனிதக் கடத்தல் என்பது உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோர் இந்த மனிதக் கடத்தலில் பாதிக்கப்படுகின்றனர். கடுமையான சட்டங்களை உலக நாடுகள் கொண்டு வந்தாலும், மனிதக் கடத்தல் தொடர்பான புள்ளி விபரங்களின்படி கடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன.

இந்த நிலையில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் பொருட்டும் மனிதக் கடத்தலுக்கு எதிரான நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில், மனிதக் கடத்தலில் சிக்கி கொத்தடிமையாக இருந்த ஒருவரின் கதையைப் பார்ப்போம்.

முருகேசன்
முருகேசன்

முருகேசன் என்பவர் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 13 வயதாக இருக்கும்போது மனிதக் கடத்தலுக்கு ஆளாகியுள்ளார். ``வீடு பிரச்னை இருந்ததால், கடன் வாங்கி வேலை செய்ய நினைச்சோம். அப்போ, எதார்த்தமாகக் கரும்புத் தோட்ட முதலாளி ஒருவர் வந்து பணம் தருவதாகச் சொன்னார். கடனை அடைக்க அவருக்கான தோட்டத்துல தங்கி வேலை செய்யணும் அப்படிணும் சொன்னார். வீடு கட்டி முடிச்சதும் எங்களைக் குடும்பத்துடன் வேலைக்கு இழுத்துக்கிட்டுப் போனாரு. சுத்தி கரும்புத் தோட்டம் இருக்கும். நடுவுல நானும் அப்பா, அம்மா, அக்கா, அக்காவோட குடும்பம் எல்லோரும் தங்கி இருந்தோம். காலையில் 4 மணிக்குப் போனால் 8 மணி வரை வேலை செய்வோம். ஒரு நாள் கர்ப்பிணியாக இருந்த அக்காவுக்கு பிரசவ வலி வந்துச்சு. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போகக்கூட அவர் சம்மதிக்கல. அவருக்குத் தெரியாம கூட்டுக்கிட்டுப்போய் பிரசவம் பாத்தோம். அதுக்கப்புறம் காசு, சாப்பாடு எதுவும் தர மாட்டாரு” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

உ.பி: `பணத்துக்காகக் கடத்தல்; காவலர்களின் அலட்சியம்’ - அதிரவைத்த இளைஞர் கொலை

நல்லது கெட்டதுக்குகூட எங்கள அனுப்ப மாட்டாரு என்று தொடர்ந்து பேசிய முருகேசன், ``ஒருதடவை உறவுக்காரங்க இறந்துட்டாங்க போகணும்னு சொன்னோம். நீங்க போனா உயிர் வந்திடுமானு கேட்டாரு. உடலால மட்டுமல்ல மனசாலயும் ரொம்ப கஷ்டப்பட்டோம். கடன் அப்படின்ற பேருல கூட்டிக்கிட்டு போவாங்க. கடன் முழுசா அடைஞ்ச பிறகும் விட மாட்டாங்க. 13 வயசுல போனதால என்னோட படிப்பும் போச்சு. 19 வயசுல திரும்ப வந்தேன். இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சு ஒருநாள் ஆர்.டி.ஓ உட்பட எல்லோரும் ரெய்டு வந்தாங்க. எங்கள காப்பாத்தி வெளியே கூட்டிக்கிட்டு வந்தாங்க. வெளிய வந்தப்புறம் நல்ல வேலைல இருக்கேன். கடத்திக்கிட்டு போய் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களின் நலவாழ்வு சங்கத்தின் தலைவராக இருக்கேன். இப்போதுவரை பலரையும் மீட்டுக்கிட்டு வந்துருக்கேன்” என்றும் தெரிவித்தார்.

மனிதக் கடத்தல்
மனிதக் கடத்தல்
Twitter

மனிதக் கடத்தல் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் தேவநேயன் நம்மிடம் பேசும்போது, ``மனித கடத்தல் என்பதன் வரையறையை விரிவாகப் பார்க்க வேண்டும். சினிமாவில் வருவதுபோல நிஜத்தில் கடத்தல் என்பது இருக்காது. வீட்டில் வேலை, தத்தெடுப்பு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு உட்பட தவறான வாக்குறுதிகள் கொடுத்து அழைத்து செல்வது என்று எல்லாமே மனித கடத்தலின் வேறு பரிமாணங்கள்தான். நம்மை கடத்திச் செல்கிறார்கள் என்றும் கொத்தடிமைகளாக வைக்கப் போகிறார்கள் என்றும் அவர்களுக்கே தெரியாது. மேற்சொன்ன சம்பவம்கூட கடத்தலோடு தொடர்புடைய கொத்தடிமைத்தனம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடத்தலை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இப்படியான கடத்தல் சம்பவங்களில் பல கோடி ரூபாய் வரை புழங்கும் என்பதும் கவனிக்கத்தக்கது” என்றார்.

எல்லாவிதமான பேரிடர் காலங்களுக்குப் பிறகும் மனிதக் கடத்தல் அதிகளவில் இருக்கும் என்று குறிப்பிட்ட தேவநேயன், ``பேரிடர் காலங்களில் பொருளாதார இழப்புகள் மிகப்பெரிய அளவில் ஏற்படும். ஆனால், தற்போது ஏற்பட்டிருப்பது மிகவும் கொடூரமானது. இந்தநிலையில், வாழ்வாதாரத்தை தேடி மக்கள் பலரும் நகர்வார்கள். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி மனிதக் கடத்தலில் ஈடுபடுவார்கள். எங்கப்போறோம், என்ன செய்யப்போறோம் என எதுவும் அவர்களுக்குத் தெரியது. பல பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள், தங்களது படிப்பை நிறுத்துவார்கள். அவர்களையும் எளிதில் கடத்திச் செல்வார்கள். வீட்டுக்குத் தெரிந்தே அவர்களது அறியாமையைப் பயன்படுத்திக் கடத்துவார்கள். பொருளாதாரம் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. அடுத்து உள்ளூரில் வாழ்வாதாரம் இல்லாமையாலும் மனிதக் கடத்தல் ஏற்படும். குறிப்பிட்ட மாநகரங்களில் மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்துவதால் வரும் சிக்கல்தான் இது” என்றார்.

தேவநேயன்
தேவநேயன்

தொடர்ந்து அவர் பேசும்போது, ``புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பெரும்பாலும் இந்த மனிதக் கடத்தலில்தான் அடங்குவார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விபரங்களை அந்ததந்த மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்படுவதில்லை. அப்போது, சரியான முறையில் அழைத்து வராதது, மனித கடத்தலின் கீழ்தான் வரும். ஊரடங்கால் எவ்வளவு தொழிலாளர்கள் நடந்து சென்றார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் யாரிடம் உள்ளது? யாரிடமும் கிடையாது. ஆடு, மாடுகளைப்போல அவர்களை நடத்துகிறார்கள். சப்பாத்தி மாவும் உருளைக்கிழங்கும் அவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று நினைகிறவர்களின் மனநிலை மிகவும் கொடூரமானது. எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரும்போது, அவர்களுக்கான ஊதியம், சமூக பாதுகாப்பு என எல்லாவற்றையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வடமாநில மக்களின் மீதான சுரண்டலையும் கேள்வி கேட்க வேண்டும். பல விஷயங்களையும் கருத்தில்கொண்டு செயல்பட்டால் மட்டுமே மனிதக் கடத்தலைத் தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

கர்நாடக ஸ்வீட் குடோன் முதல் ஹைவேஸ் லாரி வரை... கடத்தப்பட்டு மீண்டு வந்தவரின் அனுபவங்கள்!
அடுத்த கட்டுரைக்கு